சனி, 27 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல



திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

6

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(திருவள்ளுவர், திருக்குறள் 298)
“புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர்.
உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத நீரைப்பற்றி இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தண்ணீர் இன்றியமையாதது. அதனை மாசுபடாமல் காப்பது நம் கடமையாகும்.. தண்ணீர் மட்டுமின்றிச் சுற்றுப்புறத்தில் நமக்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் மாசுபடாமல் காத்தல் வேண்டும். சுற்றுப்பறத் தூய்மைக்கும் நீரே அடிப்படையாக அமைகிறது.
 வாய்மையைப்பற்றிக் கூறும்பொழுது திருவள்ளுவர், பிறருக்குத் தீங்கு விளைவிக்காத சொல்லே வாய்மை, பிறருக்குக் குற்றம் இல்லா நன்மை தரும் பொய்ம்மையும் வாய்மையே, நெஞ்சறிந்து பொய்கூறும் பொய்யரை அவர் நெஞ்சே சுடும், உள்ளத்தில் பொய் இல்லாதவர் உலகத்தார் உள்ளத்தில் உள்ளார், வாய்மையிற் சிறந்தது யாதுமில்லை,  உண்மை பேசுதல் தவத்தையும் தானத்தையும்விடச் சிறந்தது, பொய்யாமை எல்லா அறமும் தரும், வாய்மையுடன் திகழ்ந்தால் பிற அறங்கள் தேவையில்லை,  பொய்யாமையே சிறந்த ஒளிவிளக்கு, அகஇருள் நீக்கும் விளக்கு பொய்யாமையே என   வாய்மையின் தன்மை, எது வாய்மை, வாய்மையின் சிறப்பு எனப் பகுத்துத் தெளிவுபடுத்துகிறார்.  அவ்வாறு கூறும்பொழுது நீருடன் ஒப்பிட்டுக் குற்றமற்ற தன்மைக்கு வாய்மையே அடிப்படை என வலியுறுத்துகிறார்.
மேற்குறித்த குறளுக்கு விளக்கம் தரும் பெரும்பாலோர் புறம் என்பதை உடலின் வெளிப்பகுதி எனக் கருதிக் கொண்டு உடல் அழுக்கைப் போக்க நீர் வேண்டப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர். உடல் அழுக்கை மட்டும்போக்க நீர் உதவவில்லை. உணவு மூலப் பொருள்களைத் தூய்மை செய்யவும் உணவை ஆக்கவும் சமையல் பாண்டங்கள், அறைகள், கழிப்பிடங்கள் என யாவற்றையும் தூய்மை செய்யவும் நீர் தேவைப்படுகிறது. அல்லது நன்னீாின்மையால் அல்லது கழிவு நீரால் அல்லது நீரை முறைப்படி பயன்படுத்தாமையால் தூய்மையின்மை என்ற நிலை உண்டாகிறது. எனவே, சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை நீர். இதையே திருவள்ளுவர் புறந்தூய்மை எனக் குறிக்கின்றார்.
கழிவுநீர் கலப்பதால் நீர் கேடுறுகிறது. இதனால் நாம் நோய்க்கு ஆளாகிறோம். தொற்றுநோய்க்கு ஆளானால் பிறருக்கும் நோய் பரவித் துன்பம் தருகிறது. நோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மையான சூழல் தேவைப்படுகிறது. இதற்கு நீர் அடிப்படையாய் அமைகிறது. ஆகப் “புறந்தூய்மை நீரால் அமையும்” என்பதன் மூலம் நன்னீரால் தூய்மையும் மாசுற்ற நீரால் கேடும் விளையும் என இரு நிலையையும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் என்பதே சரியாக இருக்கும்.
எனவே, உடலிலுள்ள அழுக்கைப் போக்க மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் சேரும் அழுக்கை அகற்றித் தூய்மையான சூழலில் வாழவும் நீரே தேவை என்பதையே திருவள்ளுவர் ‘புறந்தூய்மை’ என்பதன் மூலம் உணர்த்துகிறார்.
இன்றைய சுற்றுப்புற அறிவியல் வலியுறுத்தும் புறத் தூய்மையை அன்றே திருவள்ளுவர் சுட்டிக் காட்டி உள்ளார் என்பது சிறப்பல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 27.07.2019

குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா

அகரமுதல

ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00

திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளி
புதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044

திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை
முப்பெரு விழா

மாணவ மாணவியர்க்குப் பாராட்டு
‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு
வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா

கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நிறைவு

அகரமுதல


ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / பிற்பகல் 2.00

திரு கிருட்டிணமகால் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி
திருவள்ளுவர் இலக்கியப் பேரவை
கூடுவாஞ்சேரி
இரண்டாம் ஆண்டு நிறைவு


சிறப்புரை
வாழ்த்துரை
பரிசளிப்பு

வெள்ளி, 26 ஜூலை, 2019

17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி

அகரமுதல


ஆடி 11, 2050 / சனி / 27.07.2019

காலை 9.00 முதல் மாலை 5.00 வரை

காவேரி பொறியியல் கல்லூரி, பேரூர், திருச்சிராப்பள்ளி

திருச்சி இரானா மருத்துவமனை ஆதரவுடன்

யாழ்ப்பாணம் தமிழ் ஆடல்கலைமன்றம்

திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம்

இணைந்து நடத்தும்

17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு


இலக்கியச்சிந்தனை நிகழ்வு 588 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 53

அகரமுதல


ஆடி 11, 2050 சனி  27.07.2019

மாலை 6.00

பாரதியும் கண்ணதாசனும் – புதுவை இராமசாமி

கவியோடைக் கவிஞர்கள் நிகழ்த்தும் ‘இமிர்’

தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை

அகரமுதல

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்

 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா

ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019

திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041
 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி:  குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:
 சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதிபதி எசு.செகதீசன் தலைமையில் பெரியபுராணம் நூல் (சூ.சுப்பராய நாயகர் உரை) வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. திருநிறைதிரு அம்பலவாண தேசிக பரமாசாரியச் சுவாமிகள் நூலை வெளியிட, முதல் படியைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொள்கிறார். முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முதலானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய நாள் மாலை 4.30 மணி : ‘பெரிய புராணம்- ஒப்பிலா உயர் காப்பியம்’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை செயராசு சிறப்புரை.
 மாலை 6 மணி: நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் சேக்கிழார் விருதுகள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த தமிழறிஞர், ஓதுவார், பேராசிரியர், சமய – சமூகத் தொண்டர், பத்திரிகையாளர், சிற்றிதழ் ஆசிரியர், சிறந்த நூல் எனப் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும், தேவாரம், திருமுறை மனனப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
தொடர்ந்து இரவு 7 மணி:  ‘சேக்கிழாரின் உவமைத் தனித்துவம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம்
தலைமை : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாசுகர்
மூன்றாம் நாள் /சனிக்கிழமை காலை 10 :
முனைவர் தி.இராசகோபாலன் தலைமையில் ‘திருமுறை பண்களும் திருத்தொண்டின் பெருமையும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு
பிற்பகல் 3.30 மணி :  புலவர் வே.பதுமனார் தலைமையில் பக்தி கவிச்சோலை
மாலை 6 மணி: பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் ‘திருக்குறள் விழுமியங்களும் திருத்தொண்டர் வாழ்வும்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் அரங்காடல்
நிறைவு நாள்  / ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி:
 ‘திருத்தொண்டர் புராணத்தில் ஈர்த்தென்னை ஆட்கொள்வது’ என்ற தலைப்பில் விழாவின் இறுதி நாளான இளைஞர் அரங்கம்
பிற்பகல் 3.30 மணி: ‘பெரியபுராணப் பெண்டிர்’ நிகழ்ச்சி:
தலைமை : கம்பவாரிதி இலங்கை செயராசு
சொற்பொழிவு: திருவையாறு வே.இரமணன், சொ.சொ.மீ.சுந்தரம்
மாலை 6 மணி: முனைவர் கண.சிற்சபேசன் தலைமையில் பாங்கறி மண்டபம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி






ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..! 



இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கத்திலேயே இதற்கான முயற்சியில் இறங்கி யுள்ளது.

ஒரே தேர்தல் என்பதற்காகச் பல சட்டமன்றங்களையும் ஆட்சிகளையும்  கலைக்க வேண்டி இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்களின்காலம் முடியும் முன்னரே அழிக்கப்படுவது மக்களாட்சிக்கு எதிரானதல்லவா?

வாதத்திற்காக நாடாளுமன்றம், அனைத்துச் சட்டமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் ஒருசேரத் தேர்தல் நடத்துவதாகக் கொள்வோம். அப்படியானால் ஆட்சியில் இருக்கும் அரசுகளையும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்றங்களையும் தேர்தலுக்காகக் கலைப்பது என்பது மக்களாட்சியைப் படுகொலைசெய்வதாகத்தானே பொருளாகும்?  இப்படுகொலை தேவைதானா?

இப்படுகாலை குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேர்தல் நடந்து முடித்துவிட்டதாகக் கொள்வோம். சில மாநிலங்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் வரலாம். தனக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை கொண்டது பா.ச.க.

இது போன்ற சூழலில் மாநில அரசு கலையும் நிலை வரலாம். பல்வேறுமாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பொழுது வெவ்வேறுநாள்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம வரத்தானே செய்யும். அப்பொழுது நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகும் அல்லவா?

இதனை மறுதலையாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். நாடாளுமன்றச் சூழல் மாறி மத்திய ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டு எக்கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாவிட்டால் மத்தியில் தேர்தல் நடத்தித்தானே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருப்பது என்றால் மத்திய மக்களாட்சி என்பது அடிபட்டுத்தானே போகும்.

அப்படி எல்லாம் இல்லை. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 5 ஆண்டு முழுமையும் பொறுப்பில் இருக்கும் வரை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்கின்றனர் சிலர்.  என்ன தவறு செய்தாலும் எவ்வளவு ஊழலில் திளைத்தாலும் ஆட்சி நிலைத்துத்தான் இருக்கும் என்றால் ஆட்சியாளர்களுக்குத் தவறு செய்வதில் எந்த அச்சமும் இருக்காதே! இதனால் மக்கள் நலன்கள்தானே பாதிக்கப்படும்.

சில செலவுகளைச் செய்துதான் ஆகவேண்டும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் செலவு. எனவே, சிக்கனம் என்ற பெயரில் மக்களாட்சிக்கு ஊறு நேரும் வகையில் செயல்படக்கூடாது என நாளைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.
 பா.ச.க.வும் பேராயக்(காங்.) கட்சியும் ஒன்றுக்குஒன்று சளைத்ததாகக் கூற இயலாது. பேராயக்கட்சிக்கும் ஒரே நாடு  ஒரே கோட்பாடு என்ற கொள்கைதான். எதிர்க்கட்சியாக இருப்பதால், பா.ச.க.வை எதிர்ப்பதற்காகச் சில கருத்துகளைக் கூறினாலும் அடிப்படையில் அதற்கு இணையான செயல்பாடு கொண்டதுதான்.

 “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப்பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுறவேண்டியுள்ளது." (பேரா.சி.இலக்குவனார்)

இவற்றின் அடிப்படையில்தான் பா.ச.க. ஒரே தேர்தல் எனப் பிதற்றி வருகிறது.
ஒரே மொழி எனச் சமசுகிருதத் திணிப்பில்  அசையா உறுதியுடன் நிற்கிறது பா.ச.க. ஒரே கல்வி என்று சொல்லித்தான் பொதுநுழைவுத் தேர்வுகளைப் (நீட்டு)புகுத்திப் பல உயிர்களைக் காவு கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டும் வருகிறது பா.ச.க.

அடுத்து ஒரே வழிபாடு, ஒரே உடை என்பன போன்ற ஆயுதங்களைக் கைகளில்எடுக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகத் தன் உள்ளக்கிடக்கையான ஒரே மதம் என்பதைக் கைகளில் எடுக்கும் பா.ச.க.

நாட்டு மக்களின் நலன்களில் கருத்து செலுத்த  வேண்டும் என்ற பா.ச.க.வின் எண்ணத்தைப் பாராட்டலாம். ஆனால் அதற்காக ஒத்த தன்மை என்ற போர்வையில் பாகுபாட்டை உருவாக்கும் முயற்சிகளை அது கைவிடவேண்டும். ஒரே தேர்தல் என்பது வாதுரைக்குரிய பொருளே அல்ல என்பதை உணர வேண்டும். அத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
-       இலக்குவனார் திருவள்ளுவன்
-       தினச்செய்தி 26.07.2019




திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

5

 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271)
ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல்.  இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார்.
வஞ்சக மனம் கொண்டு  அதனை மறைத்து வெளியில் ஒன்றுமாய் உள்ளுக்குள் வேறுமாய் இருப்பவனைப் பார்த்து ஐம்புலன்களும் உள்ளுக்குள் கேலி செய்து சிரிக்கும் என்கிறார். அஃதாவது போலித்துறவியரைப் பிறர் குறை சொல்லாவிட்டாலும் அவர்களின் மனச்சான்றே அவர்களைக் கண்டு எள்ளி நகையாடும் என்கிறார் திருவள்ளுவர். (படிற்று ஒழுக்கம் என்றால் பொய் ஒழுக்கம்.)
நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகியவை ஐம் பெரும் பூதங்கள்.
மெய் (காற்று), வாய்(நீர்), கண்(தீ), மூக்கு(நிலம்), செவி (வான் ) ஆகியன ஐம்பூதங்கள் உணர்த்தும் பொறிகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன ஐம்பொறிகள் உணர்த்தும் குணங்கள்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (திருக்குறள் 27)
என அவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சுவை முதலான ஐம்புலன்களின் வகைகளை ஆராயும் வல்லமையாளரிடம் உலகம் உள்ளது என்கிறார். வகைகளை ஆராய்தல் என்றால், ஐம்புலன்கள், அவற்றிற்கு முதலாய் அமைந்த ஐம்பூதங்கள், வகைப்பாடுகள் முதலியவற்றை ஆராய்தல்.
எடுத்துக்காட்டாக ஊறு என்றால் தீண்டுதல் உணர்ச்சி. வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, வழமை(வழுக்கும் தன்மை), கரண்மை(கரடுமுரடு) என இஃது எட்டு வகைப்படும். இவ்வாறு இவற்றையும் ஐம்பூத வழிவகைகளையும் ஆராய்தல்.
நிலத்திற்கு(மண்ணிற்கு) மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் ஐந்து குணங்களும் உள்ளன. நீருக்குச்  சுவை, ஒளி, ஊறு, ஓசை ஆகிய நான்கு குணங்கள், நெருப்புக்கு ஒளி, ஊறு, ஓசை ஆகிய மூன்று குணங்கள், காற்றுக்கு ஊறு, ஓசை என்ற இரண்டே குணங்கள், வானிற்கு  ஓசை என்ற ஒரே குணம் எனக் குணங்கள் அமைந்துள்ளன.
இதைப் பற்றி 
           மண்ணதனில் ஐந்தை
           மாநீரில் நான்கை
           வயங்கெரியில் மூன்றை
          மாருதத்து இரண்டை
          விண்ணதனில் ஒன்றை
என்று திருநாவுக்கரசர்  தேவாரத்தில்(திருமுறை , 6:60:3) பாடியுள்ளார்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன உண்ணல், காணல், மெய்உறுதல், கேட்டல், முகர்தல் என்பவற்றைக் குறிக்கும்.
எனவேதான் திருவள்ளுவர் பின்னர், ஐம்புலன் உணர்வுகளால் பெறும் இன்பங்களையும் ஒரே நேரத்தில் தலைவியிடம் தலைவன் காண்கிறான்  என்கிறார்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள (திருக்குறள் 1101).
என்பது அத்திருக்குறள்.
இவ்வாறு ஐம்பூதங்கள் பற்றியும் அவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பு பற்றியும் குணங்கள் பற்றியும் உள்ள அறிவியல் குறிப்புகளை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
காலந்தோறும் போலித்துறவியர் குறித்து எச்சரித்தாலும் அவர்கள் மீது மயக்கம் கொண்டு அவர்கள் காலடியில் வீழ்வோர் குறையவில்லையே!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 26.07.2019