குறிப்பு: இது ஒரு மீள் பதிவு என்பதால் ஸ்பெக்ட்ரம், ராஜா போன்ற கேள்விகள் இடம்பெறவில்லை.
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க- தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மனம்திறந்து கொடுக்காத பேட்டி.
கேள்வி: உங்கள் குடும்பத்திலிருந்து அடுத்து பதவிக்கு வரப்போவது யார்?
கலைஞர்: அது துரை தயாநிதியாகவும் இருக்கலாம். அல்லது உதயநிதி ஸ்டாலின் ஆகவும் இருக்கலாம். அதை பொதுக்குழு செயற்குழு கூடி முடிவு செய்யும்.
கேள்வி: உங்கள் குடும்பத்திற்கே பதவி வழங்கப்படுகிறதே?
கலைஞர்: எம்.எல். ஏ., எம்.பி., மந்திரி என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்க்க மக்கள் ஏன் அலையனும்?. ஒரே குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் பதவி கொடுத்து விட்டால்...மத்திய, மாநில மந்திரிகளை ஒரே வீட்டில் சந்திக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில் தான் என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பதவி கொடுத்துள்ளேன்.
கேள்வி:உங்களுக்கு மத்தியிலிருக்கும் செல்வாக்கை வைத்து மதுரையை தனிமாநிலமாக அறிவித்து அங்கு மு.க. அழகிரியை முதலமைச்சராக அறிவித்து விடுங்களேன்?
கலைஞர்: பன்னலாம்தான். அதன்பிறகு ராமதாஸ் அவர் மகனை முதலமைச்சராக்க வடமாவட்டத்தை பிரித்து கேக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?
கேள்வி: மு.க.அழகிரி பாராளுமன்றத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு மொழி பிரச்சினைதான் காரணமா?
கலைஞர்: இதற்க்கு பதில் சொல்லும் முன்பு எதிர்கட்சியினருக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்லிக்க ஆசைபடுகிறேன். கருணாநிதி மட்டுதான் தமிழ் தமிழ் என்று சொல்லுறார். அவரு குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் இங்க்லீஸ் இந்தி படிக்கறாங்கன்னு நா கூசாமல் சொல்லுகொண்டு இருக்கீங்களே, இதன் மூலமாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், என் குடும்பத்தினர் யாருக்கும் தமிழை தவிர வேறொன்றும் தெரியாது என்கிற விஷயத்தை. ஆங்...நீங்க என்ன கேட்டீங்க...
மொழி பிரச்சினையில் தான் அழகிரி பாராளுமன்றத்துக்கு போறதில்லைன்னு வடநாட்டுல அழகிரியின் வளர்ச்சி பிடிக்காதவங்க கிளப்பிவிடற புரளி . ஆனா அழகிரிக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியாது என்பதை ஒத்துக்கறேன். அதுக்காக பயந்துட்டு அவரு போகாம இல்லை. நாங்களெல்லாம் இந்தியை எதிர்த்தே அரசியல் பன்னுனவுங்க. அவரு போகாத்ததுக்கு முக்கிய காரணம்.அழகிரி ஒரு இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட
வடநாட்டு தலைவருல்லாம் அவருகிட்ட வந்து அங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க வந்து பிரச்சாரம் செய்யுங்க, இங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க பொறுப்பாளரா இருந்து ஜெயிக்கவைங்கன்னு தினமும் தொல்லையாம். அதான் பாராளுன்றத்துக்கு போறதில்லை.
கேள்வி: மின்வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக தெரிகிறதே?
கலைஞர்: இப்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினையே இல்லையே? என் வீட்டிலோ அல்லது ஆற்காட்டார் வீட்டிலோ போய் பாருங்கள் உண்மை தெரியும்.
கேள்வி: உங்கள் வீட்டில் சரி பொது மக்கள் வீட்டில்?
கலைஞர்:அவ்வப்போது ஒருமணி நேரமோ ரெண்டுமணி நேரமோ.......
கேள்வி: மின்வெட்டு இருக்கும் என்கிறீர்களா?
கலைஞர்: இருங்க .... அவசரப்படாதீங்க......நான் சொல்ல வந்ததை முழுசா கேளுங்க.... ஒருமணி நேரமோ, ரெண்டு மணிநேரமோ மட்டும்தான் மின்சாரம் தலையை காட்டிவிட்டு போகும்னு சொல்ல வந்தேன்.
கேள்வி: மக்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?
கலைஞர்: எப்படி கோபித்துக்கொள்ள முடியும்? எங்களுக்கு கலைஞர் டி.வி-யில் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் மின்சாரம் இருந்தால் போதும். மற்ற நேரங்களில் மின்சாரமே தேவை இல்லை. இதனால் எங்களின் மின்சாரக்கட்டணம் கணிசமாக குறைகிறதுன்னு சுமார் ஒரு கோடிப்பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே இது.
கேள்வி: போகுமிடமெல்லாம் விஜயகாந்த் உங்களை கடுமையாக விமர்சிக்கிறாரே?
கலைஞர்: குடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லி நான் இப்போது வகிக்கும் பதவியின் மரியாதையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
கேள்வி: ராமதாஸ் உங்களை கடுமையாக தாக்குகிறாரே?
கலைஞர்: உங்கள் கூட்டணியில் இருந்திருந்தால் என் மகன் மந்திரியாகி இருக்கலாம்.அந்த அம்மையாரை நம்பிப்போனது தப்புதான்.எப்படியாவது என்னை உங்கள் கூட்டணியில் சேர்த்துக்கங்க. நீங்கள்தான் அன்னை சோனியாவிடம் சொல்லி என்மகனுக்கு மந்திரிப்பதவி வாங்கிதரனும்ன்னு நேற்றுக்கூட ரகசியமாக தொலைபேசியில் பேசினார்.அதுபற்றி உங்களிடம் சொல்வது அரசியல் நாகரீகமில்லை.
கேள்வி:நடிகர் ரித்தீஸ்-க்கு சீட் கொடுத்துள்ளது பற்றி வெளியில் முணுமுணுக்கிறார்களே?
கலைஞர்: கானல் நீர், நாயகன் என்று இரண்டு திரைப்படத்தை இவ்வளவு செலவுசெய்து கலைஞர் டி.வி-க்காகவே எடுத்த வள்ளல் அவர்.ராமநாதபுரத்தில் நிற்க அவரைவிட தகுதியானவர் யார் இருக்கிறார்கள்?
கேள்வி: ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி தரமானதல்ல என்று கூறப்படுகிறதே?
கலைஞர்: இந்த அரிசியை மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை. புழுத்துப்போன அரிசி என்றெல்லாம் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் சாப்பிடமுடியாத அரிசியை ஏன் வெளிமாநிலங்களுக்கு கடத்தவேண்டும்? ஒரு ரூபாய்க்கு இ ங்கு விற்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி, மக்களே சாப்பிடவில்லையென்றால் எதற்காக பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள்? அந்த மாநில அரிசியை விட தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானது என்று இப்போது தெரிகிறதல்லவா? கழக ஆட்சியில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருந்து அதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வெளிமாநில மக்களும் சாப்பிட்டு பயனடைந்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
கேள்வி: இளங்கோவன் போட்டு தாக்கறாரே?
கலைஞர்: என் மகனுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று அவரோட சொந்த அம்மா சுலோச்சனா சம்பத் ஒரு முறை சொன்னதுபோல நானும் சொல்லி அரசியல் நாகரீகத்தை இழக்க விரும்பவில்லை.
கேள்வி: காங்கிரசுக்கு மந்திரி பதவி கொடுத்து விட்டால் அவர் வாயை மூடி விடலாமே ?
கலைஞர்: நான் இவ்வளவு நாள் என் மனதில் போட்டு மூடிவைத்திருந்த ஒரு ரகசியத்தை இந்தக்கேள்வியின் முக்கியத்துவம் கருதி சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சொக்கத்தங்கம் சோனியாவிடம் தொலைபேசியில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறேன்னு சொன்னேன். அதுக்கு சோனியா அம்மையார் அமைச்சரைவையில் இடம் தருகிறேன் என்பதற்கு நன்றி. ஆனால் எந்த கோஷ்டி ஆளுகளுக்கு மந்திரி பதவி கொடுப்பது. ஒரு கோஷ்டிக்கு கொடுத்தால் இன்னொரு கோஷ்டியினர் அடித்துக்கொள்வார்கள். நீங்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் ஐம்பது பேருக்கு அமைச்சர் பதவி தரவேண்டியிருக்கும்" என்றார். உடனே நான் அதிர்ச்சியாகி உங்கள் கட்சி எம்.எல். எ-க்கள் அவ்வளவு பேர் இல்லையேன்னு கேட்டேன். அதுக்கு சொக்கத்தங்கம் சோனியா "நிஜம்தான், அவ்வளவு பேர் இல்லைதான். ஆனால் அதைவிட அதிகமாக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கோஷ்டி இருக்கு. அதனால் மந்திரி சபையில் இடம் வேண்டாம்" என்று சொல்லிட்டார். இதற்க்கு நண்பர் தங்க பாலுவும் சாட்சி.
கேள்வி: ஜெயலலிதா போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே?
கலைஞர்: இருக்கலாம்...நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து இந்த ஒன்றரை வருடத்தில் முதன்முதலாக மக்களை சந்திக்க வருவதால்..ஜெயலலிதா எப்படி இருக்கார் என்று பார்க்க வந்த கூட்டம்தானே தவிர, அவர் பேச்சை கேக்க வந்த கூட்டமல்ல...
