இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2.
செல்லப் பாட்டி
வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார். இராமசாமிக்கு ஆறுவயது ஆகும் போது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணிர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்டபோது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த ‘பெரிய சாதி’யாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக்கூடாது என்பதற்காகச் சில சமயங்களில் காலில் விலங்குக்கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார். சிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமி “அடங்காப் பிடாரி” ஆகி விட்டார். அதனால் டிாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத்தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார். பிறகு அவர் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு சென்றும். அவருடைய குணம் மாறவில்லை. குறும்பு செய்வதும், கூடப்படிக்கும் மாணவர்களை வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் தண்டிக்க வந்த ஆசிரியரையே அடித்து விட்டார்.
ஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்த இராமசாமியை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்கள். பத்து வயதோடு அவருடைய படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அதன் பிறகும் அவர் தன் குறும்புத் தனத்தை விடவில்லை. வீட்டிற்கு வந்து இராமாயணம்,பாகவதம் படிக்கும் பண்டிதர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பார்.
உலகத்தைப் பாயாகச் சுருட்டிய இராட்சதன் எங்கே நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்பார். பாகவதர் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்.
எதிரில் நின்று சண்டையிட முடியாமல் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு விட்ட இராமன் வீரன்தானா? என்று கேட்பார். பண்டிதர்கள் மழுப்புவார்கள்.
இப்படிப் புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளை யெல்லாம் அப்பட்டமான தன்து பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார். ஒரு நாள் இராமநாத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் “எல்லாம் தலை விதிப்படிதான் நடக்கும்“ என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக்கீழே தள்ளி விட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இராமநாத(ய்ய)ர் தலையில் விழுந்தது. தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளி விட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய்? என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி! வெங்கட்டர் உழைத்து முன்னேறியவர்
பட்டறிவுப் படிப்பால் உயர்ந்தவர். தன் மகன் படிப்பை நிறுத்திய அவர் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அதன் பிறகு இராமசாமி பொறுப்புள்ளவராக மாறினாலும், புராணங்களைக் கிண்டல் செய்வதையும், பண்டிதர்களை மட்டம் தட்டுவதையும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டார். இராமசாமிப் பெரியாரின் அண்ணன் கிருட்டிணசாமி. அவர் மூத்த பிள்ளை. பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். விரதங்கள். நோன்புகள் இருந்து, வெங்கடாசலபதியை வேண்டிக் கொண்ட பின் பிறந்தவர். எனவே பெற்றோருக்கு அவர் மீது ஆசை மிகுதி.
(தொடரும்)
பாவலர் ்நாரா.நாச்சியப்பன்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு