சனி, 18 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 43: சொல்லடிப்போம் வாங்க! (4)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி

சொல்லடிப்போம் வாங்க! (4)

இனிய அன்பர்களே!

பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம்.

அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத் திறப்பதற்காகக் கர்நாடகத் தமிழர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. திருவள்ளுவர் பால் கன்னட மக்களுக்குப் பகை ஏதும் இல்லை. ஆனால் கன்னட இனவெறியர்களுக்கு அவர் தமிழர் என்பது ஒன்றே போதும். அதாவது இப்போது காவிரியில் உரிமைப் பங்கு கேட்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முப்பாட்டன் என்பதால்தான் பகை! இதற்கு மாறாக எளிய கன்னட மக்கள் “வள்ளுவர் சாமி” என்று போற்றி வணங்குவதைத் தாய்த் தமிழ் செங்கல் நடைப்பயணத்தின் போது கண்டேன்.

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் பல முறை பெங்களூரு வந்துள்ளேன். கடைசியாக, ஈராண்டுக்கு மேலிருக்கும், இங்குள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினேன். தமிழர்களும் கன்னடர்களும் சேர்ந்து நடத்தும் மகளிர் கல்வி அமைப்பு (சாவித்திரிபா பெயரில் என்று நினைவு) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்திருந்தேன். கருநாடகத் தமிழ்ச் சங்கத்தில் ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன்.

பாவலர் அறிவுமதியின் ‘குப்பி கடித்த புலிப்பல்’ வெளியீட்டுக்காக அறிவுமதி, சுபவீ, அருள்மொழி… உட்பட நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தோம். அன்று தோழர் கொளத்தூர் மணியும் எதிர்பார்க்கப்பட்டார். ஏனோ வரவில்லை. ஆனால் எல்லோருமே அவரையும் புலிகளின் ஆய்தப் போராட்டத்துக்கு அவர் செய்த ஆக்கப் பங்களிப்பையும் சுட்டிப் பேசினர். 

கருநாடகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் அண்ணாச்சியின் இராசாசி நகர் வீட்டில் தங்கியிருந்தோம். இதே வீட்டில்தான் தலைவர் பிராபாகரன் (சார்க்கு மாநாட்டுக்கு வந்த செயவர்த்தனாவுடன் பேசி முடிப்பதற்காக என்று சொல்லி அழைத்து வரப்பட்ட போது) தங்கினார்.

பிராபகரனின் அந்த பெங்களூரு பயணம் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியும்தானே? பிராபகரன் ஏற்றுக் கொண்டால் அவரை யாழ்ப்பாணத்துக்கு முதலமைச்சராக்கி விட அதிபர் செயவர்த்தனா முன்வந்தாராம். அதற்காக அவர் பிராபகரனைச் சந்திக்க ஏற்பாடு செய்ய எம்ஞ்சிஆரும் பண்ருட்டி இராமச்சந்திரனும் பெங்களூரு வந்து விட்டார்களாம். “பிராபகரன் முதலமைச்சர் ஆனால் என்ன?” என்று எம்ஞ்சிஆரும் கேட்டாராம். “நாங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம், முதலமைச்சர் பதவிக்காக அல்ல” என்று பிரபாகரன் தெளிவாக்கினாராம்.

தமிழ்நாட்டில் பிராபகரன் படத்தை போட்டுக் கொண்டே முதலமைச்சர் பதவிக்கு அலைகிற யாரைப் பார்த்தாலும் மேற்கண்ட பெங்களூரு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் போல் வருங்கால முதலமைச்சர் பதவியும் உண்டு. இரண்டு பதவிகளுக்குமே சரியான போட்டி! ‘வருங்கால முதலமைச்சர்’ கனவு மெய்ப்படத் தலைவர் பிராபாகரனின் பெயரையோ படத்தையோ பயன்படுத்துவது எப்படிப்பட்ட செயல் தெரியுமா? பீடி பற்ற வைக்கத் திருவிளக்கைப் பயன்படுத்துவது போன்றது. கடப்பாரையால் காது நோண்டும் முயற்சி என்றும் வண்ணிக்கலாம்.

பெருந்தொற்றுக் காலத்தில் பெங்களூர் வரவே இல்லை. அதற்கு முன்பும் இனம்புரியாத பெங்களூரு குளிரும் இனிமையான தமிழ் அன்பர்களும் கண்டு பல காலம் ஆகியிருந்தது. கடைசியாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் சண்முகம் இல்லத் திருமணம் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வந்திருந்தேன். 

பெங்களூருவிலும் மைசூருவிலும் தமிழ்ச் சங்கங்கள் உயிர்ப்புடன் செயல்படக் கூடியவை. ஆனால் காவிரிக் கலவரத்தின் போது ஏற்பட்ட பட்டறிவைக் கணக்கில் கொண்டு கருநாடகத் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கமாகக் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நிறுவப்பட்டது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் இயக்கம் இரண்டாகப் பிளவுற்றது. சிறிது காலம் இரு பிரிவுகளும் ஒரே பெயரில் இயங்கி வந்தன. ஒரு பிரிவினரின் அழைப்பின் பேரில் நான் பெங்களூரு வந்த போது மறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரண்டாம் பிரிவினரிடம், “நீங்கள் அழைத்தாலும் வருகிறேன்” என்று சொல்லி விட்டேன். அவ்வாறே அந்த ஆண்டு அவர்கள் நடத்திய மாவீரர் நாளில் கலந்து கொண்டேன். இரு பிரிவுகளும் ஒன்றுபட்ட, மீண்டும் ஒரே இயக்கமாக வேண்டும் என்பதை மட்டும் பலருள் ஒருவனாக நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். விரைவில் இரு பிரிவுகளும் ஒன்றுபட்டு விட்டன. ஒரே இயக்கமாக கருநாடகத் தமிழ் மக்கள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பயணம். அவர்களும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாள் தள்ளி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள். 

ஒரு நாள் கூட தாழி மடல் தேங்கக் கூடாது என்ற உறுதியால் கருநாடகத் தோழர்களின் கலகலப்புக்கு நடுவிலிருந்து இந்த அளவு எழுதி விட்டேன். எழுத வேண்டிய பலவும் எஞ்சியுள்ளன. நாளை எழுதுவேன்.

ஒரு மன நெருடலைத் தயக்கத்தோடுதான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: சவுக்கு சங்கர் உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடுவதோ அவருக்கு சீமான் ஆதரவு கொடுப்பதோ அரசியலில் எள்முனையளவும் தாக்கம் கொள்ளக் கூடிய செய்திகள் அல்லவே அல்ல. நமக்கு அது பற்றிக் கவலையே இல்லை. ஆனால் ஊடகர்கள் முன்னிலையிலேயே சீமான் சங்கரை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதை சங்கரே அனுமதித்தாலும், செய்தியாளர்கள் சீமானுக்கு “இது கண்ணியம் இல்லை” என்று சுட்டிக்காட்ட வேண்டாவா? அண்ணன் பண்ணையார், தம்பி பண்ணையாளா?

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 28

வெள்ளி, 17 மார்ச், 2023

ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம் : “தமிழும் நானும்”

 

ஃஃஃ       17 March 2023      அகரமுதல



கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                                              தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 05, 2054 ஞாயிறு 19.03.2023

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தமிழும் நானும்” – உரையாளர்கள்:

முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு

மருந்தாக்கியலர் அன்பு செயா, மக்கள் தொடிடர்பு அலுவலர், பாலர் தமிழ்ப்பள்ளிகள், ஆத்திரேலியா

மக்கள் தமிழாசிரியர் மா.கார்த்தியாயினி,

செயலாளர், கருநாடகத்தமிழ்ப்பள்ளி  கல்லூரி ஆசிரியர் சங்கம், பெங்களூரு

நிறைவாக:- தோழர் தியாகு, நிறுவனர், தாய்த்தமிழ்ப்பள்ளிகள்

இணைப்புரையும் நன்றியுரையும்: கவிஞர் தமிழ்க்காதலன்



‘இனி’ நூல் வெளியீட்டு விழா

 திராவிட இயக்கத் தமிழர் பேரவை,  கருஞ்சட்டைப் பதிப்பகம் இணைந்து  நடத்தும் ‘இனி’ நூல் வெளியீட்டு விழா இன்று (17-03-2023 வெள்ளிக்கிழமை, பங்குனி 03, 2054) மாலை 6.30 மணி, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.

இரா.உமா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தோழர் இரா.முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), நக்கீரன் கோபால், (ஆசிரியர்-நக்கீரன்), இயக்குநர் கரு.பழனியப்பன், தோழர் அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.



தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (3)     

தாராளியமா?

தாராளவியமா?

தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்:

தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமாமேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது.

*************************

சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன். யாரும் “நவ-தாராளவாதமே இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொல்லவில்லை என்பது நல்ல செய்தி. நவம் வேண்டாம். புதுச் சிந்தனைதான் வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். எஞ்சி நிற்கும் கேள்வி: தாராளவியமா? தாராளியமா? இரண்டுமே சரிதான், நாம் தாராளியத்தையே வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. சிபி சொல்வது போல் அது இலக்கணப் பிழையாக இருப்பின் தாராளவியத்துக்கு மாறிக் கொள்ளலாம், தாராளமாக!

தாராளியம் பிழையன்று என்றுதான் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியிருந்ததாகப் புரிந்து கொள்கிறேன். சொல்லாய்வறிஞர் அருளியார் தாராளிகம் என்கிறார். இது குறித்து அவரது விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

இது ஒருபுறமிருக்க… அடுத்து ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம்.

இரோசிமா நாகசாகியை

மறப்போமா? மன்னிப்போமா?

