சனி, 14 ஜூன், 2025

பெண்களையும் சூத்திரர்களையும் உயர்த்திக் கூறுவது சனாதனம் எனப் பொய் சொல்வதா? 78. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு என்று தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

76.   பெண்களை உயர்வாகக் கூறுவதும் 77.             14 June 2025      கரமுதல



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 தொடர்ச்சி)

பெண்களை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவுபடுத்துவதே சனாதனம்பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதருமம் சித்தரிக்கிறது.

பெண்களுக்குத் தனி அடையாளங்களையோ தன்விருப்பிலான (சுயேச்சையான) செயல்பாடுகளையோ மனு தருமம் மறுதலிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

பெண்கள் பாவப் பிறப்புறுப்பில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.

பெண், இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம் விருப்பப்படி இருக்கக் கூடாதவர் (மனு 9.3.) என்றும்

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன் விருப்பப்படி எச்செயலும் இயற்றலாகாது. (மனு. 5.) என்றும் மனு சொல்கிறது.

 கணவன் ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக (துராசாரமுள்ளவனாக) இருந்தாலும் அன்னியப் பெண்மனு பித்தனாக (வேறு பெண்களோடு பாலுறவு வைத்துக் கொள்ள துடிப்பவனாக) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனைத் தெய்வத்தைப் போல் வணங்க வேண்டும்.” (மனு 5.154)

நளாயினி அரசனின் மகள். எனினும் பெருநோய் வந்த தனது கணவன் மௌத்துகலிய முனிவரை  அவர் விருப்பத்திற்காகத் தேவதாசியிடம் சேர்க்கக் கூடையில் வைத்து எடுத்துச் சென்றாள்.  மனுவைப் பின்பற்றினால் இப்படித்தான் நேரும்.

பிராமணர்களை மட்டுமே உயர்த்திக் கூறும் சனாதனம் பிராமணப் பெண்களைக்கூட இழிவாகத்தான் கூறுகிறது.

பெண்களை உயர்வுபடுத்தாவிட்டால்கூடப் பரவாயில்லைபெரிதும் இழிவு படுத்துவதாகத்தானே சனாதனம் இருக்கிறது. இதனைத்தான் பெண்களை உயர்வு படுத்துவதாகச் சனாதனவாதிகள் கூறுகிறார்களா? நல்ல வேடிக்கை.

சூத்திரன் அடிமையாக இருப்பதற்கே பிறந்தவன் என்று சொல்வதுதான் உயர்த்துவதா? சூத்திரர்களைக் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். இவ்வாறு சூத்திரர்கள் உயிரைப் பறிக்கச் சொல்வதுதான் உயர்த்திக் கூறுவதா? “சூத்திரனுக்குச் சோறு போட்டால் நரகம். எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம்(உணவு) முதலியவற்றைச் சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் காலச் சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (மனு , 3.249)” என்று சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றைப் போட்டால்கூடப் பாவம், நரகுலகு செல்வான் என்பதுதான் உயர்த்துவதா?

போரில் வெற்றி பெற்றுக், கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.(மனு  8.415) எனச் சூத்திரனை அடிமையாகவும் தொன்று தொட்டு வேலை செய்யப்பிறந்தவன் என்று சொல்வதும்தான் உயர்த்திக் கூறுவதா?

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கக் கூடாது: சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குத் தேவையானதை(உபயோகமானதை)விட மிகவும் அதிகப் பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத் தக்க பிராமணாளையே இம்சை செய்ய வேண்டிவரும் (அத்தியாயம் 10  : சுலோகம் 129). – இவ்வாறு சூத்திரன் உழைப்பதற்குக்கூடத் தடைவிதிக்கும் சனாதனம்தான் சூத்திரனை உயர்த்துகிறதா?

இந்நூலில் பல இடங்களில் சூத்திர்கள் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் பற்றிய சனானதனக் கருத்துகள் உள்ளன. அவற்றைப் பாருங்கள். அப்பொழுதுதான் சனாதனம் மக்களில் ஒரு பிரிவினருக்குச் சூத்திரன் என்று பெயர் சூட்டி இழிவு படுத்துவதைப் புரிந்து கொள்ளளலாம்.

  • பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்தப் பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு. – இவ்வாறு தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!
  • திருமாவளவன் மட்டுமல்லர். சனாதனம் குறித்து ஆராயும் நடுநிலையாளர்கள் யாவரும் இவ்வாறுதானே கூறுகிறார்கள். இந்த உண்மைக்கு எதிராக எதுவும் கூற இயலாததால் அவர் மீது எரிச்சலைக் கக்குகின்றனர். இதனை எதிர்ப்பவர்கள் சனாதனத்தை விரும்பி மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்துப் பயனடைய விரும்புகிறார்கள் என்றுதானே பொருள்.
  • (தொடரும்)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – அன்றே சொன்னார்கள் 48 – இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 தொடர்ச்சி)


கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக்  காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன இவை பற்றிய புலவர்கள்  சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை                 (கலித்தொகை : 24.9)  என்றும் புலவர் மதுரை மருதனிளநாகனார், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக்  குறிப்பிடுகின்றனர்.

பெரிய காவலுள்ள வலிமையான வீடுகளையும் வீடுகளைச் சுற்றி அமைந்த புலால் மணம் மிக்க அம்புகள் ஏந்திய வீரர்களின் காவல் கட்டுகளையும் குறிப்பிட்டு இன்றைய வல்லம் என்னும் ஊர்க் காட்சியைப் புலவர் கருந்தும்பியார்,
பெரும்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பின் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே
(புறநானூறு : 181. 4 -6) எனக் குறிப்பிட்டுள்ளார். (குறும்பு-அரண்; கடிமிளை-காவல்காடு; வலாஅரோனே – வல்லார் என்னும் ஊரைச் சேர்ந்தவனே)
ஓவியத்தில் தீட்டப்படும் அழகை விட மிகுந்த அழகுடன்  உள்ள  உயரிய மண்ணால்  எழுப்பப் பெற்ற மதிலால் சூழப்பட்ட பாதுகாப்பான நீண்ட பெரிய வீட்டைப் புலவர் கபிலர்,
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் (பதிற்றுப்பத்து : 68.16-17) என்கிறார்.
அகலமான பரப்பிலும் பல மாடிகளுடன் உயரமாகவும் வளமைக்கு எடுத்துக்காட்டாகவும் நகரத்தைப் போல் சிறப்பாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர்கள் குறித்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். நகர் என்பது நகரத்தைக் குறிக்கும் இடங்களும் உண்டு. ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் வானம்போல் பரந்த செல்வம் மிகுந்த வளமையான நகரத்தை
வானத் தன்ன வளநகர் (மதுரைக்காஞ்சி : 741)  என்கிறார்.
புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நிலா முற்றங்கள் உடைய  நீண்ட மதில்கள் சூழ்ந்த மாளிகைகள் வரிசையாய் நிறைந்த ஊரை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே (அகநானூறு : 124.15-16)
என்கிறார்.

மிகுந்த செல்வம் நிலையாகப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க நகரான உப்பங்கழிப் பக்கங்களை உடைய மருங்கூர்ப்பட்டினத்தைப் புலவர் நக்கீரர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து (அகநானூறு: 227.19-20)
என்கிறார்.
புலவர் கோவூர்கிழார், தைமாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலவும் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவையுமுடைய அகன்ற நகரத்தைத்
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.

புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப்
புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் – குளிர்ந்த நீர்நிலை)
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை
முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார்.
புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை,
நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
ஆசிரியர் மாங்குடி மருதனார், எல்லாக் காலத்திலும் அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரிய வளமான அரண்மனையை,
பயனற வறியா வளங்கெழு திருநகர் (மதுரைக்காஞ்சி : 216) என்கிறார்.
தம் முன்னோர்கள்போல் இமயமலையில் வில் கொடியைப் பொறித்த சேரலாதனின் மாந்தை என்னும் நகரில் உள்ள இலக்கணப்படிக் கட்டப்பெற்ற முற்றம் உடைய அரண்மனையைப் புலவர் மாமூலனார்
நல் நகர் மாந்தை முற்றத்து (அகநானூறு : 127.6) எனக் குறிப்பிடுகிறார்.

அரண்மனையை நகர் எனக் குறிப்பது போல் கோயிலையும் நகர் என்றே குறித்துள்ளனர்.
புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ தெய்வம் உள்ள கோயிலையும் நகர் என
அணங்குடை நகரின் (அகநானூறு :99.9) என்னும் தொடரில்
குறிப்பிடுகிறார்.

இதுபோல் முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம் வருவதைக் குறிக்கும் வகையில் புலவர் காரிகிழார்
முனிவர்
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு (புறநானூறு : 6.18)
என்று சொல்லும் பொழுது கோயிலைக் குறிக்க நகர் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
புலவர் மருதன் இளநாகனார் கடவுள் குடிகொண்டுள்ள பாதுகாப்பான கோயில் என்னும் பொருளில்
கடவுள் கடி நகர் (கலித்தொகை 84.6) என்கிறார்.
ஆசிரியர் நல்லந்துவனார் கடம்பமர் செல்வனாகிய திருமுருகனின் திருக்கோயிலைக்
கடம்பமர் செல்வன் கடிநகர் (பரிபாடல் 8.126) என்கிறார்.

எனவே, சிறப்பான நகரங்களைப் போலவும் பெரிய அரண்மனைகளைப் போலவும் கோயில்களைப்போலவும், வீடுகளை உயர்ந்தோங்கிய மாளிகைகளாகக் கட்டி உள்ளனர் என்பது கட்டடவியலில் நம் முன்னோர் தலைசிறந்து விளங்கியமைக்குச் சான்றாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 13 ஜூன், 2025

73.சனாதனம் இருப்பதால்தான் கீழோர் எனப்படுவோர் உயர்பதவிகளில் அமர்கின்றனரா? + 74. காலில் பிறந்தவன் சூத்திரன் என்பது எங்ஙனம் இழிவு படுத்துவதாகும் என்கிறார்களே! + 75. திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது” – எடப்பாடி பழனிசாமி – பொய்யும் மெய்யும்: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 70-72 தொடர்ச்சி)

 

  1. பிராமணரைத் தவிரப் பிறர் பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் எனக் கூறும் சனாதனம் இருப்பதால்தான் கீழோர் எனப்படுவோர் உயர் பதவிகளில் அமர்வதாகக் கூறுவது நெஞ்சறிந்து சொல்லும் பொய். இல்லாத உண்மையை இருப்பதாக ஏமாற்றும் மோசடி. “சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்துசா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்குச் சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராசன் இன்று ஆளுநர்! எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எசு. வானதி சீவாசன் இன்று வழக்கறிஞர் ஆனார்.” – இவ்வாறு ஆ.இராசா பேசியுள்ளதே இதற்குத் தக்க விடையாகும்.

சனாதனத்தால்தான் கீழோர் எனப்படுவோர் ஒடுக்கி வைக்கப்பட்டனர். அவ்வாறிருக்க அதற்கு நேர்மாறாகத் துணிந்து கூறுவோருக்காகத்தான், “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனப் பாரதியார் பாடிச் சென்றார்.

  • உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் சமம்தான். எனினும் ஆரியர்கள், கால் இழிவானது, காலில் பிறந்தவர்கள் இழிவானவர்கள் என்கிறது. தலை உயர்வானது. தலையில் பிறந்த பிராமணன் உயர்வானவன் என்கிறது. இதையறிந்தே பொய்யைத் தலைவிரித்தாடச் செய்கின்றனர்.

“அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று  உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாய்ப் பகுத்தார்.” –  மனு 1.  87.)

“இடைக்கு மேல் உடல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது” என மனு(1.92) கூறுகிறது. “மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் பிராமணன் சிறந்து விளங்குகின்றான்” என்றும்  வருணாசிரமத்தைச் சொல்கிறது மனு(1.93). எனவே, காலில் பிறந்தவன் சூத்திரன்  எனச் சொல்வதை இழிவுபடுத்தும் நோக்கில் அல்ல என்பது பொய்தானே! இழிவு படுத்தத்தானே அவ்வாறு கூறியுள்ளனர்.

காலில் பிறந்ததாகக்கூறி இழிவாகக் கூறும் சனாதனம் “உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்” என  உழைப்பவர்களை இழிவுபடுத்துகிறது. ஆனால் தமிழ்நெறியை உணர்த்தும் திருவள்ளுவர் ஓயாமல் உழைப்பவரின், தளராமல் பாடுபடுவரின், அயராது பணியாற்றுபவரின் காலில்தான் திருமகள் உறைகிறாள் என்கிறார் திருவள்ளுவர்.

 மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)

 செல்வத்தின் கடவுளான திருமகள் அல்லது இலக்குமி திருமாலின் மார்பில் தங்கியிருப்பதாகக் கூறுவது ஆரியப்புராணம். அதை மறுத்து உழைப்பவரின் காலில் இருப்பதாகக் கூறுகிறார். இங்கும் உழைப்பவரின் நெஞ்சில்  அல்லது தலையில் இருப்பதாகக் கூறாமல் காலில் இருப்பதாகக் கூறிக் காலை உயர்த்துகிறார்.

காலில் பிறந்தவர்களாக ஒரு சாராரை இழிவு படுத்துவது சனாதனம். அத்தகையோர் காலில் தான் திருமகளே தங்குவதாகக் கூறி அத்தகையோரை உயர்த்துவது தமிழ் நெறி .

போரில் வெற்றி பெற்றுக், கொண்டு வரப்பட்டவன், பத்தி யினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக் கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர். (மனு.8.415) இவ்வாறு சனாதனம் சொல்வதுதான் உயர்வா?

  • சனாதன தருமத்திற்குள் உள்ளே செல்ல விரும்பவில்லை.  … . தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரண்டகம்(துரோகம்), அநீதி இழைத்த திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது” என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே.
  • சரி. தி.மு.க. பேச வேண்டா. இவர் பேசலாமே. இவருக்குச் சனாதனத்தின் அநீதி தெரிந்திருக்கிறது. அதைப்பற்றிச் சொன்னால் பாசகவின் தோழமை இல்லாமல் போகும். இதனால் அ.தி.மு.க.மீதுள்ள பிடி நழுவும் என்ற அச்சத்தால் இவ்வாறு கூறுகிறார் என்பது தெரிகிறது.

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 : அன்றே சொன்னார்கள் 47 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 தொடர்ச்சி)

கட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம்.

நாம் இப்பொழுது வீட்டிற்குக் குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை நன்கு அறிந்திருந்தனர். இவ்வாறு, மரநிழலில் அமைந்துள்ள நீர்நிலை போன்று குளிர்ச்சியான மாடித்தளங்கள் உடைய மாளிகையைப் புலவர் தாயங்கண்ணனார்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் (அகநானூறு: 105.7) என்கிறார்.

இப்பாடலிலேயே மணிசெய்மண்டை (மணிகள் பதிக்கப்பெற்ற பொற்கலம் உள்ள மனை) எனக் குறிப்பிட்டுச் செல்வச் சிறப்பையும் அவர் விளக்கி உள்ளார்.

மாடிகள் நிறைந்து சிறப்புற்ற மாளிகையைப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்,

மாட மாண் நகர் (அகநானூறு : 124.6) என்கிறார்.


உழவர்களின் தனித்தனித் தோப்புகளில் தனி வீடுகள் அமைந்திருந்தன. உழவர்களுக்கான அத்தகைய தனி மனைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்

தண்டலை உழவர் தனிமனை (பெரும்பாணாற்றுப்படை 355)
எனக் கூறுகிறார்.


வீடுகளுக்கான வாசல்கள் அகலமாக அமைந்து கதவுகள் ஒற்றைப் பெருங்கதவுகளாக அமைக்கப்பட்டதுடன்  இரட்டைக் கதவுகளாகவும் அமைந்திருந்தன. இரு கதவுகளைச் சேர்த்து மூடும் வகையில் அகலமான வாசலும் கதவுகளும் அமைக்கப்பட்டமையைப்  புலவர் மருதனிளநாகனார், பெரும் செல்வம் நிலையாக உள்ள மிகுதியான உணவுப் பொருள்களை உடைய பெரிய இல்லத்தின் இரட்டையாய் வந்து கூடும் கதவு எனக் குறிப்பிடும் வகையில்,
பெருந்திரு நிலைஇய வீங்குசோற்று அகல்மனை
பொருந்து நோன் கதவு (கலித்தொகை :83.1) என்கிறார்.

வீட்டிலுள்ள அறைகள்நெல்கள் குவித்துச் சேமித்து வைக்கும் வகையில் பேரளவாக அமைந்திருந்தன. இவ்வாறு, நெல் குவிந்து கிடக்கும் வீடுகள், பொன்கொழிக்கும் தெருக்கள் என்று உணவு வளம் நிறைந்த வீடுகளின் சிறப்புகளையும்  செல்வ வளம் மிகுந்த நகரின் சிறப்புகளையும் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்
நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும்
அடியில் விளக்குகிறார்.


மேலும் பிறவற்றைச்சேர்த்து வைக்கும் வகையிலும், வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிந்திருக்கும் அளவிற்குப் பெரிய அளவில் வீடுகள் அமைந்தமையைப் புலவர் பரணர்

மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்
குறித்துள்ளார்.
(மிசை அம்பி – உயர்வான படகு; குவை-குவியல்; கறி – மிளகு)

வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதைப் புலவர் குன்றுகட் பாலியாதனார்

மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும் தொடர் மூலம்
விளக்குகிறார். எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன.

மலர்மாலை அணிந்து மணம் வீசும் வீடுகளில் விளையாடி மகிழ்ந்தமையை ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார்,
மணங்கமழ் மனை தொறும் பொய்தல் அயர (மதுரைக்காஞ்சி : 589)
எனக்குறிப்பிட்டுள்ளார்.(பொய்தல்-விளையாட்டு). எனவே,விளையாடுவதற்கேற்ற வகையில் வீடுகள் பெரிதாக அமைந்திருந்தன எனலாம்.

பொய்கையால் சூழப்பெற்ற பூங்கா அமைந்த அழகான பெருமனைகள் இருந்தமையைப் புலவர் பரணர்,

பொய்கை சூழ்ந்த பொழில்மனை (அகநானூறு: 181.18) எனக்
குறிப்பிடுகிறார்.
இன்றைய நாகரிக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இத்தகைய வீடுகளை நாம் அமைத்துள்ளோம். இன்றைய நாகரிகச் சிறப்பை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பழந்தமிழ்முன்னோர் அடைந்துள்ளனர். நாம்அயல்மொழி வாயிலாக அறிவை இழந்து நாகரிகத்தைத் தொலைத்து நிற்கிறோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 12 ஜூன், 2025

70.அன்பே சிவம் என்பது சனாதனம். – சரியா? + 71. ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.- சரியா? + 72. பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் என்கிறாரே இரங்கராசு – சரியா?

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69 தொடர்ச்சி)

அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்

அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்

அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

என்பது திருமூலர் கூற்று.

அன்பு, அன்பிலிருந்து பிறக்கும் அருள் (அன்பு ஈன் குழவியாகிய அருள்) எவ்வகை வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய பண்பாகும். குடும்பத்திலுள்ள பெற்றோர், உடன் பிறப்புகள், வாழ்க்கைத் துணை, மக்கள், பிறர், பிற உயிர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் காட்டப்படுதே அன்பு என்னும் நெறி. இதுவே தமிழ் நெறி.

ஆனால், சனாதனம் பிராமணனைத் தவிர பிறரிடம் அன்புகாட்டியோ அருள் உள்ளத்துடனோ ஏதும் கொடுத்தால் நரகம் செல்வான் என்றும் பிராமணனுக்குக் கொடுப்பவன் மட்டுமே மேலுலகம் செல்வான் என்றும் அன்பு நெறிக்கு எதிராகக் கூறுகிறது. அவ்வாறிருக்க, தவறான கருத்தைப் பரப்பும் இரங்கராசு(பாண்டே)க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இவ்வடிகள் இடம் பெறும் பூதத்தாழ்வாரின் முழுப்பாடல் வருமாறு:

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

இங்கே ஞானத்தால் இறைனை வணங்கியதாகப் பூதத்தாழ்வார் கூறவில்லை. அவ்வாறு கூறினால் சனாதனத்தின் தோற்றுவாயான சமற்கிருதத்தில் வழிபட்டதாகப் பொருள் வரும். எனவேதான்  தமிழால் வழிபட்டதாகக் கூறுகிறார். தமிழ் என்பது இனிமை; தமிழ் என்பது அன்பு; தமிழ் என்பது அருள்; தமிழ் என்பது அறிவு; தமிழ் என்பது இறைமை; இதற்கு மாறானது சனாதனம். அவ்வாறிருக்க இரண்டையும் ஒன்றாகத் திரித்துக் கூறும் இரங்கராசு(பாண்டே)க்கு இறைவன் எங்ஙனம் நல்லருள் புரிவார்?

பிராமணனுக்கு எல்லா வருணத்தாரும் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன் எலலா வருணத்தாருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். என்பதுதான் சனாதம் கூறும் பணிவு.

இத்தகைய அடிமைத்தனத்தைத்தான் பணிவு என்கிறாரா இரங்கராசு.

  • காண்க வினா விடை 60