கேள்வி: உங்கள் கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கே பதவி வழங்குகிறீர்களே.?
கலைஞர்: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கள் கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் என்று. அவர்கள் எங்கே போகப்போகிறார்கள்? பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களுடனே இருப்பார்கள். ஆனால், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் இன்னும் நிறைய பேர் எங்க கட்சிக்கு வருவாங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்காரே...நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்.
கேள்வி: அப்படியானால் ம.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?
கலைஞர்: நாங்கள் ம.தி.மு.க-வை ஒரு கட்சியாக நினைக்கவில்லை. ம.தி.மு.க-என்றால் மறுபடியும் தி.மு.க. என்று தானே அர்த்தம்.(சிரிப்பு)...
கேள்வி:ம.தி.மு.க-வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது பற்றி?...
கலைஞர்: தம்பி வைகோ அண்ணா தி.மு.க-வின் கிளை செயலாளர் போல செயல்படுவதால் அவருக்கு எதற்கு தனியாக ஒரு கட்சியென்று தேர்தல் கமிஷன் நினைத்திருக்கலாம்(மறுபடியும் சிரிப்பு)
கேள்வி: கடந்த ஒருமாதமாக எந்த ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லையே?
கலைஞர்: அதை ஏன் கேட்கறீங்க...ஒரு மாசமா பாராட்டு விழாவே இல்லையென்பதால், அதைக்கூட பாராட்டி, பாராட்டுவிழா இல்லாத பாசத்தலைவன்னு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்ன்னு தம்பி ஜெகத் ரட்சகன் ஒரே அடம். நான்தான் மறுத்துட்டேன்.
கேள்வி: பம்பு செட் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்களே?
கலைஞர்: ஆமாம். ஆளுக்கொரு டிராக்டர் கொடுக்கலாம்ன்னு தான் முதலில் நினைத்தேன், ஆனால், இப்ப நிதிநிலைமை சரியில்லாததால பாம்பு செட்டோட நிறுத்திக்கிட்டேன். அதில் கூட பாருங்க, பாம்பு செட் கொடுத்த பர்மனென்ட் தலைவன்னு ஒரு பாராட்டு விழா அடுத்தவாரம் ஜெகத் ரட்சகன் தலைமையில துரைமுருகன் முன்னிலையில நடக்குது . தம்பி ரஜினி, கமல், வாலி, வைரமுத்து எல்லாம் கலந்துக்கறாங்க.
கேள்வி: இலங்கை பிரச்சினை பற்றி?
கலைஞர்: அதுபற்றி நேற்றுக்கூட சொக்கத்தங்கம் சோனியாவுக்கும், பிரதமர் ராகுல்காந்தி மன்னிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஒரு தந்தி அடிச்சாச்சே..உடன்பிறப்புகளையும் தந்தி அடிக்க சொல்லி முரசொலியில் ஒரு கடிதம் எழுதிட்டேனே,நீங்கள் படிக்கலையா?
கேள்வி: இலங்கை பிரச்சினைக்காக தந்தி அடிக்க சொல்லும் நீங்கள் மந்திரி பதவிக்காக டெல்லி செல்கிறீர்களே?
கலைஞர்: அப்படியல்ல..இப்போது ஆளாளுக்கு செல்போன் வச்சுக்கு எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்ன்னு அடிச்சுடறாங்க... அதனால தந்தி அடிப்பது குறைந்து போயி தபால் துறை நட்டத்தில் இயங்குதுன்னு அந்த துறைக்கு அமைச்சரா இருக்க தம்பி ராஜா கேட்டுக்கிட்டதால நான் தந்தி அடிக்க சொன்னேன். அன்னைக்கு மட்டும் தபால்துறைக்கு எவ்வளவு வருமானம்ன்னு கேட்டுப்பாருங்க.
கேள்வி: அப்படியென்றால் மந்திரிப்பதவி கேட்டும் ஒரு தந்தி அடிக்க வேண்டியதுதானே?
கலைஞர்: அடிக்கலாம்தான். ஆனால் நான் ஒருவன் தந்தி அடிப்பதாலென்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது? அதான் விமானத்துக்கு வருமானம் கொடுப்பமேன்னு கிளம்பிட்டேன். மக்களுக்கு நல்லது நடக்கனும்ன்னா உடல் நிலையைக்கூட கணக்கில் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.
கேள்வி: யாரோட மக்களுக்கு? அழகிரி, கனிமொழி போன்ற உங்களின் மக்களுக்கா?
கலைஞர்: யார் நீ? ஜெயா டி.வி. நிருபரா? முதல்ல வெளியபோய்யா. சரி பேட்டியை முடித்துக்கொள்வோம். . எனக்கு பொன்னர் சங்கர் படத்துக்கு கதை வசனம் எழுதும் வேலை இருக்கு.