வந்தவாசி கவி இணையரின்
இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை
+ 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று
வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள் அருவினை
அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில்
வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி,
மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று
அருவினை புரிந்துள்ளனர்.
2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 – 11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் அதிக மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
மு.வெ.நிலாபாரதி, தமிழ் -195, ஆங்கிலம் –
183, இயற்பியல் – 197, வேதியியல் – 200, கணிதம் – 198, உயிரியல் – 196 என
மொத்தம் 1169 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மு.வெ.அன்புபாரதி, தமிழ் -191, ஆங்கிலம் –
188, இயற்பியல் – 197, வேதியியல் – 195, கணிதம் – 199, உயிரியல் – 195 என
மொத்தம் 1165 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம்
பிடித்துள்ளார்.
கவிஞர்கள் மு.முருகேசு, அ.வெண்ணிலா இந்த இரட்டையர்களின் பெற்றோர் ஆவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மு.வெ.அன்புபாரதி 495 மதிப்பெண்களும், மு.வெ.நிலாபாரதி 491 மதிப்பெண்களும் பெற்று, செய்யாறு கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு முடிவு குறித்து
அவர்களிடம் கேட்டபோது, “இருவருமே மருத்துவம் படிக்கும் எண்ணத்தில்
இருக்கிறோம். அதற்காகக் கடந்த வாரம் நடைபெற்ற
தேசியத்தகுதி-நுழைவுத்தேர்வு(NEET) -ஐ எழுதியுள்ளோம். மாநிலப்
பாடத்திட்டத்தில் படித்த எங்களுக்கு, ம.ப.க.வா(CBSC) பாடத்திட்டத்தின்
அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொள்வதில் சற்றுக் கடினமாக
இருந்தது. ஆனாலும், முயற்சி செய்து எழுதியுள்ளோம். அதிலும் நாங்கள் வெற்றி
பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.” என்றனர்.
தமக்கை செல்வி மு.வெ.கவின்மொழி வழியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மணிகளுக்குப் பாராட்டுகள்!
பெற்றோர்க்கும் பள்ளியினருக்கும் வாழ்த்துகள்!
– வந்தை அன்பன்