வியாழன், 16 ஜூலை, 2009

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க
மக்களிடம் மன மாற்றம் தேவை:
இறையன்பு



திருநெல்வேலி, ஜூலை 15: மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும் என சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு தெரிவித்தார். திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற "விருந்தினர் போற்றுதும்...விருந்தினர் போற்றுதம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை மேம்படுத்தும் வகையில் கோயில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில் குற்றாலத்திற்கு மட்டும் ரூ.4.7 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில் முதல் கட்டமாக 400 இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக "எங்கும் ஏறி, எங்கும் இறங்கும்' பஸ் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியைப் பொருத்து தமிழ்நாட்டின் இதர நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். குற்றாலம் ஏற்கெனவே தேசிய சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மேலும் பிரபலமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிரபலமடையாத ஏற்காடு, கொல்லிமலை, தாரமங்கலம், பழவேற்காடு, திருக்கடையூர், புளியஞ்சோலை, மேகமலை, திருக்கடையூர் உள்ளிட்ட 18 சுற்றுலா மையங்களை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசைப் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் சென்னையில் "பூங்காவில் பூங்காற்று' என்ற இசை நிகழ்ச்சி வாரத்தில் ஒரு நாள் பூங்காவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாவில் நாட்டுப்புற கலைகளையும் இடம்பெறச் செய்து வருகிறோம் என்றார் இறையன்பு. முன்னதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற "விருந்தினர் போற்றுதும்... விருந்தினர் போற்றுதும்' நிகழ்ச்சியில் இறையன்பு பேசியதாவது: நம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமின்றி எல்லோருமே சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நிலையில் இருக்கிறோம். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நேர்மையாகவும், அன்பாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளும் ஓட்டுநர்களை அவர்கள் பாராட்டி சுற்றுலாத் துறைக்கு கடிதங்களை எழுதி வருகின்றனர். நல்ல ஓட்டுநர்களை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியும் வருகின்றனர். இதனால் ஓட்டுநர்களின் பொருளாதார நிலை மேம்படும். "சுற்றுலா நட்பு வாகனம்' திட்டத்தில் சேரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இரண்டு மணி நேர பயிற்சியும் அளிக்கிறோம். அவ்வாறு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் குற்றாலத்தில் 26 பேரும், சென்னையில் 93 பேரும், மதுரையில் 7 பேரும் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். நமது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மடங்கு அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளிடம் அன்பாகவும், அணுசரணையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் இறையன்பு. கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையும், ரூ. 100-ம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை செயலர் ஆ.சி. மோகன்தாஸ், மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன், மேயர் அ.லெ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக