சனி, 10 ஆகஸ்ட், 2019

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019: – கருத்தரங்கம்

27, 2050 / 12.8.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
இடம்: பட்டம்மாள் நடேச(முதலியா)ர் திருமண மண்டபம். பாலாண்டீசுவரர் கோயில் தெரு, மாங்காடு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 – கருத்தரங்கம்

தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்) 
வரவேற்புரை: டி.ஆர்.சான்வெசுலி(பொதுச் செயலாளர்) 
முன்னிலை:
சு.உசாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்).
க.செயராமன் (தலைமை நிலையச் செயலாளர்) 
கருத்துரை வழங்குவோர்:
பு.பா.பிரின்சு கசேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), 
கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம்),
தே.தயாளன் (செயல் தலைவர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்)
நன்றியுரை: ப.(உ)ருக்குமாங்கதன் (மாநிலப் பொருளாளர்)

செல்வி நிலா தங்கவேலு – அரங்கேற்றம்

அகரமுதல

ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00
இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை

உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும்
திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும்
திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான

செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்



திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

17

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)

அறநெறியில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாமல், மானம் உடையவனே சிறந்த அரசன் என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளர்கள், அதிகாரம் குவிந்துள்ளதால் அறநெறியில் இருந்து விலகி வாழக்கூடாது என்கிறார்.
தமிழ்நெறி என்பது அரசும் அறநெறியில் நடக்க வேண்டும் என்பதே. சங்கப்புலவர்களும் இதையே வலியுறுத்துகின்றனர்.
அறம் நனி சிறக்கஅல்லது கெடுக!
எனப் புலவர் ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 7) கூறுகிறார்.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
என மதுரை மருதன் இளநாகனார் (புறநானூறு 55) கூறுகிறார்.
பரிமேலழகர், “அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல்” என விளக்குகிறார்.
பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார், இக்குறளுக்கான விளக்கத்தில் “அரசியல் என்பது அறநெறி இல்லாதது என்ற கருத்து மேலாங்கியுள்ளது. அறநெறி தவறிச் சென்றால்தான் அரசியலை வெற்றியாக நடத்த முடியும் என்று நினைப்போர் பலர். ஆனால் குறள்நெறி, அறநெறியொடு பொருந்தியதே அரசியல் என்று கூறுகின்றது. ஆதலின் அரசுபுரி பணியினை மேற்கொண்டுள்ளோர் அறநெறிகளிலிருந்து தவறுதலே கூடாது. அறநெறிக்குப் புறம்பானவற்றைத் தாமும் செய்யாது பிறரும் செய்யாமல் பாதுகாத்தல் வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
கருநாடகச் சட்டமன்றத்திலும் பிற சட்ட மன்றங்களிலும் நடைபெறும் ஆட்சி மாற்றம் அறநெறியில் இருந்து விலகும் அரசியலாளர்களால்தான் நிகழ்கிறது என்பது கண்கூடு. பண ஆசை, பதவி ஆசை ஆகியவற்றுக்காக அறநெறியில் இருந்து விலகி அறமல்லாதவற்றையே புரிந்து சிக்கலை எதிர்கொள்ளும் வீரமின்றி மானமிழந்து நடந்துகொள்வதால்தான் மக்களாட்சிக்கு எதிரானவை சட்டத்தின் ஆட்சி என்ற போர்வையில் அரங்கேறுகின்றன. எனவே, நாட்டை ஆளும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும் பிற மக்கள் சார்பாளர்களும் இத்திருக்குறளைப் பின்பற்றி அறநெறியில் வாழ வேண்டும். இத்தகைய அறவாணர்களையே மக்கள் தங்கள் சார்பாளர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாமும் அறநெறி தவறாமல் அல்லனவற்றை நீக்கி மானத்துடன் வாழ வேண்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 10.08.2019

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்


சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக்

கைது செய்க!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும்.
கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது முதல்வரை ஆங்கிலத்தில் – Chief Minister என்பதைச் – சுருக்கமாகக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சாெற்களாகும். நாட்டின் முதல்வரைக் குறிக்கும் சொற்சுருக்க எழுத்துகளைக் கொண்டு கேப்மாரி என்னும் குற்றக் கும்பலின் பெயராகக் குறிப்பது நாட்டையே அவமதிப்பதாகும். எந்தநாட்டு முதல்வரைக் குறித்தாலும் அது தவறுதான்.
நடிகர்களுக்குத் தங்கள் பெயருடன் தாங்கள் நடித்த படத்தின் பெயர் என்ற முறையில் கெட்டவன், அயோக்கியன், பிச்சைக்காரன், கொலைகாரன் என்ற தீய பண்பினரைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துக் கொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அவ்வாறல்ல.
பொதுவாகச் சாதியைக் குறிப்பிடும் வசைச்சொல் எனில் எதிர்த்துப் போராட ஆட்கள் உள்ளனர். முதல்வரைக் குறிப்பதால் யாரையோ குறிக்கிறது என மக்கள் அமைதி காக்கின்றனர். ஆனால் இத்தகைய வசைச்சொல்லுடன் முதல்வரைக் குறிப்பது நாட்டு மக்களையே இழிவுபடுத்துவதாகும்.
படக்குழுவினர் யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாராட்டிற்குரிய திறமையான கலைஞர்கள்தாம் அவர்கள். எனினும்‘சி.எம். (எ) கேப்பமாரி’ படத்தை எடுப்போர், இயக்குநர், கதையாசிரியர், உரையாடலாசிரியர், பாடலாசிரியர், நடிக-நடிகையர், தொழில்நுட்பக்கலைஞர்கள் முதலான படக்குழுவினர் அனைவரையும் கைது செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பெயருக்கு எதிர்ப்புதெரிவிக்காமல் உடன்படுவதற்குத்தான் படக் குழுவினரை முழுமையாகக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பண்பற்ற முறையில் படப்பெயர் வைக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி இடப்படும்.
படம் முடியும் தறுவாயில் நடவடிக்கை எடுத்தால் படத்திற்கு விளம்பரமாகத்தான் அமையும். எனவே, இப்பொழுதே அரசு காவல்துறை மூலம்நடவடிக்கை எடுக்குமா?

இலக்குவனார் திருவள்ளுவன்,

மின்னம்பலம், 09.08.2019   

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

 16

 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)
 ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே தம்பி தூங்காதே” என்றுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னதுபோல், நீண்ட நேரம் ஆள்வோர் உறங்குவதும் தவறுதான். என்றாலும் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருக்கும் தீப்பண்பு ஆள்வோரிடம் இருக்கக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். பின்னரும் திருவள்ளுவர், “தூங்கற்க தூங்காது செய்யும் வினை”(குறள் 672) என வலியுறுத்துகிறார்.
நாமக்கல் இராமலிங்கம்,  “அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறியவேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும்” ஆள்வோர்க்குத் தேவை என விளக்குகிறார்.
கற்கவேண்டியவற்றைக் கசடறக் கற்றறியும் கல்வி உடையவனாக இருக்க வேண்டும். அஃதாவது அறவியல், ஆட்சியியல், நீதியியல், குடிமையியல் முதலான நல்லாட்சி நடத்துவதற்குரிய துறைகளில் தேவையான கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்.
எதிர்ப்பு எது வரினும் அஞ்சாது மக்களுக்கு நல்லனவற்றை ஆற்றும் துணிவும் தேவை. ஏனெனில் நல்ல செயல்களையும் அரசை எதிர்ப்பதற்காகவோ தன்னலத்தின் காரணமாகவோ எதிர்ப்போர் இருப்பர். அவர்களை அடக்குவதற்குத் துணிவு தேவை. நாட்டில் பல்வகைக் குழுக்கள் இயங்கி வன்முறைகளில் ஈடுபடலாம். அவற்றில் ஈடுபடுவோர் அல்லது அவற்றிற்கு ஆதரவாக இருப்போர், வேண்டியவராக அல்லது துணை நின்றவராக இருக்கலாம். அதற்காக விட்டுக் கொடுக்காமல் அவற்றை ஒடுக்குவதற்குத் துணிவு தேவை. அயல்நாட்டுச் சிக்கல் வரும்பொழுது அல்லது போர் உருவாகும் பொழுது நாட்டு மக்களின் ஆதரவையும் பெற்று அவற்றை எதிர்நோக்கத் துணிவு தேவை.
துணிவு என்பது அரசு வழி தவறும் பொழுது மக்கள் எதிர்த்தால் அரச வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குவதோ “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்”  என்று பாரதியார் சுட்டிக்காட்டிய கொடு நிலையை உருவாக்குவதோ அல்ல. நல்ல செயல்களை நிறைவேற்றுவதற்கான துணிவையும் தீயவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகார மீறலையும் ஒன்றாக எண்ணக் கூடாது.
ஒவ்வொருவருக்குமே காலந்தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவுடைமை தேவை என உணர்ந்து நாம் செயல்படுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 09.08.2019

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!

அகரமுதல

எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019

சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை
மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 416-876-3349

ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்

மில்லிக்கென் பூங்கா
மில்லிக்கென் பூங்கா

குவிகம் இல்லம் – அளவளாவல்

அகரமுதல


ஆடி 26, 2050 / 11.08.2019 மாலை 5.00

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,
சென்னை 600 017

அளவளாவல்
திரு ஆர்.வி.இராசன்
இலக்கிய ஆர்வலர், விளம்பரத்துறை ஆர்வலர்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

15
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில் மனம் கலங்காமல் சிந்தித்து முடிவெடுத்துச் செயல்படுத்த அஞ்சாமை தேவைப்படுகிறது.
பதவிப்பொறுப்புகளில் இல்லாத அரசர்கள், கலைஞர்கள் முதலானவர்கள் பொருள்நிலை குறித்துக் கவலைப்படாமல் தங்கள் புலமையில் ஈடுபாடு காட்ட அரசு அவர்களை ஆதரிக்க வேண்டும். அதற்கு ஈகை தேவை. பஞ்சம், வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் முதலான பெருந்துன்ப நேரங்களில் மக்களுக்கும்  ஈதல் வேண்டும். எனவேதான் ஈகையையும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
ஆனால் உரையாசிரியர் காலிங்கர் ஆரியச் சாதிமுறையைப் புகுத்தி, “ஈகை என்பது கீழ்ச்சொன்ன இல்லறத்து இயல்பாகிய கொடை நெறிக்கு அடங்காது தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு மற்ற அந்தணர் முதலாக, இழிகுலத்தாராகிய புலையர் ஈறாக அனைவர்க்கும் வரம்பற வழங்கும் வண்மை என அறிக.” எனக் குறிப்பிட்டுள்ளார். அனைவர்க்கும் எனக் கூறி இருந்தாலும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவர் இங்ஙனம் கருதியதாகக் கூறுவதே கொடுமைதான்.  தவறாகக் கற்பிக்கப்பட்ட எவ்வகைப் பாகுபாடுமின்றி நாட்டு மக்கள் துயரத்தில் பங்கேற்கும் ஈகைப் பண்பு அரசிற்குத் தேவை என்பதே வள்ளுவர் நெறி.
அரசறிவு, வேளாணறிவு, நீர் மேலாணறிவு, தொழிலறிவு, உளவியலறிவு, உலகநாடுகள்பற்றிய அறிவு, வினையறிவு எனப் பலதரப்பட்ட அறிவுப்புலங்களிலும் சிறந்திருந்தால்தான் நல்லாட்சி தர இயலும். அறிவைக் குற்றத்திலிருந்து காக்கும் கேடயமாக, “அறிவு அற்றம் காக்கும் கருவி” (திருக்குறள் 421) எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். எனவே, குற்றமில்லா ஆட்சிக்கும் மக்களைக் குற்றமில்லாப் பாதையில் செலுத்தவும் அறிவுடைமை ஆள்வோர்க்குத் தேவை என்கிறார் திருவள்ளுவர்.
“அறிவு என்பது மற்று தகுதியும் தகுதியல்லதும் தெரிந்து உணரும் உணர்வு” எனக் காலிங்கர் கூறுகிறார். அத்தகைய தெரிவு உணர்வு இல்லாததால்தான் தகுதியற்ற திட்டங்களைத் தகுதியுடையனவாகக் காட்டித் துன்புறுத்தும் நிலை நாட்டில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஊக்கம்  என்பது மக்களை மேம்படச் செய்வதற்குரிய கொள்கை.” அதற்கு விடா முயற்சியும் எப்பொழுதும் மனம் கலங்காத் தன்மையும் தேவை. ஊக்கம் இருந்தால் மட்டுமே சிறப்பாகச் செயலாற்ற முடியும். எனவே ஊக்கமுடைமையையும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
மேற்குறித்த நான்கு பண்புகளும் ஆட்சித்தலைமைக்கு மட்டுமல்லாமல், கட்சித்தலைமை, நிறுவனத் தலைமை, ஏன், குடும்பத்தலைமைக்கும்கூடத் தேவை. எனவே நாம் ஒவ்வொருவருமே, அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் கொண்டு சிறப்புற வாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 08.08.2019

புதன், 7 ஆகஸ்ட், 2019

காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்! -இலக்குவனார் திருவள்ளுவன்


காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்!

பெரிய மாநிலங்களைப் பிரித்து மாநிலங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டிருந்தது மத்திய அரசு. இப்பொழுது மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துள்ளது. அதே நேரம், ஒன்றியப் பகுதிப் பட்டியலில் இரண்டைச் சேர்த்துள்ளது. 
மாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் அது பிரிக்கப்படும் மாநிலங்களின் கருத்திற்கேற்ப அமைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கேற்ப இருக்க வேண்டும். இப்பொழுது (ஆடி 20, 2050 / 05.08.2019) காசுமீர், இலடாக்கு என ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது அவ்வாறல்ல. காசுமீர்ப் பிரிப்பு ஆணையில் சம்மு காசுமீர் அரசின் உடனிசைவுடன் (with the concurrence of the Government of State of Jammu and Kashmir) அறிவிக்கப்படுவதாக உள்ளது. பொய்யை முதலீட்டாகக் கொண்ட பா.ச.க.  ஆணையிலும் பொய்யைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.
இந்திய அரசியல் யாப்பு விதி 3இன் கீழ் மாநிலப் பிரிவின் அதிகாரம் இந்தியப் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. இருக்கின்ற மாநிலத்தைப் பிரித்துப் புதிய மாநிலம் அமைத்தல், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்துப் பெரிய மாநிலமாக உருவாக்கல், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளை இணைத்துப் புதிய மாநிலமாக ஆக்குதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அதிகாரம் இருந்தாலும் அதை முறைப்படி செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத பொழுது அரசை நடத்தும் ஆளுநருக்கும் தெரியாமல் பிரிவினைச் சட்டம் இயற்றியது தவறு என்றே அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து எதிர்த்த ஆந்திர அரசு ஆந்திரப் பிரிவினைக்காள சட்ட வரைவையும் சட்டமன்றத்தில் எதிர்த்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு தெலுங்கானாவைப் பிரித்தது. எனினும் ஆணையில்  நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரின் ஒப்புகையைப் பெற்று (received the assent of the President) ஆணை பிறப்பிப்பதாகக் குறிப்பிட்டதே   தவிர, ஆந்திர அரசின் ஒப்புதலைப் பெற்றதாகத் தவறான தகவலைத் தரவில்லை.
பாசகவின் நோக்கம் எப்படி இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லமை மிக்கது. காசுமீர்ப் பிரிவினையைக் கமுக்கமாக வைத்திருந்தது பாராட்டிற்குரியது. ஆனால், சட்டப்படித் தெரியவேண்டிய தொடர்புடையவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இருப்பதாகக் காட்டி ஆணை பிறப்பித்தது தவறு. அரசின் ஒப்புதல் என்றால் இன்றைய சூழலில் ஆளுநர் ஒப்புதல் என்றாகிறது. ஆனால், அவரோ அவருக்குத் தெரியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்.
காசுமீர் மாநிலத்தில் படையணிகள் குவிக்கப்பட்டதும் பாக்கித்தானுடன் போர் என்றோ பாக்கித்தான், சீனாவின் பிடியில் உள்ள காசுமீரை மீட்பதற்கான போர் என்றோ மக்கள் எண்ணவில்லை. கமுக்கமான செய்தியாக இருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு காசுமீர், சம்மு, இலடாக்கு என மூன்றாகப் பிரிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வந்தன.
காசுமீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் இந்திய அரசியல் யாப்புப்பிரிவு 370 ஐ நீக்கப் போவதாகவும் காசுமீரைப் பிரிக்கப்போவதாகவும் எதிர்க்கட்சி பரப்புவது தவறு என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல காசுமீர்ப் பிரிவினைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள முறை தவறு என்பதை அக்கட்சியின் ஊதுகுழலாகவும் தான்தான் தமிழ்நாட்டில அக்கட்சியின் எல்லாமும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் எழுதியதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.  
“‘காசுமீரில் என்ன நடக்கிறது?’: ….. இந்தக் கடுமையான நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போன எதிர்க்கட்சிகள், காசுமீருக்கு விசேட அந்தத்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 370, பாகித்தானிலிருந்து காசுமீருக்கு வந்த 1.5 இலட்சம் இந்து அகதிகளுக்குக் குடியுரிமை கிடையாது என்று கூறும் 35- ஆகிய இரண்டையும் இரத்து செய்யவும், காசுமீரை மூன்றாகப் பிரிக்கவும் சதி நடக்கிறது என்று கிளப்பிய பெரும் புரளியை காசுமீர் ஆளுநர் மறுத்திருக்கிறார்.
அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசு ஆணை மூலமாக 1954 இல் பிரிவு 35- அரசியல் சாசனத்தில் முறையற்று நுழைக்கப்பட்டது. அதை நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசுமீரை மூன்றாகப் பிரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. எனவே, அரசியல் கட்சிகள் அந்தப் பிரச்சினைகளை எழுப்புவது முறையல்ல. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். காசுமீர்  போன்ற சிக்கலான பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடனும், பொறுமையுடனும் இருப்பது நாட்டுக்கு நல்லது.” (துக்ளக்கு நாள் 4.8.2019).
சட்டப்படி நிறைவேற்ற இயலாது என்றால் நிறைவேற்றியது சட்ட மீறல்தானே! எதிர்க்கட்சிகள் கூறியபடி மூன்றாகப் பிரிக்கவில்லை என்றாலும் இரண்டாகப் பிரித்துள்ளதுதானே! அதுவும் ஒன்றியப் பகுதிகள் மாநிலத் தகுதியைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது காசுமீரீன் மாநிலத் தகுதியைப் பறித்தது ஏன்?
மாறாக மத்திய அரசு, சட்டமன்றத்தேர்தலில் காசுமீர்ப் பிரிவினையைத் தேர்தல் முழக்கமாகக் கொண்டு மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப முடிவெடுத்திருக்கலாம்.
நாடெங்கும் தாமரை மலரப் பிற மாநிலங்களையும் பிரிக்கட்டும்!தென்தமிழகம் எனத் தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினால் அதிமுக சிக்கலும் தீரும். அல்லது இதுவும் பெரிய பகுதி, தாமரை மலராது என எண்ணினால், பாண்டியநாடு, சோழநாடு, கொங்கு நாடு, பல்லவ நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பா.ச.க.விற்கு இடம் கொடுக்காத கேரளாவையும், திருவனந்தபுரம் முதலான தமிழ் மக்கள் மிகுதியாக உள்ள பகுதிகளை இணைத்துச் சேர நாடு அமைக்கலாம். கருநாடகாவிலும் மைசூர், பெங்களூரு, கோலார் முதலான தமிழ்பேசுவோர் பெரும்பான்மையர் இருந்த பகுதிகளை இணைத்து வடதமிழ்நாடு என ஒன்றியப் பகுதியை உருவாக்கலாம்.
அல்லது வட கருநாடகம், துளு நாடு ஆகியவற்றுக்கான மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை உருவாக்கலாம். அசாமில் இருந்து கமதாபூர், திரிபுராவில் இருந்து திப்பரலாந்து, மேற்கு வங்கம் தார்சிலிங்கு பகுதியில் கூர்க்காலாந்து, மணிப்பூரில் இருந்து குகிலாந்து, வடக்கு வங்கத்தைப் பிரித்துக் காமத்பூர், மகாராட்டிராவைப் பிரித்து விதர்பா, குசராத்தைப் பிரித்து செளராட்டிரா  என்று தனி மாநிலக் கோரிக்கைகளை ஏற்று அவற்றை ஒன்றியப் பகுதிகளாக அமைக்கலாம். இவ்வாறு 50 புது மாநிலங்கள் உருவாவதுடன் அரசே பெரிதாக இருக்கும் தன் கட்சிச் செல்வாக்கு இல்லா மாநிலப் பகுதிகளைப் பிரித்து 100 ஒன்றியங்களை உருவாக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்னும் பா.ச.க.வின் இலக்கு எளிதில் நிறைவேறும்.
மாநிலப்பகுதிகளின் வளர்ச்சிகளைக் காரணங்காட்டித் தங்கள் வளர்ச்சிக்காகவும் பா.ச.க. இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் வியப்பதற்கில்லைதானே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல