செவ்வாய், 22 நவம்பர், 2022

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா, நாகப்பட்டினம்

 அகரமுதல


கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா

தமிழ் வளர்ச்சித் துறை

நாகப்பட்டினம்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும்

இலக்கியக் கருத்தரங்கம்

கார்த்திகை 08, 2053

24.11.2022

வியாழன் முற்பகல் 10.00

பேராசிரியர் கா.சுப்பிரமணியன்

பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார்

கவிஞர் சுரதா

ஆகியோரைச் சிறப்பிக்கும்

இலக்கியக் கூட்டம்

இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி

காஞ்சூர் சோதனைச் சாவடி

நாகூர், நாகப்பட்டினம்





திங்கள், 21 நவம்பர், 2022

தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார்

 அகரமுதல





இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார்.

தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்
இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம்,

இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ்,

தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்
தெரிவிக்கிறோம்.

அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி


எந்தையும் இலமே !

ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மசிரீ முனைவர்
ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களைத் தத்தளிக்க விட்டு (21.11.2022)
வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!

எந்தையே !
நந்தா விளக்கனைய நாயகனே !!
உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …

எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
நாங்கள் சென்று உங்கள்
திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆற்றொணாத் துயருடன்

கண்ணன்
அருள்
பரதன்.

21.11.2022 திங்கட்கிழமை. மாலை 7.50 மணிக்கு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீள்பதிவு

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்      23 March 2020      No Comment

நானிலம் புகழும்

நாவரசர் ஒளவை நடராசன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர்.  இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.

குடும்பம்:   

 தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய  திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன்  என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.

கல்வி

தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.

நாநலம்

நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஞ்சிராமச்சந்திரன் முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.

பணி

மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.

அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழகஅரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன் இவரை அமர்த்தி,  தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக  இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.

வழிகாட்டி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக  இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.

விருதுகள்

அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு

  1. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
  2. இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
  4. தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
  5. கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
  6. தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)

நூல்கள்

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும்  ஆய்வுக் கட்டுரைகளை  எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது  பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
  8. அருளுக்கு ஔவை சொன்னது
  9. Self Confidence
  10. Saying of Stalwart
  11. Art Panaroma of Tamils
  12. Thirukkovaiyar

மொழிபெயர்ப்புத் திறன்    .

மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கங்களிலும் இவரது பணி சிறப்பானதாகும். அரசின் ஆணைய அறிக்கைகள் முதலானவற்றில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்திப் படிப்போரை மிரளச் செய்து கொண்டிருந்தனர். அப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்து, எளிய சிறிய சொற்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்கித் தமிழின் சிறப்பைப் புரியச் செய்தார். 

பணிப்பாங்கும் பழகும் பண்பும் 

            இவரது செயல் திறனும் சொற்றிறனும்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவி செ.செயலலிதா ஆகிய  மூன்று முதல்வர்களின் அன்பிற்கு இவரை ஆட்படச் செய்தன.

இவர் உயர்பணிகளில் இருந்த பொழுதிலும் இவரை நாடி இருபால் இளைஞர்களும் குழுமி இவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். அதனால் இளம் பேச்சாளர்கள் பலரை உருவாக்கினார். அத்தகையோர்தான் பிற்காலத்தில் – அஃதாவது இக்காலத்தில் – மேடைப் பேச்சாளர்களாகவும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர்.  இன்றைக்கு மேடையில் முழங்கும் பலரும் இவரது வழிகாட்டுதலால் உருவானவர்களே!

   எந்தப் பணியில் இருந்தாலும் கூட்டங்களுக்கான அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் செல்லத் தவறுவதில்லை. நகைச்சுவையுடனும் புதிய புதிய தகவல்களுடனும்  இலக்கியச் சுவையுடனும் ஆற்றும் இவரது உரைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பாரையும் மகிழ்விக்கின்றன. பட்டிமன்றங்களில் இவர் பாங்குடன் ஆற்றும் உரைகள் துணுக்குத் தோரணங்களாக அமையாமல் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் அமைந்தன. எனவே, பொதுமக்களிடையே இவருக்கென ஓர் அன்பர் கூட்டம் இன்றும் இருக்கிறது.

வாழ்க வாழ்கவே

தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும்,  

தந்தையார் உரைவேந்தர் வழியில் உரையாளராக உலகத்தமிழர்கள் போற்ற வாழும், 

நாவரசர் ஒளவை நடரசானார்  நானிறலம் சிறக்க நூறாண்டுகள் கடந்தும் நற்றமிழ்த் தொண்டாற்றி வாழ்வாராக!

இலக்குவனார் திருவள்ளுவன்