திங்கள், 13 ஜூலை, 2009

யுத்தத்தின் பின்னான பாதக விளைவுகளுக்கு முடிவுகட்ட உண்மை கண்டறியும் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் நல்லிணக்கம் ஏற்பட அவசியம் என மூத்த கல்வி மான்கள் வலியுறுத்து




நலன்புரி முகாம்களில் ஆள்கள் காணா மல் போவதும் ஏனைய மனித உரிமை மீறல் களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை எவரால் செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட் டவர்களின் குடும்பங்களை அவர்களின் மனங்களை, வாழ்க்கையை அடிக்கடி அச் சுறுத்திக்கொண்டிருக்கும்.
ஆகவே அந்தப் பாதக விளைவுக்கு முடிவு கட்ட உண்மை கண்டறியும் ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும்.
இது விடயத்தில் அனைத்து சமூகங்க ளும் ஒன்றுபடாமல் தீர்வு ஒன்றினை எட்ட முடியாது.
இவ்வாறு இலங்கையின் மூத்த கல்வி மான்கள், பத்திரிகையாளர்கள், புத்திஜிவி கள் அடங்கிய இலங்கையில் சிரத்தை கொண்ட தமிழர்களின் குழு தனது நான்கா வது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் நல்லிணக்கம் இதில் மிகவும் அவசியமானது என்று அந்த அறிக்கையில்

சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலாநிதி தேவநேசன் நேசையா, பாக்கியசோதி சர வணமுத்து, பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், கலாநிதி முத்துகிருஸ்ணன் சர்வா னந்தா ஆகியோர் உட்பட பலர் அடங்கிய குழுவினால் இந்த அறிக்கை விடுக்கபட் பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் விவரம் வரு மாறு:
இலங்கையின் சிரத்தை கொண்ட தமிழர்களாக நாம் ஏன் கையொப்பம் இடுகிறோம். எங்களது அறிக்கையின் ஒவ்வாரு ஷரத்திலும் ஏராளமான தமிழரல்லாத இலங்கையரின் சம்மதம் பற்றாக்குறையாக இருப்பதல்ல இதற்குக் காரணம்.
எங்களது பிரச்சினைகள் பற்றி மற்றெல்லா இடங்களிலும் தமிழரின் குரல்கள் பலமாகவும் துல்லியமாகவும் ஒலிக்கின்றன. துரதிஷ்ட வசமாக எமது நாட்டுக்குள் தமிழர்களின் சுயாதீனமான குரல்கள் முடக்கப்பட்டு விட்டன. இத்தகைய ஆபத்தமான நிலையில் எங்களது சிரத்தையை இலங்கைத் தமிழர்கள் என்ற ரீதியில் கூட்டாகத் தெரிவிப்பதற்கு உரிமையும், கடமையும் எமக்குண்டு என நாம் நம்புகிறோம்.
தமிழ் அரசியல் வாதிகள் மாத்திரம் தமிழர்களுக்கான ஏகபோக பேச்சாளர்களாக இருக்க முடியாது. சுயாதீனமான தமிழ்க் குரல்களும் அவ்வப்போது செவிமடுக்கப்படல் அவசியம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் நிலை குலையும் எல்லைக்குத் தள்ளப்படும் வரைக்கும் இந்தச் சிரத்தை ஏன் எங்களுக்கு ஏற்படவில்லை என்ற கேள்வி ஒன்றும் தொடுக்கப்படுகிறது. முதலாவதாக புலிகள் இயக்கத்தின் ஆதிக்கத்தில் இருந்த குறுகிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை, ஊடகங்கள் வெளியிட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமெனவும், பலியானோரின் எண்ணிக்கை கூறப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்றும் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
சர்வதேசசெஞ்சிலுவைச்சங்கமும் ஐ.நா. நிறுவனங்களும் வெளியிட்ட உண்மையான தகவல்களால் விழிப்படைந்த பின்னரே எமது முதலாவது அறிக்கையை தயாரித்தோம். அந்த அறிக்கையின் பிரதான இலக்கு சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குள் சிக்கிக் கொண்ட மற்றும் காயமடைந்த பொதுமக்களுக்கு அவசர நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுகளை முன்னெடுப்பதன் மூலம் சிக்கிக் கொண்ட பொதுமக்களை முற்றாக விடுவிப்பதுமேயாகும்.
முதலாவது அறிக்கையில் எமது பயம் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டிருந்தது:
இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பாங்கும் அது செயற்படுத்தப்பட்ட முறையும் இலங்கையின் எதிர்கால இன நல்லுறவுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
சிரத்தை கொண்ட இலங்கைத் தமிழர்கள் என்ற ரீதியில் தமிழர்களினதும் தமிழரல்லாதவர்களினதும் இன பேதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை மீளாய்வு செய்யுமாறு பல தசாப்தங்களாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளோம். இன்று உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களினதும் 30 லட்சத்துக்கு அதிகமான இலங்கைத் தமிழர்களினதும் எதிர்காலம் இந்நாட்டின் எல்லைக்குள்ளேயே தங்கியிருக்கிறது.
இன அங்கீகாரத்தை நிலைநிறுத்தல்
வெளிநாடுகள் எம் மீது காட்டும் கரிசனையையும் அவை வழங்கும் உதவிகளையும் மிகவும் வரவேற்கும் அதேசமயம், எமது எதிர்காலம் பற்றி ஆக்க பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இலங்கை நாட்டுக்குள் எமது இன அங்கீகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டுமெனவும் ஆதங்கப்படுகிறோம்.
இந்நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நாம் தொடர்ந்தும் தனிப்பட்ட மற்றும் கூட்டு உரிமைகளுடன் வேறெந்த இனத்துக்கும் இரண்டாம் பட்சநிலையின்றி வாழ்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம.
எமது உடனடியானதும் முதன்னைமயானதுமான இலக்கு உள்நாட்டில், விசேடமாக வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் தங்கியிருக்கும் சுமார் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பொதுமக்களாகும். இவர்கள் அனைவரும் யுத்தத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களே தவிர, யுத்தக் குற்றவாளிகள் அல்லர். ஏனைய பிரஜைகளுக்கு உள்ள சகல உரிமைகளும் இவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் இழப்புகளுக்கும் உரிய நட்ஷஈடுகள் வழங்கப்பட வேணள்டும்.
அதற்குப் பதிலாக அவர்கள் யுத்தக் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்குள்ள முக்கிய அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதும், மறுக்கப்படுவதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தொடர்பாடல் சுதந்திரம், நட்பு சுதந்திம், நடமாடும் சுதந்திரம் முதலியவை மறுக்கப்படுவதுடன் அவரவர் சொந்த இடங்களில் தத்தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
யுத்தத்தின் காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஒருபுறமிருக்க மிகுதியாக உயிர் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன்,எவ்வித சட்டதிட்டங்களுக்கும் உட்படாத வகையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைதுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடம்பெயர்ந்த பொதுமக்களில் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பற்றிய தெளிவான தகவல்கள் உடனடியாக வெளிப்படுத்தப்படல் அவசியம்.
அத்துடன், ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் எதுவுமே நிரூபிக்கப்பட்டிராதவர்களும் கூட இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியும் எழுப்பப்படுகிறது. மக்களை விசாரித்துக் கொள்ளும் வண்ணம் சட்டத்துக்கு முரணான நியாயமான பூர்வமற்ற செயற்பாடுகளின் மூலம் பாதுகாப்பு என்றுமே எட்டக் கூடிய ஒன்றல்ல.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்
செயற்பாடுகள் தொடர்கின்றன
அகதிமுகாம்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் பற்றிய ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனைப் பற்றிய சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் அத்தகைய தகவல்களைச் சேகரித்துக் கொள்வதற்கு பல முட்டுக்கட்டைகள் இன்னும் இருப்பதே. எவ்வாறாயினும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்ந்தவாறே இருக்கின்றன என்பது எமக்குத் தெளிவாகின்றது.
அரசாலோ விடுதலைப்புலிகளாலோ அல்லது வேறெந்த குழுவாலோ முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வேட்டையாடும் நடவடிக்கையாகவே அமையும்.
இவ்வாறான பின் விளைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாயின் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது அவர்களது சார்பாக ஆக்க பூர்வமான ஒரு நியாயக் குழு இயங்க வேண்டியது அவசியமாகிறது. உலக நாடுகள் பலவற்றில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1990 1998 ஆம் ஆண்டுகளில் மனிதவுரிமை ஆணைக் குழுவில் யாழ். பிராந்தியத்தில் அமைக்கப்பட்ட காணமற்போனோர்களுக்கான ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட எம்மில் ஒருவருக்கு ஏற்பட்ட தெளிவான அறிவின் அடிப்படையில் நாம் மேற்கூறிய கருத்துகளும் பரிந்துரைகளும் பொருத்தமாக இருக்குமென நம்புகிறோம்.
கடந்த பல வருடங்களாக காணாமல் போனோர்களின் விடயத்தில் இம்மக்கள் சமூக பொருளாதார தாழ்வுக்கும் மேலாக உடல், உள ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகள்,தொழிற்பயிற்சிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படல் வேண்டும். பெரும்பாலானோருக்கு இது மாற்று வழியில்லையெனினும் நெருக்கமான உள் இணைப்புகள் உள்ளன. திறமையுள்ளவர்கள், வசதியுள்ளவர்கள் போன்றோர் கூட மன அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக தமது ஜீவாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது தடுமாறுகின்றனர்.
எனவே அனைத்து சமூகங்களும் ஒன்று படாமல் எந்தவொரு தீர்வும் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இல்லை.
முரண்பாட்டுக்கு முன்பான நியாய மற்றும் நல்லிணக்க கோட்பாடுகளுக்கு இது முன்மாதிரியாகிறது. அவ்வாறான நடவடிக்கைகள் கால எல்லைக்கு உட்பட்டவை எனினும், அதன் விளைவுகளும் செயற்பாடுகளும் முக்கியத்துவமானவை. இவ்வாறான நடவடிக்கைகள் எந்த இனத்தையோ சமூகத்தையோ உட்படுத்தாமல் நாடளாவிய ரீதியில் சகல இலங்கையர்களுக்கும் நன்மை பெறும் விதத்தில் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக