சனி, 19 ஆகஸ்ட், 2023

உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

 








தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை

உலகத்திருக்குறள் மையம்

இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021

ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00

இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை.

திருவள்ளுவர் வாழ்த்து

வரவேற்புரை

ஆய்வாளர்கள் அரங்கம்

பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள்

  • 1
  • திருக்குறள் ஒப்பாய்வுகள்
  • பேரா.இரா.ஆரோக்கிய மேரி, சென்னை

2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள்

திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம்

3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள்

அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை

சிறப்பு ஆய்வுரைகள்

புனித நூல் இரிக்கு வேதமா? திருக்குறளா?

ஆய்வாளர்

திருக்குறள் ஆய்வாளர், உலகச் சாதனையாளர்

சுந்தர எல்லப்பன், செங்கல்பட்டு

தேசிய நூல் பகவத்து கீதையா? திருக்குறளா?

ஆய்வாளர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர்,அகரமுதல மின்னிதழ்

தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்

திருக்குறள் தாெடர் பேருரை: 1 மணிநேரம்

பொருள்: திருவள்ளுவரின் உலகளாவிய சாதனைகள் தொடர் 20

பொருள்:

ஆரியரின் அறப்பிறழ்வுகளும் திருவள்ளுவரின் அறச் சீற்றங்களும் தொடர் 7

(கணவனும் மனைவியும்)

ஆய்வுரை வழங்குபவர் :

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர்

அருள்திரு திருக்குறள் புனிதர் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு

(திருக்குறள் உலகப்பொதுமறை அன்று, அது சனாதன நூல் என்பார் கூற்றை மறுத்துத

திருக்குறள் உலக நூல் என்னும் பொருண்மையில் 1000 பக்க நூல் உருவாக்கத்திற்காக

50மணி நேரம் ஆய்வுரை ஆற்றும் திட்ட வரைவிலான ஆய்வுப் பயணம்)

உண்மையை அறிந்து உலகிற்கு உணர்த்த வாருங்கள்!

நன்றியுரை

தங்கள் வரவு உறவு நாடும்

முனைவர் கு.மோகன்ராசு

பொறுப்பாளர்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

கேள்வி நேரம் உண்டு

இடைவேளைத் தேநீரும் நண்பகல் உணவும் வழங்குபவர்:

தமிழ்நாடு அரசு அயோத்திதாசர் விருதாளர்

முனைவர் கோ.ப.செல்லம்மாள், சென்னை

தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி)

பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!

இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன?

இதைக் கண்டித்து மதுரை வழக்காளர் மன்றம் (‘பார் அசோசியேசன்’) தீர்மானம் நிறைவேற்றி,, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறைமுறையிலான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்காளர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடக சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்சு முழங்கினார்.

இசுலாமியர்களைக் குதறும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.):
திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) –பாசகவின் இந்துராட்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரைக் குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாசக அரசு.

கடந்த செட்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிகையை அணியமாக்க மார்ச்சு 27 வரை இழுத்தடித்தது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! அதையும்கூட நீதிமன்றத்தில் முன் வைக்காமல் காலந்தாழ்த்தியது;குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் குற்றப் பத்திரிகையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வெளியிட்டாக வேண்டும் என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்துக் கூடுதல் குற்றப் பத்திரிகையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ.

கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைக்கட்ட துடிக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கேட்பார் யாரும் இல்லை என்பது போல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.

பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!
ஊபா வந்த பாதை:
திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்பு சட்ட உறுப்பு 19 ஐ திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்த பரிந்துரைக்கு இணங்க 1963 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக் கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் போது, ’நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது.

16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அது வரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது.

மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறைச் சட்டங்கள் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தை கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை ஆளும்வர்க்கம் வாடிக்கையாக கொண்டிருந்தது.

2001 ஆம் ஆண்டு செட்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றது அமெரிக்கா. புதுத்தாராளியப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பைப் ’பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தியது அமெரிக்கா. அந்தக் பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதுத்தாராளியம் என்னும் அரசியல்பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான படையியல் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா.
உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம்(ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ’பயங்கரவாதத் தடுப்பு’ என்ற பகடைக் காயைப் பயன்படுத்திக் கொண்டன.

2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலை சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தைப் பாசக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தை திரும்பப் பெறும் கட்டாயம் ஏற்பட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி)

பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!

இனிய அன்பர்களே!

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது.

இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு, குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது.

இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கலந்து பேசினோம். முதற்கட்டமாக என் ஐ ஏ குறித்தும், ஊபா குறித்தும், அண்மைக் காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யதத் தீர்மானித்தோம். பா.எ.ம.மு. சார்பில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை ஈண்டு தாழி அன்பர்களுடன் பகிர்கிறேன்.

++
இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)

வழக்கறிஞர்கள் மீதும் பொய் வழக்கு!

தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய மற்றுமொரு கைது நடவடிக்கை!
புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்து விட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்து விட்டனர். ஆனால், சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ) புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக் கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பினர் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுகின்றனர்; சட்டவிரோத செயல்கள், பயங்கரவாத செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர், இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எசு.ஐ.எசு. போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசிய தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாக சொல்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) கடந்த செட்டம்பர் 28 ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செட்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(ஆ), 153-அ, 153-அஅ ஆகியவற்றின் கீழும் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(ஆ), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித்து முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர்.

கடந்த ஏப்பிரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஆவும் சேர்த்து இன்னொரு வழக்குப் போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில்! ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மேற்கொண்டது 22/9இல்! இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர்.

உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்:

  1. தே.பு.மு.(என்.ஐ.ஏ.), புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக சொல்கிறது. அந்த தகவல்களைக் கொண்டு ஏப்பிரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கைச் செட்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறப்பானது இல்லையா?
  2. பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்பிரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு ஐந்து மாதங்கள் கழித்து வழக்குக்காக கைது செய்திருப்பதில் இருந்தே தெரிகிறது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை!
  3. ஊபா பிரிவு 13 சட்டஎதிர் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிஎதிர் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாமல் பிரிவு 13 ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா?
  4. இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது என்ன பேசப்பட்டது?
  5. பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை, மாறாக சட்டஎதிர் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படி தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்த பிரிவுகளைப் பயன்படுத்த முடியுமா?
  6. வழக்கம் போலவே, ஊபாவின் பிரிவு 18 – பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே, எவ்வித பயங்கரவாத செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்:

இவ்வழக்கு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அதை நீக்கக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர்.

முகமது அப்பாசு இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்;4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார்.

இதற்கிடையே 5.3.2023 அன்று மதுரை கோரிபாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ’விசாரணை’ என்ற பெயரில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரி கா.து.க. செந்தில்குமார் கூட்டிச் செல்கிறார். சின்னா தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் மிக மோசமாக தாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகிறார். இதனால் அவர் மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சேர்க்கின்றனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர்.

இவ்விசயத்தில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் சின்னாவைச் சேர்க்கும்போது பதிவான மறைகாணி(சிசிடிவி) காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிடுகிறார். இது கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாசு ஒரு முகநூல் பதிவை எழுதுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ’தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாசு மீது புகார் செய்கிறார்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 216

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி)

சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்


இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும்.

இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சிறு கீறலும் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். காசுமீரை இந்தியா நசுக்குவது பற்றிக் கண்டுகொள்ள மாட்டர்கள்.

நேரு தவறு செய்தார் என்றோ மொரார்சி அல்லது வாசுபாய் தவறு செய்தார் என்றோ சொல்வார்களே தவிர, இந்தியா தவறு செய்தது என்று சொல்ல மாட்டார்கள். அரிதாகச் சில நேரம் இந்திய அரசமைப்பைக் கூடக் குறை சொல்வார்கள். ஆனால் இந்தியா என்ற கருத்தே தோற்று விட்டது என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று உழைத்தவரும், இந்திய அரசமைப்பின் சிற்பி எனப் போற்றப்படுகிறவருமான அண்ணல் அம்பேத்துகர் மூன்றே ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டார். ஆனால் அவரே கூட இந்தியா என்ற கருத்து தோற்று விட்டதாகச் சொன்னாரில்லை.

இலங்கையில் ‘முன்னாள்’கள் செய்யும் ‘ஆத்தும பரிசோதனை’ இது வரை இலங்கைத் தீவின் ‘சிறிலங்கா’ என்ற கட்டமைப்பின் புனிதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியதில்லை. சிறிலங்கா என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரிசோதனை, அதாவது தமிழினவழிப்பை ஓர் இன்றியமையாக் கூறாகக் கொண்ட கட்டமைப்பு! இந்தப் பரிசோதனை, இந்தக் கட்டமைப்பு தோற்று விட்டது என்று ஒரு சிங்களத் தலைவர் ஒப்புக்கொள்வது எளிதன்று. அதிலும் ஆட்சித் தலைவர் (தலைமையமைச்சர்) அல்லது அரசுத் தலைவர் (குடியரசுத் தலைவர், சனாதிபதி அல்லது அதிபர்) பொறுப்பு வகித்த ஒருவர் சிறிலங்கா தோற்று விட்டதாக, அதாவது சிறிலங்கா என்ற கருத்து பொய்த்து விட்டதாக ஒப்புதல் அளிப்பது முயற்கொம்பே.
இதுவரை இப்படியிருந்த வரலாறு இப்போது மாறியுள்ளது. ஏனென்றால் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்கா தோற்று விட்டது என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2023 ஏப்பிரல் 16ஆம் நாள் அவர் பேசிய இந்தப் பேச்சு இந்து ஆங்கில ஏட்டில் செய்தியாக வந்த போது செய்தி அரசியல் நிகழ்ச்சியில் நான் இது பற்றிக் குறிப்பிட்டு அந்த ஒப்புதலின் முகன்மையையும், அதே நேரம் முழுமையின்மையையும் சுட்டிக் காட்டினேன். இப்போது சந்திரிகா உரையின் முழுச் செய்தி கிடைத்துள்ளது. சந்திரிகாவின் ஒப்புதல் பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையும் வந்துள்ளது. விரைவில் தாழியில் பகிர்கிறேன்.

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 215

புதன், 16 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி! தொடர்ச்சி)

பாவலரேறு தொட்ட உயரம்

இனிய அன்பர்களே!

என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!”

அவர் இப்படித்தான் வாழ்ந்தார்! இப்படித்தான் இயங்கினார்! அவர்தாம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அவர்தம் எழுத்தைப் படித்தோர்க்கும் உரையைக் கேட்டோர்க்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது தூய தமிழ் நடைதான். தனித்தமிழ் சொல்லாட்சியில் அவரைப் போல் யாருமிருக்க முடியாது. கலைஞர் கருணாநிதியை அருட்செல்வர் என்றும் தலைவர் பிராபகரனை கதிர்க்கையன் என்றும் தனித் தமிழ்ப் பெயரிட்டிட்டழைக்க அவரால் மட்டுமே கூடும்.

ஆனால் பாவலரேறுவை நினைவில் ஏந்த இன்னுங்கூட முகன்மைக் காரணங்கள் உண்டு என நம்புகிறேன். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களைப் பற்றி மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுவார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித் தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர். செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின் இதுதான் தனித் தமிழியக்கத்தின் அக வரலாறு. கால்டுவெல், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவாணர் – தனித்தமிழ் மலைத் தொடரின் உயர்முகடுகள் என்ற இந்த வரிசையில் பாவலரேறு  பெருஞ்சித்திரனாரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலை மொழியியல் நோக்கில் நிறுவினார். முதலாவதாக அது வடமொழியைச் சாராமல் தற்சார்பாக இயங்க வல்லது என்பதையும், இரண்டாவதாக வடமொழி சாராத திராவிட மொழிக் குடும்பத்துக்குத் தமிழே தலைமகள் என்பதையும் ஆழ்ந்து தெளிந்து உறுதி செய்தவர் அவரே. பரிதிமாற் கலைஞர் தமிழின் செம்மொழித் தகைமையைப் போற்றி நின்றவர். தனித் தமிழுக்கு இயக்கம் கண்டவர் மறைமலை அடிகள். பாவாணர் ஒரு தூய தமிழ்ச் சிந்தனை மரபுக்கே வித்திட்டவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வரிசையில் பாவலரேறு கண்ட புதிய உயரம் என்ன? என்பதுதான் நம்முன்னுள்ள வினா. மொழியும் நிலமும் இனத்தின் உயிரும் மெய்யுமானவை. மொழி விடுதலையும், இன விடுதலையும் ஒன்றையொன்று சார்ந்தவை. நிலம் அடிமைபட்டுக் கிடக்கும் போது மொழியும் இனமும் விடுதலை பெற்று விட முடியாது. தனித் தமிழ் இயக்கம் வெறும் மொழி விடுதலை இயக்கமாக மட்டும் இருந்தால் நிறைவாக வெல்ல முடியாது. மொழியை ஒதுக்கி விட்டு இனமும் இனத்தை ஒதுக்கி விட்டு நாடும் விடுதலை பெற முடியாது. கூடில்லாத பறவை எளிதில் பகைக்கு இரையாகி விடும். நாடில்லாத மொழியும் இனமும் அப்படித்தான் நீடித்து வாழ முடியாது. மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்குமான இயங்கியல் இடையுறவை உறுதியாகப் பற்றி நின்றவர் பாவலரேறு.

விடுதலை என்பது அவரைப் பொறுத்த வரை முழுமையானது. இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று அவர் பிய்த்துப் பார்த்தரில்லை. தமிழ் விடுதலை, தமிழர் விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்பவற்றில் எந்த ஒன்றையும் விட்டுக் கொடுத்தாரில்லை. தமிழர்கள் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்குத் தான் ஒரு நாடு இல்லை என்று எண்ணமும் ஏக்கமும் அவர்க்கிருந்தன. எனவேதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துணைநின்றார். அதனால் எது வரினும் இன்முகத்துடனே ஏற்றார்.

பாவலரேறு செம்மாந்த சொற்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. வீறார்ந்த செயல் பலவும் இயற்றியவர். போராளி என்ற சொல்லை வடித்த அவரே ஓர் அறப் போராளியாக வாழ்ந்தார். சிறையச்சம் சிறிதுமில்லாத அறப் போராளி. பாவலரேறு முகங்கொடுக்காத அடக்குமுறைச் சட்டம் எதுவுமில்லை. அடக்குமுறைச் சட்டத்தை ஏவி அவரைச் சிறையிலடைக்காத ஆட்சி எதுவுமில்லை. 

பாவலரேறு நம்மை விட்டுப் போய் 28 ஆண்டுக் காலமாயிற்று என்பதை நம்புவதே கடினமாய் உள்ளது. அவர் கொளுத்திய தமிழ்ச் சுடர் அணையாது காப்போம்! அவரது எழுச்சிப் பாக்களால் வீறு கொண்டெழுவோம்! அவர் தொடங்கிய பணி முடித்து என்றென்றும் அவர் புகழ் போற்றுவோம்! நன்றி! வணக்கம்!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 214

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்- தொடர்ச்சி)

வேலிக்கு வேலி!

இனிய அன்பர்களே!

போலீசு (POLICE) என்பதைத் தமிழில் காவல்துறை என்று மொழிபெயர்க்கிறோம். காவல்துறையின் பணி “மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலை உறுதிசெய்தல், குற்றத் தடுப்பு, குற்றத் தீர்வு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. POLICE என்ற சொல்லைச் சிலநேரம் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதுண்டு. அப்போது அதன் பொருளைச் சுருக்கி ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கண்காணித்தல்’ என்று வரும். யாரும் சட்டத்தை மீறாமல், குற்றம் செய்யாமல் கண்காணித்தல், குற்றம் நடந்து விட்டால் அதனைத் துப்புத் துலக்கிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குற்றத் தீர்வைக் கண்காணித்தல்… இவ்வாறான பல்வகைக் கண்காணித்தலும் காவல்துறையின் பொறுப்பாகும்.

இப்போது நாம் அடிக்கடிக் காண்பது என்ன? காவல்துறையாரே சட்டத்தை மீறுகின்றனர்! குற்றம் செய்கின்றனர்! உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் கடமையிலிருந்து பிறழ்ந்து பொய் வழக்குப் புனைகின்றனர். சுருங்கச் சொல்லின் வேலியே பயிரை மேய்கிறது. இந்நிலையில் பொதுக் குமுகம் என்ன செய்ய வேண்டும்? கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையைக் கண்காணிக்க வேண்டும், காவல்துறை சட்டத்தை மீறாமல் கண்காணிக்க வேண்டும். குற்றம் செய்யாமல் கண்காணிக்க வேண்டும், காவல் துறையாரின் குற்றத்தைக் கண்டறிந்து குற்றத்தீர்வு காண்பதற்காகக் கண்காணிக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், கண்காணிப்பாளர்களைக் கண்காணிக்க வேண்டும். இதைத்தான் உச்சநீதிமன்ற நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் “POLICING THE POLICE” என்றார். வேலிக்கு வேலி அமைப்பது போன்ற இந்தப் பணியைத்தான் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் செய்கிறது.

இது மிகக் கடினமான பணி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பணியில் சட்டமும் நீதியும் நம் பக்கம் உள்ளன. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை சட்டத்தை மீறும் போது சட்டம் காக்கும் பணியை நாம் செய்கிறோம் என்பது நமக்குள்ள வலிமையாகும். இது அற வலிமைதான். இந்த அற வலிமையை மெய் வலிமை ஆக்க வேண்டுமானால் மக்கள் ஆற்றலை திரட்ட வேண்டும். ஒன்றுதிரட்டுவதோடு முறையாக அணி திரட்ட வேண்டும்.

நாம் தமிழக அளவிலான ஒரு தலைமைக் குழுவிலிருந்து தொடங்கினோம். பிறகு பல்வேறு இயக்கங்களின் பேராளர்கள் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கினோம். மாவட்ட ஒருங்கிணைப்ப்புக் குழுக்கள் அமைத்து ஒருங்கினைப்பாளர்களைத் தேர்வு செய்தோம். ஆனால் இது போதாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு கண்காணிப்புக் குழு வேண்டும். அது தொடர்ச்சியாக இயங்கி வர வேண்டும்.

காவல் சித்திரதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் இந்த இலக்கைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மே 27, 28 இரு நாளும் ஏற்காட்டில் கூடிய போது இதற்கான சில அமைப்புமுறைகளை உருவாக்கினோம். தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் அமைப்பாளரைத் தேர்வு செய்து, மண்டல அளவிலான கூட்டங்களைக் கூட்டி, மாவட்ட அளவில் கூட்டியக்கத்தைச் சீரமைப்பது என்று முடிவு செய்தோம். இதிலிருந்து காவல்நிலைய அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கும் திசையில் முன்னேற இயலும் என்று நம்புகிறோம். சூன் 10ஆம் நாள் திண்டிவனத்தில் வடக்கு மண்டலமும் திருச்சிராப்பள்ளியில் மத்திய மண்டலமும் கூடுகின்றன. 11ஆம் நாள் ஈரோட்டில் மேற்கு மண்டலமும் மதுரையில் தெற்கு மண்டலமும் கூடுகின்றன. இந்தக் கூட்டங்களில் அடுத்தடுத்த பணிகள் குறித்த பயிற்சி வகுப்பும் நடக்கவுள்ளது.

காவல் நீதியை உறுதி செய்யும் படியான இரு முகன்மைத் தீர்ப்புகளைக் கையிலெடுத்து அவற்றைச் செயலாக்கும் படி வலியுறுத்த வேண்டியுள்ளது:

1) சந்தோசு – எதிர் – மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 2020 திசம்பரில் வழங்கிய தீர்ப்பு… காவல் சாவுகளின் போது சடலக் கூறாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியது. இந்தத் தீர்ப்பின் மீது 28.02.2023இல் நீதிமன்றம் சில கூடுதல் விளக்கங்களை அளித்துள்ளது. காவல் சித்திரவதையை இல்லாமற்செய்வதில் இந்தத் தீர்ப்பு பெரும்பங்காற்ற முடியும் என நம்பலாம்.

இந்தத் தீர்ப்பை மிகப் பரவலாகக் கொண்டுசேர்ப்பதன் வாயிலாகக் காவல் சித்திரவதைகளைத் தடைப்படுத்த இயலும். காவல்துறையிலும், நீதித்துறையிலும், மருத்துவத்துறையிலும் தொடர்புடைய அனைவரும் இத்தீர்ப்பைத் தெளிவாக அறிந்திருக்கும் படிச் செய்ய வேண்டும்.

2) பரம்வீர்சிங்கு சைனி – எதிர் – பல்சித்து சிங்கு முதலானோர் என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் (நீதியர் ஆர்.எஃப். நாரிமன்) 2020 திசம்பரில் அளித்த தீர்ப்பு அனைத்துக் காவல் நிலையங்களிலும் கட்டாயமாகக் கண்காணிப்புப் படக் கருவி (CC TV) பொருத்த வேண்டுமென ஆணையிட்டது. இந்தப் பணியை மேற்பார்வையிட மாநிலப் மேற்பார்வைக் குழு (SLOC), மாவட்ட மேற்பார்வைக் குழுக்கள் அமைக்க வேண்டும், இந்தக் குழுக்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதையும் நீதிமன்றம் தெளிவாக்கியது.

கண்காணிப்புப் படக் கருவிகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கம் பெற்றுள்ளதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாந்த உரிமைகளிலும், காவல் நீதியிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்த இரு தீர்ப்புகளையும் கையிலேந்திக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கக் காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் தீர்மானித்துள்ளது. கண்காணிப்புப் படக் கருவி பற்றிய தீர்ப்பு எளிய காவல் நிலையங்களுக்கு மட்டுமல்லாமல் தேசியப் புலனாய்வு முகமை (NIA), செயலாக்க இயக்ககம் (ED) போன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால் இது குடியாட்சிய ஆற்றல்களின் பொதுவான போராட்டத்துக்கும் உதவக் கூடியதாகும்.

நமக்கு அறைகூவலான இந்தப் பணிகளைத் திறம்படச் செய்து முடிக்கப் பொறுமையும் உழைப்பும் தன்னளிப்பும் தேவை. அனைத்துக்கும் மேலாக அமைப்பாக்கம் தேவை. 10, 11 நாட்களில் நடைபெறும் மண்டலக் கூட்டங்கள் இந்த வகையில் ஒரு பாய்ச்சலாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பின்குறிப்பு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்பது அரசியல் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் ஆனது மட்டுமன்று. அமைப்புசாரா மாந்தவுரிமை ஆர்வலர்களும் இந்தக் கூட்டியக்கத்திலும், அதன் முயற்கிகளிலும் பங்கேற்கலாம். தாழி அன்பர்கள் இது குறித்துக் கருதிப் பார்க்க அன்புரிமையுடன் அழைக்கிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 213

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 179

இனிய அன்பர்களே!

“முள்ளிவாய்க்காலின் முழுப்பொருள்” என்ற தலைப்பில் தாழி (201) மடலில் நான் எழுதியிருந்ததற்கு ஐயா நக்கீரன் அவர்கள் செய்திருந்த கருத்துப் பதிவுகளில் தமிழ்நாட்டு எதிலியர் குறித்த கருத்திற்கான மறுமொழியை தாழி (204) மடலில் பதிந்தேன். விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க இந்தியா சொல்லி வரும் காரணத்தை ஐயா சுட்டிக் காட்டியிருந்தார்கள். அந்தக் காரணம் பொய் என்று எழுதியிருந்தேன். 

நிலப்பறிப்பு பற்றி நான் எழுதியதும் ஐயா நக்கீரன் அவர்களின் மறுமொழியும் – தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் அகலக் கால்பரப்பி நின்றது மட்டுமல்ல, அதன் வன்கொடுமைகள் தொடர்ந்தன. படை முகாம்களுக்காக வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலங்கள் மீட்டளிக்கப்படவில்லை.

மொத்தம் 118,253 ஏக்கர் காணியில் 89,263 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுவிட்டது. அண்ணளவாக விடுவிக்கப்படாத காணி 28,999 ஏக்கர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான உடனடி நிலைமைகள் பற்றி நான் எழுதினேன். ஐயா சொல்வது போல் அதற்குப் பிறகான காலத்தில் காணி விடுவிப்பு நடந்திருக்கலாம். நான் அதை மறுக்கத் தேவையில்லை. அவர்களே கூறியுள்ள படி 28,999 ஏக்கர் விடுவிக்கப்படாமலிருப்பதற்கு என்ன நியாயம்? ஒரே ஒரு தமிழரிடமிருந்து இந்த 118 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு அவருக்கு 89 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டு     29 ஆயிரம் ஏக்கர் மட்டும் விடுவிக்கப்படாமலிருந்தால் ஆறுதலுக்குரிய செய்திதான். ஆனால் இது பல்லாயிரம் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் என்பதை மனத்தில் கொண்டால் இந்த ஆறுதலை ஏற்க முடியாது. இந்த 29 ஆயிரம் ஏக்கரும் பத்துப் பதினைந்தாயிரம் உழவர்களுக்குச் சொந்தம் எனக் கொண்டால், அவர்களுக்கு இழைக்கப்படும் நீதியை விடுவிக்கப்பட்ட 89 ஆயிரம் நீதியாக மாற்றி விடாது. 100 ஏக்கரை மட்டும் விடுவிக்காமல் இருந்தால் அதுவும் அநீதிதான்! பாதிப்புற்ற உழவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழினத்துக்கே அநீதிதான்! மற்றவர்களுக்குக் கிடைத்து விட்டது மனமயங்க நமக்கு உரிமை இல்லை.

இதை விடவும் முகன்மையான செய்தி: தமிழர் நிலப் பறிப்பு என்பது கடந்த காலச் செய்தி மட்டுமன்று. இன்றும் தொடர்கின்ற ஒன்று. முன்னை விடவும் தீவிரமாகத் தொடர்கின்ற ஒன்று. இது சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் கட்டமைப்பியல் இனவழிப்பின் முகன்மைக் கூறு ஆகும்.

படைசார் நோக்கங்களுக்காக மட்டுமல்ல, சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கங்களுக்காகவும் இந்த நிலப்பறிப்பு நடக்கிறது. இதையும் ஐயா நக்கீரன் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஈழத் தமிழ் மின்னிதழ் ஒன்றுக்காக இப்பொருள் குறித்து எழுதிய கட்டுரையை ஈண்டு பகிர்கிறேன். –

தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்

வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டிலும் பாதுகாப்பிலும் பெளத்த பிக்குகளும் வெலிஓயாவில் வன்குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களர்களும் இந்த வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வாய்வுப் பணிகள் என்ற பெயரில்தான் குருந்தூர் பௌத்த விகாரைக் கட்டுமானம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் நிலப்பறிப்பு மட்டுமல்ல, சிங்கள பௌத்த மயமாக்கமும் ஆகும் என்பதைக் குருந்தூர் மலையுச்சியில் நின்று கூவிச் சொல்லலாம்.

தொல்லியல் திணைக்களம் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறது என்பதை அதிபர் இரணிலே ஏற்றுக் கொண்டுள்ளார். 

அரசுத் தலைவராக இருந்த கோத்தபாய இராசபட்ச கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வுக்கென்று ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவில் தமிழர் யாருமில்லை, இராணுவத்தினரும் பிக்குகளும் மட்டுமே இடம்பெற்றனர். அவர்கள், மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோயில் முன்பு பௌத்தர்களின் வழிபாட்டு இடமாக இருந்தது என நிறுவ முயன்றார்கள். இதுதவிர பௌத்த சமயத் தடங்கள் என்ற பெயரிலும் தொல்லியல் திணைக்களத்தின் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலப்பறிப்புக்கு சிங்கள அரசு சூட்டியுள்ள இன்னொரு பெயர் வனப் பாதுகாப்பு. மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்தனர். இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றனர்கள்.

இராசபட்ச குடும்பத்துக்கு நெருக்கமான குழுமங்கள் கட்டுமானப் பணிகளுக்காக மணல் அள்ளுவதும், நிலப்பறிப்புச் செய்வதும் தொடர்கின்றன. காலங்காலமாக உழுது பயிரிட்டு வந்த நிலங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.

பெரிய எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவதால் அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் இந்தக் குழுமங்கள் கவலைப்படுவது இல்லை; தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை. மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் மதிப்பதே இல்லை எனக் கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநர் அனுராதா எகம்பத்து கவலை தெரிவித்தார்.

கொக்கிளாயில் அரசுக்குச் சொந்தமான கனிமக் குழுமம் இல்மனைட்டு சுரங்கம் அமைக்கும் முயற்சிகளை எதிர்த்து தமிழர்கள் போராடினார்கள். இது நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம் மட்டுமன்று, சுற்றுச்சூழல் காப்புக்கான போராட்டமும் ஆகும்

கோத்தபாய அதிபரான பிறகு தீவிரமடைந்த தமிழர் நிலப்பறிப்பு இன்றளவும் பல்வேறு பெயர்களில் தொடர்கிறது. நிலம் மற்றும் பாசன மேலாண்மைக்கான மகாவலி ஆணையம், தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி இருக்கின்றது. இதை எதிர்த்தே  மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகளின் போராட்டம் மாதக்கணக்கில் நடைபெற்றது.

இப்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கா தமிழர்களின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் போது புதிய நிலக் கையகப்படுத்தலும் பௌத்த விகாரைக் கட்டுமானமும் இனி நிகழாது என்று வாய்மொழியாக வாக்களித்த போதிலும், எந்த மாற்றமும் இல்லை. அதிபரின் ஆணையை இராணுவமும் பௌத்த பிக்குகளும் மதிப்பதில்லையா? அல்லது இரணில் நாடகமாடுகின்றாரா? எது எப்படியானாலும் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றார்கள்.

பௌத்தமயத்தோடு இணைந்த இராணுவமயமும் தொடர்கிறது. போர் முடிந்து விட்ட பிறகும் இராணுவ நோக்கங்களுக்கான நிலப்பறிப்பு தொடர்கிறது. சிறிலங்கா கடற்படையின் புதிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட இருப்பதாக ஊர்க்காவற்றுறையில் கரம்பன் மேற்குப் பகுதி ஊர்களில் அறிவிப்புத் தரப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  மக்களின் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன்.

இத்துணைப் பாரிய பொருளியல் நெருக்கடிக்கிடையில் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10.35 விழுக்காடு படைத்துறைச் செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கசேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற அவையிலேயே சிங்கள ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேட்ட வினா இது: “போர் நடக்காத சூழலில் 10.35 விழுக்காடு செலவு ஏன்?”

அவர் சொல்கிறார்: “எந்த நாடும் சிறிலங்காவைத் தாக்கிடவில்லை. உங்கள் பகை உள்ளுக்குள்ளேதான். உங்கள் நாட்டுக் குடிமக்களையே பகைவர்களாகக் கருதுகின்றீர்கள். ஏன் என்றால், நீங்கள் அவர்தம் உரிமைகளை அறிந்தேற்க விரும்பவில்லை. அவர்களின் உரிமைகளை மறுப்பதற்காக அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக் கொள்கைக்கும் உங்கள் அயலுறவுக் கொள்கைக்கும் அடிப்படையே தமிழர்கள் உரிமை பெறாமல் தடுப்பதுதான்.”

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை – தையிட்டிப் பகுதியில் பொதுமக்களிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய நிலங்களில் பாரிய விகாரை அமைக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழ் மக்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான ஐங்கரநேசன் “இது அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்நிரலாக முன்னெடுக்கப்படுகின்றது, இது கட்டமைப்பியல் இனவழிப்பே தவிர வேறல்ல” என்று கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் வாழாத ஒரு பகுதியில் வலிந்து பௌத்த விகாரை அமைப்பது தமிழர்கள் மீதான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பே ஆகும். இராணுவத்தினர் விரும்பினால் தமது பாசறைக்குள் புத்தர் சிலை வைத்து வழிபடத் தடையில்லை என்றும் தமிழ் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கசேந்திரன் உள்ளிட்ட தலைவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பின்னணியில் கசேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது நடந்துள்ள தாக்குதல் முயற்சியைத் தமிழர் தரப்பில் அனைவரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சிக்கலை எழுப்ப விடாமல் அவரைத் தடுக்கவும் முயற்சி நடந்துள்ளது.

இத்தனைக்கும் நடுவில் இந்திய அரசு வாய்திறக்கவே இல்லை. எப்போதாவது வாய் திறந்தாலும் 13ஆம் திருத்தம் என்ற உதவாக்கரைப் பேச்சுதான்! 13ஆம் திருத்தம் நிலப் பறிப்பையோ சிங்கள பௌத்தமயத்தையோ இராணுவமயத்தையோ தடுக்கப் போவதில்லை என்பது இந்திய வல்லரசுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருவேளை சிறிலங்காவில் முசுலிம்களுக்கு எதிராகச் சிங்களம் பரப்பி வரும் இசுலாமிய வெறுப்பு நரேந்திர மோதியுடன் ஒரு பொதுவான அலைவரிசை காணக் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்ல முடியவில்லை. பொங்கி எழுந்து போராடுவோம் தமிழர்களே!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 212