வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே!
– குவியாடி
ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால் தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை.
இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்காகத் திருத்தம் தேவை என்றால், ஆழமாகச் சிந்திக்காமல் பெரும்பான்மையர் எதிர்க்கின்றனர்.
அரசியல் யாப்பு , பிரிவு 17 இன்படி நம் நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது.ஆனால், நடைமுறையில் தீண்டாமைச் செயல்கள் இருந்தன; இருக்கின்றன, எனவே, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்(Protection of Civil Rights) என 1976 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான சட்டமாக இஃது இருந்ததே தவிரப் பழங்குடியினர் நலன் குறித்துப் பொருட்படுத்தவில்ல.,
எனவே, 1989இல் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், 1995இல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருப்பினும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. குற்றங்களைப் பதிவு செய்யாமை, பதிந்தாலும் பிறழ்சான்றர்(hostile witness) மூலம் வழக்கை இலலாமல் ஆக்கல், கட்டைப்பஞ்சாயத்து, பாதிப்புற்றவர் மீதே எதிர் வழக்கு தொடுத்து வழக்கை நீர்த்துப்போகச் செய்தல், பொய் வழக்குகள் மூலம் அச்சுறுத்தல், இச்சட்டத்தின் படிக் குற்றம் புரிந்தவர்களுக்குக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438வது பிரிவு பொருந்தாது எனச்சட்டம் இருப்பினும் இப்பிரிவில் பிணையில் விடுதல். ஆகியவற்றால் வன் கொடுமையாளர்கள் தப்பி விடுகின்றனர் என்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்பாடுகள் இவற்றிற்கு மட்டும் உரியன அல்ல. வரன் கொடை(வரதட்சணை) முதலான பல வழக்குகளிலும்இதுதான நிலை. காவல் துறையில் வழக்குஉசாவல் தொடர்பான உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது இவையும் மாறும்.
அதே நேரம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூறுவதற்கிணங்க மாநில அளவில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கவும் வேண்டும். இவற்றை முறையாக அமைத்து நடவடிக்கைகள்எடுத்திருந்தாலே பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுக் குற்றங்களும் குறைந்திருக்கும்.
இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 10இல் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரைப் பொது இடத்தில் இழிவுபடுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப் படுத்துவது அல்லது அச்சுறுத்துவது தண்டைனக்குரிய குற்றமாகக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.
இன்ன வகுப்பு என்று தெரியாமல் இடம் பெறும் வாதங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் சாதியைச் சொல்லித் திட்டி இழிவுபடுத்தியதாகக் கூறிப்பொய் வழக்கு தொடுத்து அலலலுக்கு உள்ளாக்கும் போக்கு வளர்பிறையாக உள்ளது. இந்தப் போக்கிற்கான கண்டனமும் வளர்ந்து கொண்டேஉள்ளது.
பாபு செகசீவன்ராம் இந்தியத் துணத்தலைமையமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த பொழுது(1977–1979) இப்போக்கு வளர்ந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிறரை அடித்து விட்டு உடனே செகசீவன்ராம் அலுவலகத்திற்குப் பிற வகுப்பாரால் அடிக்கப்பட்டதாகத் தொலைவரி கொடுத்துப் பிறரை இன்னலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொய்வழக்கு போடுவது மிகுதியானது.
இத்தகைய பொய்வழக்குகளால் பாதிப்பறுவோர் வளர்ந்ததால் மதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்புகூட உருவாக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் உள்ளது. அதற்குச் சான்றுதான் மகாராட்டிரத்தில் இத்தகைய பொய்வழக்குகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளில் இரு கோடி மக்களுக்கும் மேலாகக் கலந்து கொண்டமை.
இந்திய அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரிவு 338இன் படி 1952இல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் சார்பு அமைப்புகளாக நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளது. 89-ஆவது இந்திய அரசியல்யாப்புத் திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும்பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசியஆணையம் என இரண்டு ஆணையங்களாக அரசு அமைத்தது.
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பு காலங்கடந்து அமைப்புகளை உருவாக்கல், அமைப்புகள் உருவாக்கினாலும் காலந்தவறிச் செயல்படல் போன்றவற்றால் எதிர்பார்த்த பயன்கள் விளையவில்லை, 3 ஆ்ண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாணையங்கள் கூடுவதாலும் போலோ பாசுவான்சாத்திரி, விசய்சங்கர் சாத்திரி போன்ற முற்பட்ட வகுப்பினர் இவற்றின் தலைவர்களாக இருந்துள்ளமையாலும் இவற்றால் போதிய பயனிருந்திருக்காது என்பதைப் புரிந்திருக்கலாம்.
நீதிபதிகள் இலலித்து, கோயல் ஆகியோர் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் குற்றச்சாட்டின் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிய வேண்டும் என்று மார்ச்சு 20இல் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன்பு பிணை வழங்க இயலாக் கைதுகளை மேற்கொண்டு வந்தனர். பொய்வழக்குகள் பெருகுவதால், முறையீடு வந்த 7 நாளுக்குள் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிததுள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், மேல் அலுவலர்களின் எழுத்து மூலமான இசைவு பெற்றபின்னரே கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவிற்கு அவர்கள் வந்தது திடீரென்று நடந்ததல்ல. நாடெங்கும் உள்ள நீதி மன்றங்களில் முன்னரே பல தீர்ப்புகளில் பொய் வழக்குகளுக்குஎதிரான கண்டனங்கள் வந்த பின்னரும் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையர்கள் இது குறித்து எச்சரித்த பின்னருமேதெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கூறுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும் என்றே இதன் ஆதரவாளர்கள் போராடுகின்றனர். நீதிபதிகள் கைது செய்யத் தடைவிதிக்கவில்லை. மெய்த்தன்மையைக் கண்டறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளனர். சட்டத்தால் பாதிப்பு உறுபவர்களுக்காகவும் நீதிமன்றம் பேசுவதுதானே முறை .அந்தக் கடமையைத்தானே நீதிபதிகள் ஆற்றி உள்ளனர்.
வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் படியான நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் விழிப்புணர்வுக் குழுக்களைச் செயல்படச் செய்யவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு விரைவில் தீர்ப்பும் இழப்பீடும் கிடைக்கவும் போராட வேண்டும். மாறாகச் சட்டத்தால் பாதிப்படை வோர்களுக்கு எதிராகப் போராடுவது முறையல்ல.
இந்திய அரசும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்கள் தீர்வு பெறுவதற்குரிய உரிய திருத்தங்களை உடனே மேற்கொள்ள வேண்டும். அவற்றுடன் சேர்த்துப் பொய் வழக்குகளைத் தடுக்கவும் அவற்றால் பாதிப்புறுவோர்க்குத் தீர்வு கிடைக்கவும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது இத்தகைய எதிர்ப்புகள்அடங்கும்.
”பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறி பிறந்த நாட்டில் தீண்டாமைக் கொடுமை இருப்பது கொடுமையல்லவா? உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைக் களைய அரசுமுற்பட வேண்டும். பொய்வழக்குகளுக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதற்கு எதிராகப் போராடுவதைப் போராட்டக்காரர்களும் கைவிட வேண்டும்!
– குவியாடி