வியாழன், 13 ஜூலை, 2017

செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் தொடர்பில் முதல்வருக்கு நன்றி!




செம்மொழித்தமிழாய்வு  நிறுவனம் தொடர்பில் முதல்வருக்கு நன்றி!


செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்!  என்னும் தலைப்பில் சூலை இரண்டாம் நாளிட்ட அகரமுதல இதழில்,
"அமைதியாகத் திட்டமிட்டு, எண்ணியவாறு செயல்படும் முதல்வர் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர்  என்ற முறையில் அந்நிறுவனத்திற்குச் சென்று செந்தமிழ்வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவர் இந்தப்பொறுப்பிற்குரிய அதிகாரத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாகவே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது"
எனக் குறிப்பிட்டிருந்தோம்.

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்!   எனச் சூலை 9 ஆம் நாளி்ட அகரமுதல இதழில்
 "நிறுவனத்தினரும் தமிழக அ்ரசினரும் முடிவு தெரிவிக்கும் வரை  அமைதி காப்பதும் நன்றன்று." எனக் குறிப்பிட்டு நடவடிக்கைக்கு வேண்டியிருந்தோம்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி மத்திய அரசிற்கு இத்தகைய தவறான முயற்சியைக் கைவிட்டுச் செம்மொழித்தமிழாய்வு  மத்திய நிறுவனம் இப்போதுள்ளதுபோல் தனித்தியங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என அறிய வந்துள்ளோம்.  முந்தைய ஆட்சியால் வந்தவற்றைப் பிந்தைய ஆட்சி புறக்கணிக்கும்  தவறான நடை முறையை மாற்றி  வினை யாற்றியுள்ளார். முதல்வருக்கும் செம்மொழி நிறுவனத் துணைத்தலைவர்  முனைவர் பு..பிரகாசம், இயக்குநர்  திரு. அ.பழனிவேல்,  பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் ஆகியோருக்கும் பாராட்டு.
இதுபோல் முதல்வர், ஆட்சிக்குழுக்கூட்டத்தைக் கூட்டியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்தறியும் கூட்டம் ஒன்றையும் கூட்டிச் செம்மொழி நிறுவனம்  சிறப்பாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
 மனித வள மேம்பாட்டுத்துறை முதல்வரின் மடலுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள  கொந்தளிப்பு  அடங்காது. தமிழ்நாடு- புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சார்பில்   ஆடி 07, 2048 / 23.07.207  அன்று நடைபெற உள்ள கூட்டமும்  ஆடி 15, 2048 / 31.07.2017 அன்று தலைநகரத்தமிழ்ச்சங்கம் சார்பில் செம்மொழி நிறுவனம் முன்னர் நடைபெற உள்ள மறியல் போராட்டமும் தொடரும்.
இவற்றைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்


புதன், 12 ஜூலை, 2017

கவியரசர் இளந்தேவன் கவிதைத்தாயிடம் விடைபெற்றார்



கவியரசர் இளந்தேவன்

மாரடைப்பால் இன்று (ஆனி 28,2048 / சூலை 12, 2017) மாலை
 மரணம் .


"நம் காலத்து மகாகவி
நம்மைக் கடந்து போகிறான்
சபையே சற்று எழுந்து நில்லுங்கள் "

என்று வார்த்தைச்சித்தர் வலம்புரி சான்
அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர்.

கவியரங்கக் கவிதைகளின் கதாநாயகன்
கவியரசர் இளந்தேவனின் மறைவு
இலக்கிய உலகத்திற்கும்
அவரது குடும்பத்தார்க்கும்
ஈடுசெய்ய முடியாத இழப்பு

 +++++++++++++++
இளந்தேவன் இரங்கற்பா
**************************

கம்பநதி நீஎங்கே ?கவிச்சிகரம் நீஎங்கே?
பொங்கிவரும் புதுப்புனலே எங்கே?--எங்கள்
சந்ததிக்குக் கவிநெய்து தன்மானம் காக்கவந்த
சந்தத்தமிழ் சரித்திரமே எங்கே ?
. (கம்பநதி நீஎங்கே....?.)

போதைதரும் சொல்லெடுத்துப்
பொன்மாலை கட்டிவைத்துப்
போட்டழகு பார்த்தகவி எங்கே ?

காதுகளில் கவுரவங்கள்
கால் கோள் நடத்தவிட
காற்றுவழி தூதுசொல்லஎங்கே ?

மோதவரும் பகைநெருப்பை
மோனையிலேயே தணிக்கவரும்
முகையவிழ்ந்தமுல்லைநீ எங்கே?

சோதிக்கே சோதிதர
சொக்கவைக்கும் பாட்டெடுக்கும்
சுடர்முகமே சுவைத்தமிழே எங்கே ?

தன்மானத் தாய்ப்பாலில்
தழைத்துவந்த கவித்தேக்கே
தனிவானச் சூரியனே எங்கே ?

என்கால மகாகவி
எழுந்துநீ நடந்திருக்க
எட்டுத்திசை எழுந்துவரும் !எங்கே ?

பொன்னுருக்கி இழைப்பாவில்
பொற்கால வரி யெடுத்துப்
போட்டுநெய்த கவியரசே எங்கே ?

இன்னுமொரு நூற்றாண்டு
இளந்தேவன் நூற்றாண்டு
என்னும்படி வாழ்ந்திருப்பாய்
எங்கே ?

**********************************************
கவிக்கோ துரைவசந்தராசன்.
************************************************

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்!

அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின்

தனித்தன்மையைக் காக்க இணையுமாறு

வேண்டுகோள்!

அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்  முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள்.
  தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும்  நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று  முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் இணைய விரும்பும் அமைப்புகள், அழைப்பிதழில் குறிப்பதற்காகத் தங்கள்அமைப்பின் பெயர்,  பேசி எண், மின்(னஞ்சல்முக)வரி, முகவரி முதலிய விவரங்களை 9884481652 எண்ணிற்கு க்குறுந்தகவல் அனுப்பி அல்லது  thiru2050@gmail.com  மின்வரிக்குத்  தெரிவிக்க வேண்டுகின்றோம். இடம் முடிவானதும் தெரிவிக்கப்படும்.
  இது தொடர்பான தீர்மானத்தை வழி மொழியும் வகையில் நேரக்கட்டுப்பாட்டுடன் 5 நிமையம் பேச விழைவோர் தங்கள் பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர்.
“உதவாதினி ஒரு தாமதம்”
“கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரி சுகுமாறன்
இறைஎழிலன்
அமிழ்த இளவரசன்
மாம்பலம் சந்திரசேகர்
முத்துசெல்வன்

செவ்வாய், 11 ஜூலை, 2017

கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் : இணையத்தளத்தில் காணலாம்




அகரமுதல 194, ஆனி 25, 2048 / சூலை 09, 2017



கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம்
இணையத்தளத்தில் காணலாம்
  காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய்-எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி!
  அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் எ.எ.(.என்.ஜி.சி.) நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, கதிராமங்கலம் கதறல் என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது.
ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான மொழிப்போர் – 1965” படத்தைப் பன்மைவெளி வெளியிட்டது. இதனையடுத்துக், காவிரிப்படுகையில் எண்ணெய்-எரிவளிக் கழக அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் முதல் ஆவணப்படமாக இந்தப் படத்தைப் பன்மைவெளி வெளியிடுகின்றது.
“மொழிப்போர் – 1965” ஆவணப்படத்தின் இயக்குநர் க. அருணபாரதி, “கதிராமங்கலம் கதறல்” படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் இஞ்சக்காடு பாலச்சந்திரனின் புகழ் பெற்ற “இனி வருமொரு தலைமுறை” பாடலின் தமிழ் வடிவம் படத்தில் இடம்பெற்றுள்ளது. குடந்தை அன்பு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த 20.06.2017 மாலை குடந்தையில் கதிராமங்கலம் காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் இந்த ஆவணப்படத்தை வெளியிட, கதிராமங்கலம் மக்கள் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது இப்படம் முழுவதுமாக Youtube (யூடியுப்) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனைப் பார்க்க வேண்டியதும், பகிர்ந்து பரப்ப வேண்டியதும் நம் கடமை!
இணைய முகவரி: https://www.youtube.com/watch?v=p2BFXherg_s&t=123s
உரூபாய் 50 விலையிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படக் குறுந்தகட்டை, அஞ்சலில் பெற விரும்புவோர் உரூ. 80 கட்டணத்தைப் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
வங்கிக் கணக்கு விவரம்
வங்கிப் பெயர்: இந்தியன் வங்கி
கணக்குப் பெயர் : K.BALAKUMARAN
கணக்கு எண்: 715139157
கிளை: தியாகராயர் நகர். சென்னை.
IFSCCODE: IDIB000T014
கணக்காளர் கைப்பேசி: 98408 48594

வங்கிக் கணக்கில் தொகை செலுத்தியோர், அதற்கான சான்றோடு – அவர்களது முழுமையான அஞ்சல் முகவரியை, பன்மைவெளி வெளியீட்டகத்தின் முகநூல் பக்கத்தில் தெரிவித்து, குறுந்தகட்டைப் பெறலாம்!
பன்மைவெளி வெளியீடு
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/panmaiveli
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com