'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று
பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல! "எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார்.
"சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?"
"திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்குகின்றனவா? வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்! எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம்!"
"நளினியை விடுதலை செய்வது குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகள், உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்தது?"
"நளினி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர, அவர் கொலையாளி அல்ல. நடக்கப்போகும் விபரீ தத்தைத் திருப்பெரும்புதூர் சென்றடையும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப் பட்ட ஒரு பெண்ணை, அவர் இத்தனை ஆண்டுகள் சீரிய முறையில் சிறையில் கழித்த பிறகும் விடுதலை செய்ய மறுப்பது, மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் நளினி விடுதலைக்கான 'கையெழுத்து இயக்கம்' தொடங்கினோம். முதல்வரிடம் விண்ணப்பத்தைக் கையளித்தபோது, அவரும் நளினி விடுதலையையே விரும்புவதாகக் கூறினார். பிறகு, நடந்தவற்றை நாடறியும். நளினி விடுதலையை மறுப்பதற்குப் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் இருப்பது புரிகிறது. இப்போதும் அரசிடம் நாங்கள் வேண்டுவது, மனித உரிமைகளின் பெயரால் நளினியை விடுதலை செய்யுங்கள் என்பதே!"
"பொதுவாக, எல்லா சினிமாப் பாடலாசிரியர்களும் பாராட்டுக் கவிஞர்களாக மாறிவிட, நீங்கள் மட்டும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குவது எப்படி?"
"அரசுக்கு எதிராக இயங்க வேண்டும் என்று எனக்கு 'வேண்டுதல்' ஒன்றும் இல்லை. நான் மக்களில் ஒருத்தி. மக்களுக்கு எதிராக அரசு மாறும்போது, அரசுக்கு எதிராக நான் மாறுகிறேன். இந்த அரசு மட்டுமல்ல; வேறு எந்த அரசு வந்தாலும் இதே நிலைப்பாடுதான். அரசு, தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் கேடு செய்யும்போது, எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். அது ஒரு படைப்பாளியாக என்னுடைய கடமை. அதுவே தமிழினத்துக்கு நல்லது செய்தால் பாராட்டத் தயங்க மாட்டேன்.
தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன்; அனைவருக்கும் தமிழில் கல்வி கிடைக்கச் செய்யட்டும். பாராட்டுகிறேன். நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யட்டும். பாராட்டுகிறேன். மதுவை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன். ராஜபக்ஷே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றட்டும்... பாராட்டுப் பத்திரமே வாசித்து விடுகிறேன்!"
"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"
"போரோடு முடிந்துவிடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"
"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?"
"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டுவைத்துள்ளார்கள். நான் புதி தாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!"
"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?"
"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!"
"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடை வுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?"
"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து
நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"