சென்னை:"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குழுவில் இடம்பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து தான் தி.மு.க., முடிவு எடுத்தது. இது, கோர்ட்டுக்கு எதிர்ப்பானது அல்ல' என்று சட்ட அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தமிழகம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் 2006 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள அரசு, "கேரளா பாசன மற்றும் பாதுகாப்பு திருத்தச் சட்டம் -2006' என்ற சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் போனாராம். அந்த வழக்கை கருணாநிதி முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2006 மார்ச் 31ம் தேதி தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர ஒரு மனுவை ஜெயலலிதா போட்டாரே தவிர, அந்த மனுவுக்கு ஒரு நம்பரை கூட வாங்க வில்லை. நம்பர் போடாத வழக்கு விசாரணைக்கே வராது.
தி.மு.க., அரசு அமைந்த பின் தான், அந்த மனுவுக்கு நம்பர் வாங்கி, அதை கோர்ட் விசாரணைக்கு தகுதியுள்ளதாக்கி, வழக்கையும் நடத்தி வருகிறோம். ஜெயலலிதா காலத்தில் இந்த முல்லைப் பெரியாறு வழக்கில் வாதாடிய அதே வக்கீலும் சேர்ந்து தான் இப்போதும் தமிழகத்துக்காக வாதாடி இருக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல்கள் வாதம் சிறப்பாக இருக்குமாம், கருணாநிதி ஆட்சியில் சிறப்பாக இருக்காதாம். இது என்ன வாதமோ?
இவ்வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பிய போது நாம் ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இவ்வழக்கை, எந்த பிரிவு "பெஞ்ச்' விசாரிக்க வேண்டுமென முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை. அதை நாம் எதிர்க்க முடியாது. இவ்வழக்கு இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை.இதில் அரசியல் சட்ட சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கியிருக்கிறது என்று கோர்ட் கருதினால் அதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றும் முழு அதிகாரம் நீதிமன்றத்துக்கு தான் உண்டே தவிர அதை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.
ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறாவிட்டால் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரளாவின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா, இல்லையா என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு; மீண்டும் அணையின் பலத்தை சோதித்து பார்க்க, நீரின் உபயோகத்தை கண்டறிய என்று தான் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது.
ஐவர் குழுவில் இடம்பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்துக்கு ஆதரவாகி விடும்?இன்னும் சொல்லப்போனால், இந்த ஐவர் குழுவை வரவேற்றிருக்கிறார் கேரளா முதல்வர். அதுமட்டுமல்ல, இந்த குழு அமைக்கப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு ரத்தாகி விட்டது என்றும், தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்போது புரிகிறதா ஜெயலலிதாவுக்கு, ஐவர் குழு யாருக்கு சாதகம் என்று?
இந்திய அரசியல் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர், சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை விமர்சிக்கலாமா என்றும் ஜெயலலிதா கேள்வி கேட்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஒரு பெஞ்ச் அல்ல, சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்.
அந்த சுப்ரீம் கோர்ட், பெரியாறு அணை பிரச்னையில் ஒரு தீர்ப்புச் சொல்லி, அதை இரண்டு முறை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்த பின்பும், அந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரளா ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றி விட்டதே, அதற்கு கேரளா அரசு பெற்றிருக்கிற தண்டனை என்ன?ஒரு குழுவில் இடம் பெறுவதும், பெறாமல் இருப்பதும் நமது விருப்பம். நாட்டு நலன் கருதி, குழுவில் பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கிற முடிவு. நீதிமன்றத்துக்கு எதிர்ப்பானது அல்ல.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பிரதமர், கேரளா முதல்வர்களுடன் எட்டு முறைக்கு மேல் முதல்வர் கருணாநிதியே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா தன் ஆட்சியில் ஒரு முறையேனும் இப்படி கலந்து உரையாடியது உண்டா?
பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கும், முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 15 முறை கடிதங்களை முதல்வர் எழுதியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் மூன்றே மூன்று தான். இந்த லட்சணத்தில் கருணாநிதி உரிமையை விட்டு விட்டதாக அறிக்கை வேறு விடுகிறார்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.