சப்பான் நாட்டு நகரங்களாகிய இரோசிமா, நாகசாகி மீது நேக் கூட்டணியில் ஒரு நாடாகிய அமெரிக்க வல்லரசு அணுக்குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தியது. இரு குண்டுவீச்சுகள்! உலக வரலாற்றில் இதுவே முதல் அணுகுண்டுத் தாக்குதல். இதுவே கடைசியாகவும் இருந்து விட்டால் மாந்தக் குலத்துக்கே நிம்மதி. ஆனால் இன்றும் அணுவாய்தங்களால் பேரழிவு ஏற்படும் அச்சம் நீடிக்கிறது. இந்தப் பேரழிவைத் தவிர்க்க உறுதியாகப் போராட வேண்டிய தேவை உள்ளது. தன்னை அணுவாய்த வல்லரசாகப் பெருமை பேசும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அணுவாய்த மோகம் கொண்டவர்களை அறிவியல் பேரறிஞர்களாக மதிக்கும் நாடு! வெட்கம்!

இந்தப் பின்னணியில் இரோசிமா நாகசாகியை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று நமக்கு நாம் உறுதியேற்கவும், எதிர்காலத் தலைமுறைகளை உறுதியேற்கவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இரோசிமா நாகசாகியை ஞாயப்படுத்தும் முயற்சிகள் புதியவை அல்ல. குண்டுவீசிய காலத்திலேயே அமெரிக்க வல்லரசு அதனை ஞாயப்படுத்தி அறிக்கை விட்டது: இந்த அணுக்குண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாம்! சப்பான் மீது அணுக்குண்டு போட்டுப் பேரழிவை உண்டாக்காம லிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்குமாம். அதன்மூலம் இன்னுங் கூடுதலான  மக்கள் இறந்திருப்பார்களாம்!  பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டதாம் அமெரிக்கா!  இந்தப் பெரும்  படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை சரிதானா?

இரண்டாம் உலகப் போரில் செருமனி, இத்தாலி ஆகியவற்றுடன் சேர்ந்து சப்பான் உக்கிரமாகப் போரில் குதித்தது.  பசிபிக்கு கடல் வட்டாரத்தில் முத்துத் துறைமுகத்தில் (Pearl Harbour)  நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்து அமெரிக்காவையும் முழுமூச்சான போரில் இழுத்து விட்டது.  இது  நடந்தது 1941 திசம்பர் 7ஆம் நாள்.

அமெரிக்கா தான் புதிதாகக் கண்டு படைத்திருந்த அணுகுண்டுகளை வீசியது: இரோசிமா – 1945 ஆகட்டு 6ஆம் நாள்; நாகசாகி – ஆகட்டு 9ஆம் நாள். முத்துத் துறைமுகத்தில் சப்பானால் தாக்கப்பட்டது ஒரு போர்க்கப்பல்! இரோசிமா நாகசாகியில் அமெரிக்க அணுக்குண்டு வீச்சுகளால் பல்லாயிரக்கணக்கில் எரிந்து சாம்பலானவர்கள் –– சாம்பலும் கூட மிஞ்சாமல் ஆவியாகிப் போனவர்கள் பொதுமக்கள்! அதற்கு இது பழிதீர்ப்பு என்றால் நியாயம்தானா? கேட்போம்.

_____ “ எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த உள்ளமும் எண்ணிப் பார்க்காத, எந்தச் சொல்லும் சொல்ல முடியாத கொடுமை இது! இன்றைய தேவை ஆணைகளோ சொற்பொழிவுகளோ கட்டுரைகளோ அல்ல! இக்கணமே மாநகரக் காவல் ஆணையரும் காவல் துறைத் தலைமை இயக்குநரும் இடைநீக்கம் செய்யபட வேண்டும். இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் காப்பாற்ற உடனே பதவி துறக்க வேண்டும் “ ______

இது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் கூறியது.

ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அப்படி என்ன நடந்தது? நினைவிருக்குமானால் எழுதுங்கள்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 27

வியாழன், 16 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 41: சொல்லடிப்போம் வாங்க! (2)



(தோழர் தியாகு எழுதுகிறார் 40 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (2)

நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கல் குறித்து மேலும் சில பார்வைகள்:

தாராளியம் என்ற சொல்லாக்கம் குறித்து அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்:

புது + ஆண்டு = புத்தாண்டு. ஏனெனில் புத் என்பது முன்னொட்டு. ஆனால் பொது + ஆண்டு பொத்தாண்டு என வராது.

தாராளம் என்பது தள் → தரு → தார்+ஆளம் = தாராளம். எனவே, இந்த இடத்தில் ஆளம் என்பதைப் பிரித்து ஆள் + இயம் என்பது இடராக உள்ளது. எனினும் தாளியம் என்னும் சொல்லோசைக்கிணங்க இருப்பதால் தாராளியம் என்பதைப் பயன்படுத்தி இயல்பாக்கலாம்.

நான் தொடர்கிறேன்: நவ-தாராளவாதம் (Neo-liberalism) என்று ஒன்றிருந்தால் பழைய தாராளவாதம் (old liberalism) என்றும் ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா? என் சொல்லாட்சியில் புதுத் தாராளியம் போல் பழந்தாராளியமும் இருக்க வேண்டுமே? Liberalism என்பதை இரு இடங்களிலும் ஒரே தமிழ்ச் சொல்லால்தான் குறிக்க வேண்டும். கால, வெளி மாற்றங்களை அச்சொல் தாங்கி நிற்க வேண்டும். பழந்தாராளியம் பற்றிப் பேசுமுன் இன்னொரு வகைத் தாராளியத்தையும் பார்த்து விடுவோம்:

சீனப் புரட்சியின் தலைவர் தோழர் மா சே-துங்கின் உரை ஒன்றின் தலைப்பு: COMBAT LIBERALISM. இது இயக்கம் அல்லது கட்சியின் அமைப்புக் கோட்பாடுகள் (ஊழியர் கொள்கை) பற்றியது. Old Liberalism. Neo-liberalism, மாவோ எதிர்க்கும் liberalism ஆகிய மூவகை liberalism-த்துக்கும் ஒரே தமிழ்ச் சொல்தான் ஆள வேண்டும்.

அடுத்து, liberalism ஓர் அகஞ்சார் கொள்கையாகவோ புறஞ்சார் முறைமை அல்லது அமைப்பாகவோ இருக்கலாம். இரு நிலைகளிலும் பொருந்தும்படியான தமிழ்ச் சொல் வேண்டும். தாராளவாதம் ஒரு கொள்கையைக் குறிப்பதாக உள்ளதே தவிர அமைப்பைக் குறிப்பதாக இல்லை. தாராளியம் இரண்டையும் குறிக்க வல்லது.

நவ-தாராளவாத ஏகாதிபத்தியம் என்று சொல்லும் போது அது அமைப்பு பற்றியதே தவிர கொள்கை பற்றியதன்று என்பது தெளிவாகிறது. ஆனால் தாராளவாதம் என்ற சொல் கொள்கையைக் குறிக்குமே தவிர அமைப்பைக் குறிக்காது. எதைக் குறித்தாலும் இரண்டுக்கும் பொதுவானது தாராளியம்தான்.

Liberalism அமைப்பாகவோ கொள்கையாகவோ இருக்கலாம். அது அமைப்பைக் குறிக்கும் இடங்கள், கொள்கையைக் குறிக்கும் இடங்கள், இரண்டையும் குறிக்கும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களுக்கும் பொருந்தும் சொல்லாகத் தாராளியம் உள்ளது. தாராளவாதம் அப்படி இல்லை. நவ-தாராளவாதம் என்று பாட்டாளி வருக்க சமரன் அணித் தோழர்கள் குறிப்பிடுவது புதுத் தாராளியத்தையே.

நவ-தாராளவாதம் என்றால் மக்களுக்கு விளங்கும், புதுத் தாராளியம் என்றால் விளங்காது என்று சொல்லவும் முடியாது. இரண்டுமே தாமாக விளங்க மாட்டா என்பதே உண்மை.

பிறமொழி கலந்த சொல்லைக் காட்டிலும் நல்ல தமிழ்ச் சொல் எளிதில் விளங்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

புதுத் தாராளியம் என்ற ஏற்பாட்டைக் குற்றாய்வு செய்யும் போது பழந்தாராளியம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தாராளியத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். பார்ப்போம்.

+++++++++++++++++

தோழர் அருண் மாசிலாமணி எழுதுகின்றார்:

தாழி 23 மடலில் அறிவிலியர்கள் என்கிற சொல்லைப் பயன் படுத்தியுள்ளீர்கள். அச்சொல் அறிவியலாளர்கள் என்று இதுவரை நாம் பயன்படுத்தி வந்த சொல்லுக்கு மாற்றா?

அறிவிலி என்பது ignorant இல்லையா?

+++++++++++++++

அறிவிலியர்கள் என்பது பிழை. அறிவியலர்கள் என்பதே சரி. பிழையைச் சுட்டியமைக்கு நன்றி! தாழியில் பிழை வரவே கூடாது என்று முயல்கிறோம். மீறி வந்து விட்டால் சுட்டிக்காட்டி சரி செய்யுங்கள்.

Science என்பதை முன்பெல்லாம் விஞ்ஞானம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். அறிவியல் என்பது இப்போது நிலைத்து விட்டது. விஞ்ஞான சோசலிசத்தை இப்போது அறிவியல் குமுகியம் என்கிறோம். (utopian socialism = ?) கலைச் சொற்கள் நிலைக்க வேண்டுமானால் பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். Scientist அறிவியலாளர் ஆகி விட்டார். அதன் சுருக்க வடிவம்தான் அறிவியலர்.   

தாழி மடல் (23)இல் அணுவாய்தப் பேரிடர் குறித்து எழுதியிருந்தேன். அது குறித்து அன்பர் மைக்கேல் இயூபருட்டு எழுதுகிறார்:

அணுத்திறன் பொறுப்பற்ற தன்மைக்கான அரக்கனான புடினை முதலில் அழிக் கவேண்டும் என்கிறார் ஓர் எளிய மனிதர். அடுத்து, செஞ்சீனாத் தீயரவு(dragon).

சிலர் அமெரிக்காவைப் பழி சொல்வர். some may blame America.  சப்பானின் தூண்டுதலே இரோசிமா, நாகசாகி மீதான குண்டு வீச்சுகள். காலநிலைத்தேவைப்பாடுகளே பெரும் வடுக்களாகும். (A common man says, Putin needs to destroyed, the monster for nuclear recklessness, next are red Chinese dragons, some may blame America. America never intentionally nuked anybody, the provoking by Japan was the bombing of Hiroshima and Nagasaki. More scarring are climate exigencies.) 

அன்புக்குரிய இயூபருட்டு அவர்கள் உணர்வார்ந்து பலவும் கூறியிருப்பினும், இரோசிமா, நாகசாகி பேரழிவுக்கு அமெரிக்காவைக் குற்றம் சொல்ல முடியாது என்றும், சப்பானின் ஆத்திரமூட்டல்தான் காரணம் என்றும் கூறியிருப்பது (‘fact-check’) தரவுச் சரிபார்த்தலுக்கு உரியது. சரிபார்க்கலாம் அல்லவா?

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்

தோழர் தியாகு எழுதுகிறார் 40: சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 39 தொடர்ச்சி)

சாதிக் குருடர்களாநீதித் திருடர்களா? – 4

கீழ்ச்சாதிக்காரன் தரத்தைக் கெடுத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் இந்த மேல்சாதிக்  கூட்டத்துக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்: இடஒதுக்கீடு என்பது ஒரு கல்விக் கழகத்தில்  நுழைவதற்குக் கோரப்படுகிறதே தவிர  இறுதியில் பட்டம் பெற்று வெளியே வருவதற்கு அல்ல. அதாவது இடஒதுக்கீடு சேர்க்கையில்தானே  தவிர தேர்ச்சியில் அல்ல. தேர்ச்சிக்கான படித்தரங்கள் எல்லார்க்கும் ஒன்றுதான்.

 இந்து‘ வின் சாதியம்

பிராமணியத்தின் தகுதி-திறமைவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும் எவ்வளவு விபரீதமான வாதங்களுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு ஆங்கில நாளேடு ‘இந்து’ வின் ஏப்பிரல் 2 ஆசிரியவுரையே சான்று.

‘இந்து’ சொல்கிறது:     

“வானோட்டிகள், மருத்துவம் அல்லது பொறியியல் அல்லது ஆராய்ச்சியில் உயர்தனிப் பிரிவுகள், ஆயுதப் படைகள்… இப்படிச் சில துறைகளை இடஒதுக்கீட்டுத் திட்டத்துக்கு வெளியே வைத்துக் கொள்வதும் முக்கியமாகும். இந்தியத் தொழில் நுட்பப் பயிலகங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மைப் பயிலகங்கள் (ஐஐஎம்) போன்ற சில நிறுவனங்களை வேறெந்த நோக்கிற்கும் விட்டுக் கொடுக்காத உயர் சிறப்புத் தீவுகளாகப் பாதுகாப்பதும் ஒட்டுமொத்த நாட்டு நலனுக்குத் தேவை.

சூத்திரனும் பஞ்சமனும் வேண்டுமானால் வண்டி ஓட்டட்டும்! பேருந்தும் சரக்குந்தும் ஓட்டட்டும்! தொடர்வண்டி கூட ஓட்டட்டும்! ஆனால் வானூர்தி ஓட்ட ஆசைப்படாதிருக்கட்டும்!

 வானூர்தி ஓட்டுகிறவனுக்கு ஊதியம் அதிகம் என்பது தவிர இந்தப் பச்சையான பாகுபாட்டுக்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

 இந்தியச் சமூகத்தின் மலட்டுத்தனம்

மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சியின் உயர்தனிப் பிரிவுகளில் இடஒதுக்கீடு தரக் கூடாதாம்!  இது வரை இடஒதுக்கீடே இல்லாமல் இந்த உயர்தனிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட முற்றுரிமை வகித்துள்ள பிராமணர்கள் சாதித்தது என்ன? அனைத்துத் துறைகளிலும் தம் ஆற்றலை வெளிப்படுத்த அனைத்துப் பிரிவு மக்களுக்கும்  வாய்ப்பளிக்காத ஒரு சமூகத்தால் பெருஞ்சாதனை எதையும் நிகழ்த்தி விட முடியாது. அறிவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியச் சமூகத்தின் நீடித்த மலட்டுத் தனத்திற்கு வர்ண சாதியமைப்பே பொறுப்பு என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் அறிவு நாணயம் ‘இந்து’ வுக்கு உண்டா? உறங்கிக் கிடக்கும் பேராற்றல்களை எழுப்பிவிட்டு புதிய சாதனைகள் படைப்பதற்குச் சமூக நீதி வேண்டும். அதில் ஒரு முக்கியக் கூறுதான் இடஒதுக்கீடு!

 ‘இந்து’வின் உயர்சிறப்புத் தீவுகள் இது வரை பெரும்பாலும் உயர்சாதித் தீவுகளே! குறிப்பாகச் சொன்னால் பிராமணத் தீவுகளே!  சமூகநீதியின் ஆழிப் பேரலையில் இந்தத் தீவுகள் மூழ்கிப்  போய்விடும் என்ற அச்சத்தால் ‘இந்து’ நடுங்குகிறது.

 பசையடுக்குத் தந்திரக்கோல்

உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் இடஒதுக்கீட்டுப் பூதத்தை விரட்ட மீண்டும் எடுத்திருக்கும் மந்திரக் கோல், இல்லை, தந்திரக் கோல்தான் பசையடுக்கு வாதம். பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் வசதியும் தகுநிலையும் உயர்ந்து பசையடுக்கு (creamy layer) ஆகி விட்டனராம். இடஒதுக்கீட்டின் பலன் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாதாம்.

உச்ச  நீதிமன்ற நீதிபதி சின்னப்ப (இ)ரெட்டி ஒரு தீர்ப்பில் சொன்னார்:

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கென ஒதுக்கீடு செயப்படும் இடங்கள், பதவிகளில் ஒரு சிலவற்றை அவர்களில் அதிக வாய்ப்புள்ள வசதியுள்ளவர்கள் தட்டிச் சென்று விடுகிறார்கள் என்பதன் பொருள் இடஒதுக்கீடு தேவையில்லை என்பதன்று. நம் சமூகம் போன்ற போட்டிகள் நிறைந்த ஒரு சமூகத்தில் இப்படி நிகழத்தான் செய்யும். ஒதுக்கீடு செய்யப்படாத இடங்கள், பதவிகளையும் கூட இதேபோல் அவர்களிடையிலான பசையடுக்கினர் தட்டிச் செல்வதில்லையா?… ஒதுக்கீடு செய்யப்படாத பதவிகளைச் சமூகத்தின் உயர் பசையடுக்கினர் இப்படித் தட்டிச் செல்வது மோசமில்லை என்றால், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களையும் பதவிகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பசையடுக்கினர் தட்டிச் செல்வது எப்படி மோசமாக இருக்க முடியும்?”

 பசையடுக்கு வாதத்தை மண்டலே மறுதலித்து விட்டார். 31-12-1980 நாளிட்ட மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பது இதுதான்:

 இடஒதுக்கீட்டின் தலையாய சிறப்பு என்ன? இந்தியச் சமூகம் எல்லா வகையான ஏற்றத் தாழ்வுகளாலும் பீடிக்கப்பட்டிருக்க, ஏனைய பற்படுத்தப்பட்டோரிடையில் மட்டும் அது சமத்துவத்தைக் கொண்டுவரும் என்பதன்று. ஆனால் பணிகளில் உயர்சாதிகளுக்குள்ள பிடிப்பைக் குறைத்து, நாட்டை நடத்திச் செல்வதில் ஒரு பங்கேற்புபுணர்வைப் பொதுவாக ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்படுத்த அது பயன்படும் என்பது உறுதி”.

 மைய அரசின் உயர் கல்விப் பயிலகங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இன்னும் இட ஒதுக்கீடு தொடங்கவே இல்லை. இந்நிலையில் பசையடுக்குப் பூச்சாண்டி காட்டுகிறவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இடஒதுக்கீடே வழங்கப்பட்டு விட்டாலும் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, இடஒதுக்கீட்டைச் செயலளவில் இல்லாமற் செய்வதே அது. இடஒதுக்கீட்டை முறியடிக்கும் சதித் திட்டமே பசையடுக்கு என்ற கூக்குரல்.

சாதிக் குருடும் நீதித் திருட்டும்

இப்படி எல்லா வகையிலும் இடஒதுக்கீட்டை மறுக்கவும், குறுக்கவும், நாமயர்ந்தால் அடியோடு ஒழித்துக்கட்டவும் பிராமண, பிராமணிய ஆற்றல்கள் வரிந்து கட்டி நிற்கின்றன. இவர்கள் தங்களின் ஆதிக்கத் தன்னலத்துக்காகச் சாதியம் காப்பவர்கள். இதை சாதி பார்த்தும் செய்வார்கள்,

சாதி பார்க்கும் சாதியத்தை விடவும் சாதிக் குருட்டுச் சாதியம் ஆபத்தானது. ஏனென்றால் முன்னது வெளிப்படையானது. பின்னது பசுத்தோல் போர்த்திய புலி, புறாச் சிறகு போர்த்திய வல்லூறு! சாதிக் குருட்டுக்குப் பின்னால் மறைந்துள்ள நீதித் திருட்டைக் கண்டுகொள்வோம்; தமிழ் மக்கள் காணச் செய்வோம்.

            வெடிக்கட்டும் எரிமலை!

 கடைசியாக வந்துள்ள செய்தியின்படி, மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க மறுத்து விட்டது உச்ச நீதிமன்றம் ’57 ஆண்டுகள் காத்திருந்தீர்கள், இன்னும் ஆறு மாதம் காத்திருக்கக் கூடாதா?’ என்று நீதிபதிகள் கேட்டிருப்பது விபரீதமானது. ’57 ஆண்டுகளாக ஏன் இதைச் செய்யவில்லை?’ என்று அவர்கள் கேட்டிருந்தால் பாராட்டலாம். இன்னும் ஓராண்டு இடஒதுக்கீடு இல்லாமற் போவதால் எத்தனை மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுமோ? என்ற கவலையே இந்த நீதிபதிகளுக்கு இல்லை. “ஒடுக்கப்பட்ட மக்கள் எரிமலையாக வெடிப்பார்கள்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார். எரிமலை வெடிக்கட்டும். ஆனால் எரிக்க வேண்டியவை பற்றிய தெளிவு இல்லாவிட்டால் எரிமலை வெடித்துக் கனல் கக்கி இறுதியில் சாம்பலாகிப் போகும். இந்திய அரசிடமும் அரசமைப்பிடமும் சமூக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும். இவை சமூக நீதிக்குத் தடைகளாகி விட்டதை இப்போதாவது உணர்ந்து எரிமலை வெடிக் கட்டும்! எரிக்க வேண்டியவற்றை எரிக்கட்டும்!

தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்:தியாகு

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்

புதன், 15 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 39 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 38 தொடர்ச்சி)

சாதிக் குருடர்களாநீதித் திருடர்களா? – 3

இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (IIT), இந்திய மேலாண்மைப் பயிலகம் (IIM), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் (AIIMS) என்ற வகையிலான கல்வி நிறுவனங்களில் ஒன்றே ஒன்றிலாவது ஏனைய பிற்படுத்தப்பட்டோர் அவர்களின் மக்கள் தொகைக்குரிய விழுக்காட்டை நெருங்கியிருப்பதாகக் காட்ட முடியுமா?

 இந்த உயர்கல்விப் பயிலகங்களில் ஒன்றே ஒன்றின் நிருவாகத்திடமிருந்தாவது அதன் ஆசிரியர்கள் -மாணவர்களின் வகுப்புவாரிக் கணக்கைக் கேட்டுப் பெற முயன்றார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்? 

வழக்கில் வந்து சேர்ந்து கொண்ட பேராசிரியர் பி.வி இந்திரேசன் போன்றவர்களிடம் ஐ.ஐ.டி.யில்  பிராமணர்கள் எத்தனை? பிற்படுத்தப் பட்டோர் எத்தனை? அட்டவணைச் சாதியினர் – அட்டவணைப் பழங்குடியினர் எத்தனை?’ என்று கேட்கத் தோன்றியதா நீதிபதிகளுக்கு?

எந்தத் தரவுகளின் அடிப்படையில் அரசு இடஒதுக்கீடு வழங்கியது?  என்று கேட்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்தத் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தார்கள்? என்று திருப்பிக் கேட்கலாம்..

 ஆனால் தரவுகள் போதவில்லை என்பதெல்லாம் தடை போடுவதற்கு ஒரு சாக்குத்தான் என்பது நீதிபதியின் இரண்டாம் வாதத்திலிருந்து தெளிவாகிறது.

 நீதிபதிகள் உள்ளத்தில் சாதியம்

‘இடஒதுக்கீட்டுச் சட்டத்தால் சமூகப் பேரழிவு நேரிடும்’ என்றும், இச்சட்டத்தின் வாயிலாக இடம்பெற்றுப் படித்து முடிக்கும் மாணவர்கள் இப்போது படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுடன் ஒப்பிட்டால் அறிவுக் குள்ளர்களாக இருப்பார்கள் என்றும் மனுதாரர்கள் வாதிடுவதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அப்படியே எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்களது உள்ளத்தில் படமெடுத்தாடும் சாதியத்தையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

   இடஒதுக்கீடானது கல்வியையும், வேலைவாய்ப்பையும் அதிகாரத்தையும் பரவலாக்குவதன் மூலம் சனநாயகப்படுத்துகிறது. இவ்விதம் மொத்தச் சமூகத்தின் தகுதி திறமையும் உயரத் துணை செய்கிறது. இடஒதுக்கீடுதான் தகுதி திறமை வளர வழி. இடஒதுக்கீட்டை மறுப்பது தகுதி திறமையை முடக்குவதாகும். இந்த அடிப்படைத் தெளிவு கூட மெத்தப் படித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இல்லை என்பதை நம்புவது கடினமாய் உள்ளது.

 இடஒதுக்கீட்டினால் தகுதி திறமை நீர்த்துப் போகும் என்ற பூச்சாண்டி குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

 இந்திய அரசும் தகுதி-திறமைவாதமும்

‘மையக் கல்விப் பயிலகங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006’ – வழக்கில் சிக்கியுள்ள இந்தச் சட்டத்தின் பிரிவுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் பார்ப்பனியத்தின் தகுதி – திறமைவாதத்துக்கு இந்திய அரசும் ஒத்துப் போவது வெளிப்படுகிறது.

சட்டத்தின் பிரிவு 3 மையக் கல்விப் பயிலகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு துறையிலும் ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் மொத்த இடங்களில் பின்வருமாறு ஒதுக்கீடு செய்கிறது:

அட்டவணைச் சாதிகளுக்கு (SC) 15%, அட்டவணைப் பழங்குடிகளுக்கு (ST) 7.5%, ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு (OBC) 27%..

பிரிவு 5 (1)இன் படி ஒவ்வொரு மையக் கல்விப் பயிலகமும் தக்க அதிகாரத்துவத்தின் முன்னிசைவுடன் ஒவ்வொரு துறையிலும் ஆண்டுதோறும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். எந்த அளவுக்கு அதிகமாக்க வேண்டும்? பிற்படுத்தப்பட்டோருக்குஇடஒதுக்கீடு வழங்குவதால் பொதுப் பிரிவினருக்குரிய இடங்கள் குறைந்து விடாத அளவுக்கு அதிகமாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக,அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள் 200, இடஒதுக்கீட்டினால் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 இடங்கள் போய்விடுமானால், மொத்த இடங்களை 220 ஆக்க வேண்டும். கூடுதலாய்ச் சேர்த்த 20 இடங்களில் ஒதுக்கீடு கிடையாது.

பொதுப் பிரிவு என்பது பெரும்பாலும் பிராமணர்களுக்கும் பிற உயர் சாதியினர்க்கும் உரியது என்பது பட்டறிவு. அதனால்தான் இட ஒதுக்கீடே தேவைப்படுகிறது. இடஒதுக்கீட்டினால் பொதுப் பிரிவினருக்குப் பாதிப்பு வரக் கூடாது என்ற கவலையின் பொருள் – உயர் சாதியினருக்கு எந்த இடர்ப்பாடும் நேரக் கூடாது என்பதே. ஏன்? ஏனென்றால் அப்படிச் செய்வது தகுதி திறமையை நீர்க்கச் செய்து விடுமாம். இந்திய அரசு தரும் விளக்கமே இதுதான்.

 நீதிமன்றக் குதர்க்கம்

இடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமாக்குங்கள்! ஆனால் கூடுதல் இடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தாருங்கள்! – இது சமூக நீதியாளர்களின் கோரிக்கை.

இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது தெரியுமா? இடங்களை அதிகமாக்கும் போது பொதுப் பிரிவினரின் இடங்களும் அதிகமாக வேண்டுமாம்! இல்லையேல் இது சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதாம்! உயர்சாதியினருக்கு இதுவரை கிடைத்து வந்த பங்கு குறையாவிட்டாலும் கூட பிற்படுத்தப்பட்டோர்க்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பொருள்! 

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் குதர்க்கத்துக்கு அடிப்படையே அதன் ‘தகுதி-திறமைவாத’க் கண்ணோட்டம்தான். இந்தக் கேவலமான பிராமணியப் பார்வை இந்திய அரசுக்கும் உள்ளது, பிறகு எப்படி இவர்களிடமிருந்து சமூக நீதியை எதிர்பார்ப்பது?

சட்டத்தின் பிரிவு 5 (2) ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைத் தவணை முறையில் (மூன்று தவணைகளாக) வழங்குவதற்கு வாய்ப்பளிக்கிறது. அதாவது முதலாண்டிலேயே 27 விழுக்காடு தரவேண்டியதில்லை. “ஒன்பது ஒன்பதாய்க் ” கூட்டி மூன்றாம் ஆண்டில் 27 தந்தால் போதும். மூன்று ஆண்டுக்குள் எத்தனை தடை வருமோ, அதனை எப்படித் தாண்டுவதோ, உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் வணங்கும் இராமனுக்கே வெளிச்சம்!

தரங்காக்கத் தவணை முறையா?

இந்தத் தவணை முறை இடஒதுக்கீட்டுக்கு மைய அரசின் சட்டம் சொல்லும் காரணங்களில் ஒன்று கல்வித் தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அதாவது ஒரேயடியாக 27 விழுக்காடு தந்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுமாம். உயர்சாதி மாணவர்கள் குறையாமல் நிறைந்திருந்தால்தான் கல்வித்தரம் கெட்டியாகப் பாதுகாக்கப்படும் என்று பொருள். இடஒதுக்கீட்டுச் சட்டத்திலேயே இப்படியோர் இழிவான எண்ணம் மறைந்திருக்கும் போது, ‘இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்போர்  இடஒதுக்கீட்டினால் அறிவுக்குள்ளர்கள் தோற்றுவிக்கப் படுவார்கள்’ என்று வாதிடுவதிலும், அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்வதிலும் வியப்பேது?

 இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, இடஒதுக்கீட்டைச் செயலாக்கச் சட்ட மியற்றுபவர்களும் கூட ஏதோ ஒருவகையில் சாதிக் குருட்டுச் சாதியத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பது  இதிலிருந்து தெளிவாகிறது.

– தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்: தியாகு

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்