ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில் கைது செய்க!
மதுரையில் நிருமலா தேவி என்னும் கல்லூரி ஆசிரியை, மாணாக்கியரை ஒழுக்கக் கேடான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்காவலில் உள்ளார். இது தொடர்பில் உயர் அலுவலர்களுக்கும் பங்கு உண்டு என்று அவர் மூலம் தெரிய வந்த பொழுது தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து மீதும் குற்றச் சாட்டு புகைந்தது. தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என விளக்க ஆளுநர் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். தன் மீது களங்கம் இல்லை எனக் கூற வந்தவர் கூட்டத்தில் பெண்களிடமிருந்து விலகி நடந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், வழக்கம்போல் ஆளுநர் தாத்தா ‘வீக்கு’ என்னும் இதழின் மூத்த இதழாளர் இலட்சுமி சுப்பிரமணியம் கன்னத்தில் தட்டியுள்ளார்.
இது குறித்து இதழாளர் இலட்சுமி சுப்பிரமணியம், தன் முகத்தைப் பல முறை கழுவியதாகவும் இருப்பினும் அதிலிருந்து மீள முடியவில்லை என்றும் 17.04.2018 அன்று தன் பகிரியில் ( வாட்சுஅப் ) குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் உலகம், மகளிர் உலகம், பாசக தவிர்த்த பொதுமக்கள் ஆளுநரின் செயலுக்குக் கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
உயர்ந்த பொறுப்பில் உள்ளவரின் தாழ்ந்த செயலாக அனைவரும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவந்தனர். ஆளுநர், நல்ல கேள்வி என்பதால் பாராட்டும் வகையில் கன்னத்தைத் தட்டியதாகக் கூறுவது ஏற்கும்படியாக இல்லை, பாலியல் முறைகேடு குறித்த ஒழுக்கக்கேடுசார்ந்த கேள்வியை எப்படி நல்ல கேள்வி என்று சொல்ல முடியும்? நல்ல கேள்வி என்றால் மறுமொழி கூறியிரு்கக வேண்டியதுதானே! எனினும் ஆளுநர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
ஆனால், பா.ச.க.வைச் சேர்ந்த எசு.வி.சேகர் என அழைக்கப்பெறும் நடிகர் ச.வே.சேகர் என்பவர் பகிரியில்(WhatsApp) பகிர்வு முறையில் பண்பாடற்ற கருத்தினைப் பதிந்தார். இது குறித்துப் பெருத்த கண்டனம் வந்ததுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. இதனால் அவர், தனக்கு வந்ததைப் படிக்காமல் பகிர்ந்ததாகவும் தன் கவனத்திற்குக் கொண்டு வந்ததும் அதை நீக்கிவிட்டதாகவும் தெரிவிததார். ச.வே.சேகர் வானொலி நாடக நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். எனவே இவரும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்தான். தன்னைப் போல் பிறரையும் நினைத்து இவ்வாறு இழிவாகக் குறிப்பிட்டுள்ளார் போலும், எவ்வாறிருப்பினும் இது தண்டனைக்குரிய செயலே
யாராக இருந்தாலும் செய்தி அல்லது கட்டுரையின் இணைப்பு எனில் படிக்காமல் பகிர்வதுண்டு. ஆனால் 25 வரி செய்தி என்னும் பொழுது பகிரும் நேரத்திலும் பகிர்ந்த பின் அச்செய்தி தெரியும் பொழுதும் சில வரிகளாவது படித்துவிடுவோம். எனவே முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். மூலச்செய்தி திருமலை என்பவர் பெயரில் உள்ளது. அவர் தளத்தில் இவரே பதிந்திருக்கவும் அல்லது அவரை இவ்வாறு பதியுமாறு இவர் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு.
சேகர் மேல், நடவடிக்கை வேண்டுபவர்கள் மூலப்பதிவாளர் திருமலையை வி்ட்டுவிட்டது ஏன் என்று தெரியவில்லை. பெண்களையும் செய்தியாளர்களையும் இழிவு படுத்திப் பதிந்த ச.திருமலையைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிக மிக மிக இழிவான தொடர்கள் கொண்ட இச்செய்தியை மீள்பதிவுசெய்ய விருப்பமின்றியே இதுவரை வாளாவிருந்தோம். ஆனால் சொல்லியவர் கடுந்தண்டனைக்கு உரியவர் என்பதைப்புரிய வேறுவழியின்றித தலைப்பாகத் தந்துள்ளோம்.
இதில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லுமே பெண்களையும் ஊடகத்தினரையும் மிக மிக இழிவு படுத்துவனவே இதற்குக் கடுமையானநடவடிக்கை எடுத்திருந்திருக்க வேண்டும். பாசகவைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை இதுவரையும் இல்லை.
பாதிக்கப்பட்ட அம்மையார் காவல் துறையில் முறையீடு அளித்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கம்சார்பில் அதன் பொதுச்செயலர் அ.மிதார் மைதீன் காவல் ஆணையரிடம் 20.04.2018 அன்று முறையீடு அளித்துள்ளார். சேகரின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் செல்லப்பிள்ளை சேகர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை; உயர்நீதி மன்றம் முன்பிணை மறுத்த பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை; உச்ச நீதிமன்றம் முன்பிணை மறுத்த பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரோ மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருட்டிணன், தலைமையர் நரேந்திரமோடி ஆகியோரைச் சந்தித்து உற்சாகமாக இருக்கிறார்.
இவருக்கு நெருங்கிய உறவினரான தலைமைச் செயலர் இவருக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவதாகவும் செய்திகள் வருகின்றன. இச்செய்தி உண்மை யலல என்றே எடுத்துக் கொள்வோம்.
ஐயதிற்கு – சந்தேகத்திற்கு ஆளாக நேரிட்டதால் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் ஆட்சி செய்த மதுரையின் ஆட்சியாளராக இருந்தவர் இப்போதைய தலைமைச் செயலர் திருவாட்டி கிரிசா வைத்தியநாதன் இ.ஆ.ப.. இவர் தன்மீது இவ்வாறு களங்கம் சுமத்துப்படுவதை அறிவார். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகவாவது நடிகர் எசு.வி.சேகரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் கமுக்கமாக வரச்செய்து பிணை வழங்கும் வகையில் ஆவன செய்யவோ, நல்லிணக்கம் பேசி வழக்கை இலலாமல் ஆக்கவோ முயலக்கூடாது.
நடிகர் பாசக செல்லப்பிள்ளை சேகர் மீதும் ச.திருப்பதி மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் , பிற சட்டங்களுக்கிணங்க வழக்கு தொடுப்பதுடன் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தின் கீழும் தனியே வழக்கு பதிந்து தண்டனை வாங்கித் தர வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற இழிசெயல்கள் இனிமேல் நடக்காது.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர் (திருவள்ளுவர், திருக்குறள் 550)
– இலக்குவனார் திருவள்ளுவன்