வியாழன், 9 ஜனவரி, 2014

நூலகத்தில் ஆங்கில நடைமுறை - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்



நூலகத்துறை விண்ணப்பப் படிவங்களை
ஆங்கிலத்தில் நிரப்ப நிபந்தனை விதிப்பதா?

தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம்

சென்னை, சன.8. -
நூலகத்துறை விண்ணப்பப் படிவங்களை ஆங்கிலத்தில் நிரப்ப நிபந்தனை விதிப்பதா? என்று நூலகத்துறைக்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பாக இதன் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
  தமிழ்நாட்டரசின் பொதுநூலகத்துறைத் தமிழைப் புறக்கணித்துத் தமிழுக்கு அநீதி  இழைத்து வருவாகக் குற்றம்சாட்டிக் கண்டனம் தெரிவித்துள்ளார், தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவர் இலக்குவனார்திருவள்ளுவன்.

   புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்காக நூலகத்துறை, விண்ணப்பப்படிவங்களையும் விதிமுறை விவரங்களையும்  வெளியிட்டுள்ளது. இவை ஆங்கிலத்தில் உள்ளன. மேலும், ஆங்கிலத்தில்தான் நிரப்பப்படவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நூலகத்துறை அலட்சியம்

      விண்ணப்பங்கள் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று கடந்த நூற்றாண்டிலேயே ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவை பின்பற்றுப்படுவதில்லை. கடந்த ஆண்டும் இவ்வாறு ஆங்கிலத்தில்தான் இவை இருந்தன.
       அப்பொழுதே தமிழில் வெளியிடுமாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் வேண்டுகோள் மடல் அனுப்பப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்ககத்திடமும் முறையிடப்பட்டது.
    தமிழ் வளர்ச்சி இயக்ககம், அரசாணைகளுக்கிணங்கத் தமிழிலேயே வெளியிடுமாறு அறிவுரை வழங்கியது. இருப்பினும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் அறிவுரைக்கு நூலகத்துறை செவி மடுக்கவில்லை.

     மேலும், நூலகத்துறையால் தமிழ்புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு  இதன் விதிமுறைகளே சான்றாகும்.
பக்கக்கட்டுப்பாடு

    படிவம் வரிசை எண் 11 இலும் 12 இலும் தமிழுக்கு மட்டும் புத்தகத்தின் அளவும்  நூற்கட்டுமுறையும் குறிப்பிட வேண்டும். ஆங்கில நூல்களின் அளவும் தரமும் எவ்வாறும்  இருக்கலாம் என்கிறது. மொழியால் வேறுபாடு காட்டுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். தமிழ்நாட்டிலேயே தமிழைப் புறக்கணிக்கும் பொது நூலகத் துறைக்குத் தமிழ்க்காப்புக்கழகம் தன்கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

     நூலிற்கு விலை வரையறுக்கும்போது, நூலின் பக்கம், தாளின் தரம் முதலான புறத்தன்மைகளை மட்டும் கணக்கிட்டுக் குறைவாக வரையறுக்கிறது. அவ்வாறு  இல்லாமல், நூலின் தரத்தையும் கணக்கிட்டு உரிய விலை தரவேண்டும் என்றும் தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகின்றது.

      64 பக்கங்களுக்குக் குறையாத நூல்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது ஒரு விதி. பொன்மொழிகள், பொதுஅறிவுத் தகவல்கள், பழமொழிகள், அறிவியல் செய்திகள் என்பன போன்றன குறைவான விலையில் குறைந்த பக்கங்களில்தான் வெளிவருகின்றன.
    நூலகத்தின் விதியால், இவை போன்ற பொதுஅறிவு நூல்கள் நூலகத்தில் இடம் பெறும் வாய்ப்பை இழக்கின்றன. எனவே,  பக்கக் கட்டுப்பாட்டை நீக்குமாறும் தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகின்றது.

இவ்வாறு தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியுள்ளார்.
நன்றி : மாலைமுரசு, தினகரன்