நீங்களே கூறுங்கள்! மலையாளம் தமிழின் சேய்மொழியா? செம்மொழியா?
நீங்களே கூறுங்கள்! மலையாளம் தமிழின் சேய்மொழியா?
செம்மொழியா?
- இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர்,
தமிழ்க்காப்புக்கழகம்
தமிழ் உலக
மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு
போன்று தமிழ் மொழியின் உண்மையான
வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
பேசுவது போன்று தமிழின் தொன்மை பற்றியும் நாம் பேசி வருகிறோம்;
பேசும்
அளவை விடக்குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால்
தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை
வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில்
இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும் தமிழ்க் குடும்ப மொழியான
மலையாளத்திற்கும் உள்ள உறவு பற்றி நாம் காண்போம்.
திராவிட மொழி, மூல முதன்மொழி,
மூலத்
திராவிடமொழி,
போன்ற தவறான
எடுகோள்கள் ஆய்வு உலகத்தில் இருந்து தொலைந்தால்தான் உண்மையான மொழி வரலாற்றை நாம் அறிய முடியும். மொழி வரலாற்றை
அறிவதற்குரிய பெருங்கேடு என்னவெனில்,
தமிழ்மொழி வரலாற்றை
எழுதுவோரில் பெரும்பான்மையர்
நடுவுநிலை தவறி, ஆய்வு நெறிக்கு மாறாக உயர்தனிச்
செம்மொழியாம் தமிழின் சிறப்புகளை
மறைப்பவர்களாகவும் சிதைப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்க் குடும்ப மொழிகளின் வரலாறுகளை
எழுதுபவர்களோ நடுநிலை பிறழ்ந்து அவரவர்
மொழியில் இருந்து தமிழ் தோன்றியது போன்று அல்லது வேறு மொழியில் இருந்து
தமிழும் அவரவர் மொழியும் ஒரே நேரம் பிரிந்தது போன்றும் அதனால் தமிழின் தாய்மைநிலை
பற்றிய கருத்துகள் தவறு என்ற அளவிலும் மொழிகளின் தோற்றத்தைத் திரிப்பது போன்று
அல்லது அவ்வாறு பிரிந்தவற்றில் மூத்த
மொழி தத்தம் மொழியே என்று உண்மையை
மறைப்பது போன்று தவறான கருத்துகளை விதைத்து வருகின்றனர். இச் சூழலில் கிடைக்கக்கூடிய தவறான இவை போன்ற தகவல்கள் அடிப்படையில் ஆராய்ச்சி
உணர்வு இன்றி எழுதுவோரும் உள்ளனர். எனவே, அறிஞர் கால்டுவல்போல் ஓரறிஞர் தோன்றி உண்மை வரலாற்றை
உலகிற்கு உணர்த்த வேண்டும்.
தமிழே உலக
மொழிகளின் தாய் என்பதைப் பேராசிரியர் முனைவர்
சி.இலக்குவனார், மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் முதலான பல அறிஞர்கள்
நிறுவியிருந்தாலும் அனைத்து மொழிகளையும் நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற
தலைப்பில் கொணரவில்லை. தமிழ்க் கண்டம் என்று அழைக்கப்பட வேண்டிய
இந்தியநிலப்பரப்பில் உள்ள தாய்த்தமிழின் வேர்களை மிகுதியாகக் கொண்டிருக்கக் கூடிய
திராவிட மொழிகள் என்ற தவறான அளவீட்டில் மதிப்பிடப் படுகின்ற தமிழ் இன மொழிகள் அல்லது தமிழ்ச் சேய் மொழிகள் என்று சொல்லப்பட்டு வருகின்ற மொழிகளையே தமிழ்க் குடும்ப மொழிகள் என்று
இங்கே குறிப்பிடுகிறோம். உலக
மொழிகள் யாவுமே தமிழ்ச் சேய்மொழிகளாக இருப்பினும் பிறந்தபின் தொடர்பற்றுப்
போனவற்றை விட்டு விட்டு எஞ்சியவற்றையே நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற
வரையறையில் ஆராய்கிறோம்.
சிதியன்
குடும்பத்தில் திராவிட மொழிகள்
சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத்
தமிழ்க்குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே
ஏற்புடையதாகும். தமிழ்க் குடும்ப மொழிகளைத் தனிக்குடும்பமாகக் கொண்டு
மதிப்பிடுதல்தான் சாலப்பொருந்தும்
எனப் பேராசிரியச் செம்மல் சி.இலக்குவனார் அவர்கள் கூறியதற்கிணங்க - பிறரால் திராவிட மொழிகள் எனத் தவறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்ற மொழிகளைத்- தமிழ்க் குடும்ப மொழிகள் என்ற பெயரிலேயே அழைக்க
வேண்டும். அதற்கேற்ப இங்கும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
தமிழ்க் குடும்ப
மொழிகள்யாவை? தமிழ்க்குடும்ப உறுப்புகளான கன்னடம்,
குருக்,
கூயி,
கூவி,
குடகு,
கோயா,
கோலாமி,
கதபி, நாயக்கி,
கொண்டா அல்லது
கூபி,
கதபா, கோத்தா, கொரகா, தோடா, மண்டா, மலையாளம், தெலுங்கு, கோண்டி, துளு, பிராகூய், மால்தோ, பர்சி, நாயக்கி, பெங்கோ முதலான தென்தமிழ்க்குடும்ப மொழிகள், மத்திய
தமிழ்க்குடும்ப மொழிகள்,
வட தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் முப்பிரிவிற்குட் பட்டனவேயாம்.
எனினும் இங்கு மலையாள மொழி பற்றி
மட்டும் ஆய்விற்கு
எடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் கால்டுவல் அவர்களின் ‘திராவிடமொழிகளின்
ஒப்பிலக்கணம்’, மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் ‘திராவிடத்தாய்’, செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர்
சி.இலக்குவனார் அவர்களின் ‘பழந்தமிழ்’
முதலான நூல்களில் தமிழும் தமிழ்க்குடும்ப
மொழிகளுள் ஒன்றான மலையாளமும் பற்றிய
ஆய்வுரைகள் உள்ளன. இலக்கண அடிப்படையிலான ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டுள்ளமையால்
நடைமுறை வழக்கு அடிப்படையில் சில கருத்துகளை மட்டும் நாம் இங்கே பார்க்கலாம்.
செந்தமிழ்மாமணி
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள், தம்முடைய ‘பழந்தமிழ்’ என்னும் நூலில்
பழந்தமிழ்ப்புதல்விகள் என்னும் தலைப்பில் தமிழின் புதல்விகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய
மொழிகளைப்பற்றி
ஆராய்ந்துள்ளார். உடலுறுப்புகள், உணவு வகைகள்,
எண்ணுப்பெயர்கள்
முதலான அடிப்படைச்சொற்களின்
அடிப்படையிலும் இலக்கண அமைப்பு
அடிப்படையிலும் இவை யாவும் தமிழ்ப் புதல்விகளே என நிறுவியுள்ளார். அவ்வகையில்
மலையாளம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
மலையாளம்: மலையாளம் என்ற
சொல் தமிழ்ச் சொல்லேயாகும். மலையிடத்தை ஆட்சியாகக் கொண்டது என்னும்
பொருளதாகும். மலையாளம் என்ற சொல் மொழியைக் குறிக்கும். கேரளம் என்ற சொல்நாட்டைக் குறிக்கும். இச்சொல் சேரலன்
என்ற தமிழ்ச் சொல்லின் வேறு வடிவமேயாகும்.
‘ச’ போலியாகக் ‘க’ வருவது இயல்பு. சீர்த்தியே
கீர்த்தியாகவும், செம்பே கெம்பாகவும்(கன்னடத்தில்) உருமாறியுள்ளமையைக் காண்க.
மலையாள
நாடு தமிழிலக்கியங்களில் சேரநாடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையாண்ட அரசர்கள்
சேரர் என்றும் சேரலர் என்றும் அழைக்கப்பட்டனர். சேரன் செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல், தகடூர் எறிந்த
பெருஞ் சேரல், குடக்கோ இளஞ்சேரல் என்னும் பெயர்களை நோக்குக.
சேரல் சேரலன் ஆயது. தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்), செருமாவுகைக்கும் சேரலன் காண்க(திருமுகப்பாசுரம்) என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன்
கேரலன் ஆகிப் பின்னர்க் கேரளன் ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு
வேறு மூலம் தேடி உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்டதாகும்.
மலையாள
மொழி வழங்கும் நாடாக இன்று கருதப்படும்
பகுதி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை
செந்தமிழ் நாடாகவே இருந்துள்ளது. செந்தமிழ் இலக்கியங்களாம் ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து,
சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, ஆதியுலா, பெருமாள் திருமொழி முதலியன இப் பகுதியில் தோன்றியனவே.
பதினாறாம்
நூற்றாண்டில் இந் நாட்டுக்கு வந்த
வெளிநாட் டவர் தமிழுக்கும் மலையாளத்திற்கும் வேறுபாடு அறியாது தாம்
அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் என்றே அழைத்தனர். ஆதலின் பதினாறாம் நூற்றாண்டு வரையில் இப்பகுதியில் வழங்கிய மொழி தமிழாகவே
இருந்துள்ளது என்று அறியலாம். மலைப் பகுதியில் வழங்கிய மொழியை (தமிழை) மலையாளம் என்று அழைத்தனர்
போலும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையில் கொடுந்தமிழாகவும் வடசொற்
கலப்புடையதாகவும் இருந்து
வந்துள்ளது. பதினேழாம்
நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு
ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார்.
பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு
அயல்மொழியாக வளரத் தலைப்பட்டு விட்டது.
மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு
தொடர்புபடுத்திக் கொள்ள
விரும்பினரே யன்றித்
தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்.
பதினான்கு
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஆரிய மொழிச் செல்வாக்கு உச்சநிலையை அடைந்திருந்தது.
கொடுந்தமிழும் ஆரியமும் கலந்த
மணிப்பிரவாள நடை ஆட்சியில் இருந்தது.
பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி.
1320) வீரராகவ மன்னரால் வெட்டுவிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டில் வாயில் வாதில் ஆகவும், உண்டாக்கில் ஒண்டாயில் ஆகவும், எழுந்தருளி
எழுந்நள்ளி ஆகவும்
வழங்கப்பட்டு உள்ளன. இந்நூற்றாண்டில்
(கி.பி. 1350) கண்ணிசப் பணிக்கரால் இயற்றப்பட்ட இராமாயணம் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக இந்நூலில் உள்ள பாடலை நோக்குவோம்.
“கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு
நீண்டொளி வார்ந்துதிங்ஙும் குந்தள பாரமொடு
முகில் குலத்திட மிந்நல் போலே,
புண்டரீகேக்ஷ
ணந்நரிகப் பொலிந்தவள ஸீதசொந்நாள்”
இப்பாடலில்
குந்தளபாரம், புண்டரிகேக்ஷணன் எனும் இரண்டு வட சொற்களே பயின்றுள்ளன. இவற்றுள்ளும் குந்தளபாரம், கூந்தல் பாரம் எனும் தமிழ்ச் சொல்லின் ஆரிய மொழித் திரிபாகும். ஏனைய
தமிழ்ச்சொற்களே திரிந்து வழங்கப் பட்டுள்ளன.
ஆரியமொழி முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்தாம் ‘ன’ வை விடுத்து
தமிழிலும் ஆரியத்திலும் வரும் ‘ந’ ஆளப்பட்டுள்ளது.
கி.பி.
1860-இல்தான் முதல்
மலையாள இலக்கணம் இயற்றப் பட்டதாம். பதினைந்தாம் நூற்றாண்டில் நீலதிலகம் எனும்
மலையாள மொழியைப் பற்றிய நூல் ஆரிய
மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும்
தரப்பட்டுள்ளனவாம்(Literature
in Indian Language, Page. 104).
இந் நூலால் அறியப்படுவது மலையாளம்
எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர்
இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் (Literature
in Indian Languages, Page. 105).
மலையாள
மொழிபற்றி அறிஞர் கால்டுவல்
கூறும்கருத்துகள் மலையாளம்தமிழின் புதல்வியே என்பதை நிலைநாட்டும்
பேராசிரியருக்கு
முன்னதாகவே அறிஞர் கால்டுவல் அவர்களும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களும் தமிழ்த்தாய்
ஈன்றெடுத்த புதல்விகளுள் ஒன்றே மலையாளம் என ஆய்ந்துரைத்துள்ளனர். இவர்கள்போல வேறு
அறிஞர்களும் தமிழே மலையாளமாக
உருவெடுத்துள்ளதை விளக்கியுள்ளனர். இவ்வாய்வுரைகளின் துணைக் கொண்டு இவர்களின்
கருத்திற்குத் துணை நிற்கும்வகையில் வேறு சில நோக்கில் சில கருத்துகளை இங்கு நாம்
ஆயலாம்.
மலையாள இலக்கிய
வரலாறு
என்னும் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள
நூலில் அதன் ஆசிரியர் பி.கே.பரமேசுவரன்(நாயர்)
கன்னடத்தைக் கரிநாட்டுத் தமிழ், துளுவைத் துளு நாட்டுத் தமிழ், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என அழைக்கப் பட்டுள்ளமையைக் குறிப்பிடுகிறார்.
இப்பொழுது பேச்சு வழக்கு அடிப்படையில்
மதுரைத்தமிழ்,
நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் என்றெல்லாம் அழைக்கப்படும் முறையிலேயே ஒரு
காலத்தில் தமிழ்,
தான் வழங்கிய
பகுதிகளின் அடிப்படையில் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுள்ளது என்பதைப்
புரிந்து கொள்ளலாம். இதிலிருந்தே, பேச்சு வழக்கிற்குப்
புதிய எழுத்து வடிவம் அமைக்கப்பட்டதன்
காரணமாகவும் அதன்பின் தாய்த் தமிழுடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கிக்
கொண்டமையாலும் தெலுங்காகவும் கன்னடமாகவும் மலையாளமாகவும் பிற மொழிகளாகவும் தமிழ்தான்
உருவெடுத்துள்ளது என்பதை உணரலாம்.
மேலும் அவர், “மலையாளம் மூலத்திராவிட மொழியினின்று பிரிந்து தனக்கே
உரித்தான உருவம் பெற்றுவிட்ட பிறகு
முதலில் செந்தமிழின் ஆதிக்கத்திற்கும் பிறகு சமற்கிருதத்தின்
ஆதிக்கத்துக்கும் உட்பட்டு வளர்ந்திருக்கிறது” என இந்நூலில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மூலத் திராவிட மொழி
என்னும் தவறான எடுகோளும் சமற்கிருதக் கலப்பு ஏற்பட்டது போன்று மலையாள மொழியில்
நிலைத்த தமிழ்ச் சொற்களை ஆதிக்கம்
என்று தவறாகக் கருதியமையும் மொழி வரலாற்றை நடுநிலையுடன் நோக்கும் வாய்ப்பைப் பறித்து விட்டது எனலாம்.
மேலும் அவர், இறைவழிபாட்டுப் பாடல்கள், பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகாத தொன்மையான வடிவத்தைக் காட்டுவன வென்றும் பல நூற்றாண்டுகட்கு முன்னர் நிலவியிருந்த
நடைக்கு எடுத்துக் காட்டாக உள்ளவை என்றும் பழமொழிகளும் விடுகதைகளும் அன்றைய
பேச்சு வழக்கைக் காட்டுவன என்றும் குறிப்பிட்டுப் பின்வரும் பாடலையும் பழமொழி,
விடுகதைகளையும்
எடுத்துக்காட்டுகிறார். (பக்கம்12-13)
பாடல் :
கத்தி
பிடிச்சு கடுத்தில சூல
முயர்த்தி
கரத்தில் மழுப்பட
யேந்தி
நிண குடர்மால கழுத்திலணிஞ்ஞú
கறுத்த நிறத்தில்
உருட்டிய கண்ணும்
இப் பாடலில் பிடித்து-பிடிச்சு; கழுத்து-கடுத்து; மழுப்படை-மழுப்பட;குடல்-குடர்; மாலை-மால; அணிந்து-அணிஞ்ஞú எனச் சில சொற்கள் இலக்கணப் போலி அடிப்படையிலும் பேச்சு
வழக்கிலும் அமைந்துள்ளன. எஞ்சிய யாவும்தனித் தமிழ்ச் சொற்களே!
பழமொழிகள் :
1.) கடய்க்கல் நனச்சாலே தலய்க்கல் பொடிக்கூ
வேரை நனைத்தால்தான் நுனியில் முளைக்கும் என்னும்
இப்பழமொழியில் நனைத்தாலே என்பது நனைச்சாலே எனவும் பொடிக்கும் என்பது பொடிக்கூ எனவும் வந்துள்ளன(பொடித்தல் என்றால் முளைத்தல்
எனப் பொருள்). கடைக்கல்,
தலைக்கல்
என்பனவற்றைக் கடய்க்கல், தலய்க்கல் என எழுதுவது பழந்தமிழ்ப் பழக்கமே.
2.) அக்கர நில்க்கும்போள்இக்கர பச்ச
அக்கரை, இக்கரை என்பன அக்கர, இக்கர எனவும் நிற்கும்போழ்து என்பது நிற்கும் போள்எனவும்
பச்சை என்பது பச்ச எனவும் வந்துள்ளன.
3.) உரிநெல் ஊரான்போயிட்டு பற நெல் பந்நி திந்நு
போய்விட்டு, பறை, பன்றி, தின்று என்பன முறையே பேச்சு வழக்கில் போயிட்டு,
பற,
பந்நி,
திந்நு என
வந்துள்ளன. உருவப்போதல்-உருவான்
போதல்-ஊரான்போதல் என்னும் பொருளில் கையாளுவதாக எண்ணுகின்றனர். ஊராளப் போதல் என்பது
ஊரான்போதல் என மருவி வந்துள்ளது.
4.)
அரி
நாழிய்க்கும் அடுப்பு மூந்நு வேணம்
அரிசி, நாழிக்கும்,
மூன்று, வேண்டும் என்பன முறையே அரி, நாழிய்க்கு, மூந்நு,
வேணம் எனக்
கடைக்குறையாகவும் பேச்சு வழக்காகவும் இடம் பெற்றுள்ளன.
5.) அரசன் சத்தால் படயில்ல.
செத்தால்,
படை என்பன
முறையே சத்தால், பட எனப் பேச்சு வழக்காக வந்துள்ளன.
விடுகதைகள் :
1.)
ஆன கேறா மல
ஆடு கேறா மல ஆயிரம்காந்தாரி பூத்திறங்ஙி
ஆனை(யானை), மலை, இறங்கி என்பன முறையே
ஆன, மல, இறங்ஙி எனப் பேச்சு வழக்கில் வந்துள்ளன. ஏறா(த) என்பது
(ஹேறா
என்றாகிப் பின்) கேறா என
வந்துள்ளது.(விலங்கேறா மலை என்பதுதான்
இவ்வாறு சுருங்கிப் பொதுப் பொருளில்
வந்ததோ?) காந்தும்காய் (மிளகாய்)
காந்தாரி எனப்பெற்றுள்ளது.
2.) பின்னாலெ வந்தவன் முன்னாலெ போயி
பின்னாலே, முன்னாலே, போய்விட்டான் என்பன முறையே பின்னாலெ,
முன்னாலெ,
போயி எனப்
பேச்சு வழக்கில் வந்துள்ளன.
3.) காட்டில்கிடந்நவன் கூட்டாயி வந்நு
கிடந்தவன், கூட்டாக, வந்தான் என்பவை முறையே கிடந்நவன்,
கூட்டாயி,
வந்நு என
வந்துள்ளன. இப்பழமொழிகளும் விடுகதைகளும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழ்ப் பழமொழிகளே.
இவை அனைத்தும்
தமிழே மலையாளமாக வரி வடிவில் மாறியுள்ளது என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும். ஆனால்,
நூலாசிரியர் சொற்களைப் பற்றிய வரையில் தமிழ்க்கலப்போ சமற்கிருதக் கலப்போ இல்லாதவை; அன்றாட வழக்கிலிருந்த பேச்சு
நடை யாது என்பதைப் புரிந்து கொள்ள அவை உதவுகின்றன; நடையில் தமிழ் சமற்கிருதம் ஆகியவற்றின் சொற் சேர்க்கையோ
இலக்கண விதிகளின் சார்போ
இல்லையென்பது கவனத்திற்குரியது;
என்றெல்லாம்
இவற்றைப் பற்றித் தவறாக மதிப்பிடுகிறார்.
சேர நாட்டின் செந்தமிழ்ப் படைப்புகளைக் குறிப்பிட்டுவிட்டு,
“மேலே
சுருக்கமாகத் தந்துள்ள தகவல்களிலிருந்து
கேரள நாட்டின் கவிதை ஒளி
செந்தமிழ் வாயிலாகத்தான் ஒளிர்வதாயிற்று என்பது
விளங்கும்; இது
மட்டுமன்றி ஆட்சி தொடர்பான விவகாரங்களும் அரசர்களின் ஆணைகளும்
எழுதப்படும் அளவிற்குச் செந்தமிழ்
முக்கியத்துவம் பெற்றிருந்ததால் கேரள மொழிக்கு உரிய வளர்ச்சி
யுண்டாகவில்லை” என மலையாளம் தோன்றாத காலத்தில்
இருந்தே மலையாளம் இருந்தது போன்று தவறாக எழுதுகிறார்.
லீலா திலகம் என்னும் மலையாள நூல்,
பாட்டு
இலக்கணம் பற்றிக் கூறுகையில், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள
எழுத்துகளே கையாளப்பட
வேண்டும்....சமற்கிருதப் பாவினங்களல்லாத பாவினங்களில் இயற்றப் பெற்றிருக்க
வேண்டும் எனக்
குறிப்பிடுவதில் இருந்தே மலையாளம் எனத் தனி எழுத்து வடிவத்தை
உருவாக்கிய பின்பும் தமிழாகத்தான் அந்த மொழி விளங்கியுள்ளது என்பது நன்கு
புரியும்.
ஆனால்,
சமற்கிருதம்
நீக்கப்பட்ட மலையாளம் என்பது தமிழ்மொழியே என்பதைப் புரிந்து
கொள்ளாமலும் புரிந்து கொண்டாலும்
ஒத்துக்கொள்ள முன்வராமலும் தனி மலையாளம்
எனக் கதையளக்கின்றனர்.
ஒருவேளை மலையாள
மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது;
இப்பொழுது அவ்வாறில்லை
எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல்வகுப்பு மலையாளப் புத்தகத்தில்
இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு:
பாவ பாவ பாவ நோக்கு
புதிய புதிய பாவ நோக்கு
கய்ய வீசும்பாவ நோக்கு
கண் ணிமய்க்கும் பாவ நோக்கு
தலயாட்டும்பாவ நோக்கு
தாளமிடும் பாவ நோக்கு
எனிக்குக் கிட்டிய பாவ போல
வேறெயில்ல பாவகள்
பாவை(பொம்மை) பாவ என்றும் எனக்கு என்பது எனிக்கு என்றும்
வேறில்லை என்பது வேறெயில்ல என்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன. முதலில்
கூறியது போல், கையை, இமைக்கும் என்பன முறையே பழந்தமிழ்வழக்கின் அடிப்படையில்
கய்ய, இமய்க்கும் என இடம் பெற்றுள்ளன.
சிறுவர் கதை ஒன்றைப்
பார்ப்போம்:
சங்காத்திமார்
களிக்கான்போயி. தவள மாத்ரம் வெள்ளத்தில் சாடி. மற்றுள்ளவரேயும் விளிச்சு. ஒரோருத்தரும் ஒரோ வஸ்து வீதம் கொண்டுவண்ணு செறிய தோணி
உண்டாக்கி. தோணியில் சந்தோஷத்தோடெ போயி.
இவற்றுள்
(தமிழ்நாட்டிலும் வழக்கத்திற்கு வந்து விட்ட) வஸ்து,
சந்தோஷம்
என்பன நீங்கலாகப் பிற அனைத்தும் தமிழ்ச் சொற்களே. உன் உறவோ நட்போ கூட்டோ வேண்டா
எனச் சொல்ல உன் சங்காத்தமே வேண்டா எனச் சொல்வது இன்றைக்கும்
தமிழ்நாட்டில் உள்ள வழக்கே. அதனடிப்படையில் பிறந்ததே சங்காத்திமார்(கூட்டாளிகள்) என்பதாகும். சங்கம் என்னும் சொல்லின்
அடிப்படையில் இச்சொல் பிறந்துள்ளது.
முதல்வகுப்புப் பாடம்
என்பதால் இவ்வாறு உள்ளது எனக் கருத வேண்டா. இலக்கியப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தாலாட்டுப் பாடல் வரிகள் சிலவற்றின் மொழி
பெயர்ப்பு வருமாறு:
1. பூங்காவின் மலரே ஸ்வர்ணத்தின்
உருவமே காலத்தெ சூரியன்டெ வெண்கல் பிம்பமே
2. பூங்கொடி கண் டேன்
மனம்குளிர்ந்து நிந்நேன்
3. புதியதொரு லோகம்
சமய்க்காம் நீசமாய்
போரிடும் லோகத்தெ
வேரொடெ வீழ்த்தாம்
சுவர்ணம்,
நீசம் என்னும்
இரு சொற்கள் தவிர அனைத்தும் தனித் தமிழ்ச் சொற்களே. பேச்சு வழக்கில் இடம்
பெற்றுள்ளன.
இலக்கியப் பாடல்
என்றில்லாமல் மக்கள் வழக்கில் இடம் பெறும் திரைப்பாடல் வரிகளைச் சான்றுக்குப் பார்ப்போம்:
காற்று வந்நு காற்று வந்நு கள்ளனெப் போலெ
காட்டு முல்லக்கி ஒரு உம்ம கொடுத்து காமுகனெப் போலெ
உம்ம என்பது இன்றும்
முத்தத்திற்கு மக்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்குதானே! காமுகன் என்பது காதலனைக் குறிக்கும் பழந்தமிழ்ச்
சொல்லாகும். சமற்கிருதக் கலப்பில்லாத இவ்வரிகள் தமிழாகத்தானே விளங்குகின்றன.
அகராதி என்பது ஒரு
மொழியின் சொல்வளத்தைக் காட்டும். அந்த வகையில் பள்ளி மாணாக்கருக்கான ஆங்கில-மலையாள
அகராதி ஒன்றில் உள்ள சொற்களில் ஏ(A)
வரிசையில்தொடக்கத்திலுள்ள ஒரு பகுதிச் சொற்களை,
ஒரு பானைச்
சோற்றுக்கு ஒரு பதம்போல் பார்ப்போம்.
Aback
|
பிந்நோக்காம், புறக்கில்
|
Abase
|
தரம் தாழ்த்துக
|
Abate
|
குறய்க்க, சரிப்பிக்குக
|
Abbreviate
|
சுருக்குக
|
Abdomen
|
உதரம், வயிறு
|
Abeyance
|
ஸ்வல்பக் காலம்நிறுத்தி வைக்கல்
(சொற்பம், சொல்பம் ஆகி, ஸ்வல்பம் ஆனது.)
|
Aboard
|
கப்பலில்
|
Abode
|
இரிப்பிடம்
|
Abolish
|
இல்லாதாக்குக
|
Aboriginal
|
ஆதிவாசி
|
Abound
|
நிறயுக
|
Above
|
மீதெ, உயரத்தில்
|
Abuse
|
நிந்திக்குக
|
Account
|
கணக்கு, கணக்காகுக
|
Ache
|
வேதன
|
Add
|
கூட்டுக
|
Adjourn
|
மாற்றிவெக்குக
|
Affect
|
பாதிக்குக
|
Afraid
|
பயமுள்ள
|
Against -
|
எதிராயி
|
Ago
|
பண்டு
|
Agree
|
சம்மதிக்குக
|
Agreement
|
உடம்படி
|
Aid
|
துண
|
Air
|
வாயு
|
இவை யாவும்
தமிழ்ச்சொற்களாக அல்லது தமிழ்ச்சொற்களின் பேச்சு
வடிவாக உள்ளன. எனவே, மலையாளம் என்பது நம் முன்னோர் சோம்பலினாலும் பிறவற்றாலும்
திருத்தமற்றுப் பேசியதும் அவ்வாறு பேசியதை அறியாமையாலும் மொழிப்பகைவர்
வஞ்சகத்திற்கு இரையாகியும் எழுத்து வடிவில் கொணர்ந்ததும் பின்னர் அதற்கு எனத் தனி வரிவடிம் அமைத்துக் கொண்டதும் ஆகும். எனவே,
மலையாள
வரிவடிவம் வேறாக இருந்தாலும் ஆரியச் சொற்கள் நீங்கலான சொற்கள் யாவும் தமிழுக்குரியனவே.
பழந்தமிழ்ச் சொற்களே
பிற மொழிகளில் இயல்பாகவும் வடிவம்
சிதைந்தும் சுருங்கியும் வழங்குகின்றன. தெலுங்கு,
கன்னடம்,
மலையாளம்
முதலான மொழிகள் பேசப்படும் பகுதி ஒரு
காலத்தில் தமிழ் நிலமாக இருந்த
பொழுது வழங்கிய தமிழ்ச் சொற்களே
இவை என்பதைத் தமிழ் மக்களே உணராமல் உள்ளனர். இவ்வாறிருக்கும் பொழுது இம் மொழி பேசும் மக்கள் எல்லாச் சொற்களும்
தமக்குரியனவே எனக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவேதான் அவர்கள்,
தமிழ்ச்
சொற்கள் கண்டறியப்படும் தொல்லிடங்களை யெல்லாம் தம் மொழிச் சொற்களாகக்
காட்டுகின்றனர். எனவே,
தமிழ்க்குடும்ப மொழிகளில் உள்ள பிற
மொழிக்கலப்பில்லாத சொல் வளத்தைத் தமிழ்ச்சொற் கருவூலத்தில் சேர்க்க
வேண்டும். இதனைப் பிற மொழிகளிலும் வெளியிட
வேண் டும். இம் முயற்சியே மொழி
ஆராய்ச்சிக்குத் துணை நிற்கும் நன்முயற்சியாக அமையும்.
தமிழே சிதைந்து
ஒன்று பலவாய் வேறுபட்டனவாய்
இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள
மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை
கண்ட குருடர்கள் போன்று இன்று
மொழிநூலறிஞர்கள் தமிழையும் அதன்
கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்கின்றனர். உண்மை நிலை
வெளிப்படுவதாக
எனச் செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
கூறுவதுபோல் தமிழ்க்குடும்ப மொழிகளைப் பிற
குடும்பத்தில் சேர்க்கும் அறியாமை நிலையும் தமிழின் சேய்மொழிகளைத் தாய்த்தமிழின்
தாயாகக் காட்டும் வஞ்சக நிலையும் விரைவில்
மாற உண்மைத் தமிழன்பர்கள் பெரிதும் முயல வேண்டும்; மேலும், வரி வடிவ மாற்றங்களே தமிழைச் சிதைத்தன என்பதை
உணர்ந்து கொண்டு தற்போது சிலர் வரிவடிவ மாற்றத்தையே வாழ்நாள் திட்டமாக அறிவித்துக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும்.
பேசுவது போல்
எழுதுவதற்குத்தடைசெய்து எழுதுவது போல் பேசுவதையே கடமையாகக்கொள்ள வேண்டும். ஊடகங்கள் நிகழ்த்தும் மொழிக் கொலைகளுக்கும்
சிறுபான்மைச் சாதித் தமிழையே பெரும்பான்மையாகக் காட்டும் உரையாடல்களுக்கும்
எழுத்து நடைக்கும் தணிக்கைத் தடை விதிக்க வேண்டும். நமக்குரியவற்றைப் பிறருக்குத் தாரை வார்த்து
விட்டு முன்னோர் செல்வத்தைப் பறிகொடுத்த ஏழையாக மாறாமல் முன்னோர் செல்வத்தையும் மீட்டுப்
புதிய செல்வப் பெருக்கிலும்
ஈடுபடவேண்டும்.
தமிழில்பேசுவோம்!
தமிழறிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுவோம்!
தமிழில்பேசுகையில் தமிழிலேயே பேசுவோம்!
தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
தமிழில் எழுதுவோம்!
தமிழறிந்தவர்களுக்குத் தமிழிலேயே எழுதுவோம்!
தமிழில்எழுதுகையில் தமிழிலேயே எழுதுவோம்!
தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
என உறுதி எடுத்து
நம் தாய்த்தமிழைக் காப்பாற்றினால்தான் மேலும் பல மொழிகளாகச் சிதையாமல் அவை நம்
செல்வங்களையும் சிறப்புகளையும் தமக்குரியதாகக் காட்டி உரிமை கொண்டாட வாய்ப்பு இல்லாமல்
தமிழ் தமிழாகவே இருக்கும்.
பிள்ளைகளுக்குப் பெருமை
வந்தால் தாய் மகிழ்ச்சி கொள்ளாமல் எதிர்க்கலாமா?
என்பதுபோல் சிலர்
கேட்கின்றார்கள். குழந்தையின் மழலை கண்டு தாய் மகிழ்வதால்,
அம்மழலை மொழியையே
தாயின் சிறப்பான உரையாகக் கருதலாமா? வரலாற்றுத் தொன்மையோ முதன்மையோ தனித்தியங்கும் தன்மையோ இல்லாத மலையாளம்,
சிலரின் பண ஆசையால்,
தமிழுக்கு இணையான
செம்மொழி எனப் போலியாகக் காட்டப்பட்டுள்ளது.அவ்வாறு வஞ்சகமாக எழுதியவர்கள்,
அவற்றை ஏற்று மத்திய
அரசிற்கு அனுப்பியவர்கள், தவறென அறிந்தே அவற்றின் அடிப்படையில் பரிந்துரைத்தவர்கள்,
அவற்றை ஏற்றவர்கள்
மீது குற்ற வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?
மாறாகப் பொய்யுரையால்
புகழ் பெற விரும்பும் தன்னிறைவு இல்லா மொழியை
எவ்வாறு பாராட்ட முடியும்?
தமிழ் மொழி பிற மொழிகளாக
உருமாறிய காரணங்களைப் பார்த்தோம். மலையாள மொழி எப்பொழுது தமிழில் இருந்து வேறுபட்ட
மொழி போல் ஆனது என்பதையும் பார்த்தோம். இலக்கியங்கள்,
பேச்சு வழக்கு,
பாடநூல்கள்,
கதை,
விடுகதை,
திரைப்பாடல்,
அகராதி எனப் பலவற்றின்
மூலம் இன்றைய மலையாளமும் தமிழின் பேச்சுவழக்குக் கிளையாக இருப்பதைப் பார்த்தோம்.
மலையாள மொழியில் உள்ள ஆரியக் கலப்பையும் கிரந்த எழுத்துகளையும் நீக்கின் அம் மொழி தனித்தமிழே
என உணரலாம். சேய்மொழியான மலையாளம் தனித்த இலக்கிய மரபினைப் பெற்றிருந்தால் அதனைச் செம்மொழி
என்று சொல்வதில் நாம் மகிழலாம். பெருமை கொள்ளலாம். ஆனால்,
மத்திய அரசு வரையறுத்த
செம்மொழிக்காலம் 1500 ஆண்டு வரலாறு உடையதாக இருக்க வேண்டும் என்னும் பொழுது அதில்
பாதிக்கும் பாதியாகிய - காலளவாகிய - 375 ஆண்டுகள் செவ்விய வரலாறுகூட இல்லாத தனித்தியங்கும்
தன்மை இல்லாத மலையாளம் செம்மொழி என மொழி வரலாறு
அறியாத ஒரு சாராரும் அரசியல் காரணங்களால் ஒரு சாராரும் சொன்னாலும்
நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
மலையாளம் செம்மொழிதானா?