உத்தமத்திற்குப்
பாராட்டும் பரிந்துரையும்
குணம்
நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி
மிக்க கொளல் (திருக்குறள் 504).
ங.) கருத்தரங்கத்தையோ மாநாட்டையோ நடத்துவது என்பது எளிதான செயலன்று.
அதுவும் பன்னாட்டளவில் நடத்துவது என்பது
இடர்ப்பாடுகளுடன் அருவினைகள் ஆற்றினால்தான் இயலும். அந்த வகையில் 12 ஆவது இணையத்தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தி முடித்த உத்தமத்திற்குப்
பாராட்டுகள்.
ஙா.) பொதுவாகவே தமிழ்க்கூட்டங்கள்
என்றாலே முதியோர் கூட்டமாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. சில நேர்வுகளில் பேச்சாளர்களைப் பொறுத்துச் சில இளைஞர்கள்
வந்திருக்கலாம். என்றாலும் பெரும்பான்மை மூத்தோர் அவையாகத் திகழ்தலே வழக்கம். அதை
முறியடிக்கும் வகையில் அறுநூறுக்கு மேற்பட்ட இருபால் மாணாக்கர்கள் பங்கு பெறும்
வகையில் மாநாட்டை நடத்தியதற்கு உண்மையிலேயே விழாக்குழுவினரைப் பாராட்ட வேண்டும்.
இணையத் தமிழை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் சிறப்பான பணியை
ஆற்றியமைக்காகத் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள். இப்பாராட்டினை நான், புதியதொலைமுறைத் தொலைக்காட்சியின் செய்திக்கான செவ்வியிலும் உத்தமம்
முகநூலுக்கான செவ்வியிலும் தெரிவித்துள்ளேன். என்ற போதிலும் இளைய தலைமுறையினரை
ஈர்த்துள்ள செயலை மீண்டும் மீண்டும் பாராட்டுவதில் தவறில்லை.
ஙி.) தமிழ்விழா அழைப்பிதழ்களிலும் பதாகைகளிலும் 8ம் விழா, 6வது விழா என்பன போல் தவறாகவே இடம் பெறும்.
கடந்த முறையும் இது குறித்துக் கூறியிருந்தேன். ஆனால், இங்கே
12ஆம் எனச் சரியாக எழுதப்பட்டது மகிழ்ச்சியை அளித்தது.
பாராட்டுகள். (திறப்பு விழா என இடம் பெற்றிருந்தது. தொடக்க விழா என்பதே சரி. அடுத்த முறை சரி
செய்யப்படும் என நம்புகின்றேன்.)
ஙீ.) கோலத்தில் ஆங்கில வரவேற்பு
அளித்து அலங்கோலம் ஆக்குவதே பல இடங்களில்
நடைபெறுகிறது. ஆனால் அங்கும் தமிழில் வரவேற்பு அளிக்கும் அழகுக்கோலத்தைக் காண
முடிந்தது. வாழ்த்துகள்.
ஙு.) நான் கட்டுரை அளித்த
அமர்விற்குக் கணி.மணி.மணிவண்ணன் தலைமை
தாங்கிச் சிறப்பாக நடத்தினார். அவரது தமிழ் ஈடுபாடும் துறை அறிவும் ஒவ்வொரு
தலைப்பு குறித்தும் சிறப்பான பகிர்வை அளிக்கச் செய்தன. இப்படிப்பட்ட அமர்வுத் தலைவர்களை அமர்த்தியதற்கும்
மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.
ஙூ.) மலேசிய அரசின் நன்மதிப்பைப்
பெற்று 50,000 மலேசிய வெள்ளியை நன்கொடையாகப் பெற்றமைக்கும் பாராட்டுகள்.
மாநாடுகள் நடத்தும் அமைப்பினர்
மாநாடு முடிந்ததும் அதனை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள், சிக்கல்களைக்
களைந்த முறைகள், களைய முடியாமல் போன நேர்வுகள், செய்து முடித்த சிறப்பான செயல்கள், செய்ய இயலாமல்
போன சீர் செயல்கள் முதலியவை குறித்து எழுத்து மூலமான பதிவாகத் தர வேண்டும். இதனை, அடுத்துநடத்துவோர் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஒரே வகையான தவறுகள்
மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத்
தவிர்க்கலாம்; முன்னவர் பட்டறிவைப் பயன்படுத்துவதன் மூலம்
இடர்ப்பாடுகளைக் குறைக்கலாம்; குறைந்த நேரத்தில் சிறப்பான
செயல்களை ஆற்றலாம். அந்த வகையில் 12ஆவது இணையத் தமிழ் மாநாட்டினரும் ‘இயன்றதும்
இயலாததும்’ என்னும் தலைப்பில் ‘செய்தனவற்றையும்
செய்யத் தவறியனவற்றையும்’ பதிவாக்க வேண்டும். அவ்வாறு
பதிவாக்குவதில் என்ன குறைபாடுகளைச் சுட்டிக்காட்டத் தேவை உள்ளது எனத் தவறாக
எண்ணக்கூடாது. சான்றுக்குச் சிலவற்றை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
1.) அண்ணாமலை
நகரில் 11 ஆவது இணையத்தமிழ் மாநாடு
நடைபெற்ற பொழுது என்னைப் போன்ற பலருக்கு நினைவளிப்புகள் (நினைவுப்பரிசுகள்)
வழங்கப் பெறவில்லை. அப்பொழுதே, நினைவளிப்புகளில் பாகுபாடு காட்டப்பட்டிருந்தால் அறமின்மை; எண்ணிக்கையைக்
கூடுதலாகக் காட்டிக் குறைத்து அளித்திருந்தால் ஊழல்; குறைந்த
அளவே வாங்கியிருந்தால் செம்மையின்மை;
வாங்கியும் வழங்கப்பட வில்லை எனில் முறைகேடு என்றெல்லாம்
சொல்லப்பட்டன. நானும் நினைவளிப்பைப் பெறாமையாலோ என்னவோ,
இதைப் பெரிது படுத்தவேண்டா; தகவல் தொடர்பு இடை வெளியாக
இருக்கும் எனக் கூறி அமைதிப்படுத்தினேன். எனினும்
இது குறித்து 31.06.2044 ***
15.07.2013 நாளிட்ட மடலில் முன்குறித்தே குறிப்பிட்டு
இருந்தேன். ஆனால், மலேசிய மாநாட்டில், இரண்டாம் நாள் அமர்வுகளில் பெரும்பான்மையருக்கு
நினைவளிப்பு வழங்காமல் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பெறும்
பங்கேற்புச் சான்றிதழ்களை நினைவளிப்பு போல் வழங்கி ஏமாற்றமுறச் செய்தனர். இந்தமுறை
முதல்நாளே பேசிய எனக்கு நினைவளிப்புக் கிடைத்தமையால்,
மறுநாள் வழங்கப் பெறாதவர்களுக்காகக் குரல் கொடுத்து, அரங்கப்
பொறுப்பாளரிடம் உரியவர்களிடம் கூறி நினைவளிப்புகளை வழங்கச் செய்யுமாறு கூறினேன்.
இருந்தால் அல்லவா வழங்குவதற்கு என எண்ணும் வகையில் அவர்களுக்கு வழங்கப் பெறவில்லை.
இந்நிலை தொடர இனி இடம் தரக்கூடாது. நினைவளிப்புகளைப் பெறா இம் மாநாட்டின்
கட்டுரையாளர்களுக்கு இனியேனும் வழங்க எண்ணினால் வழங்க இயலும். என்ற போதும்,
இந்நிலை தொடர இனி இடம் தரக்கூடாது. கட்டுரையாளர்கள், அழைப்பாளர்கள் நிகழ்ச்சியில்
பல்வேறு வகையில் உதவுநர்கள் ஆகியோர் எண்ணிக்கைக்கேற்ப நினைவளிப்புகள் வாங்கப்
பெற்று அவர்களுக்கும் வழங்க
வேண்டும்.
2.) முதல்
நாள் அமர்வுகளில் அனைவர் உரைகளும் ஒளிப்பதிவு செய்யப் பெற்றன. அதே எண்ணிக்கையிலான
அமர்வறைகள்தாம் மறுநாளும் இருந்தன. ஆனால், உரைகள்
பதிவு செய்யப் பெறவில்லை. (ஒரு வேளை
உத்தமப் பொறுப்பாளர்கள் உரைகள் பதிவு
செய்யப் பெற்றிருக்கலாமோ!) இவை
எல்லாம் உத்தமத்திற்குப் பெருமை சேர்க்கக்கூடியவையா?
3.) அமர்வுஅறைகளில்
பேசுநருக்கான இருக்கைகள் முறையாக ஒதுக்கப்படவில்லை. எல்லா அறைகளிலும்
கட்டுரையாளர்கள் ஐவர் அமரும் வகையிலேயே
இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள்அறையில் எண்மர் கட்டுரையாளர்கள்.
இருவர் கணிணிவழித் திரையீட்டாளர். எவ்வாறு இடம் போதும்? எனவே, கட்டுரையாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப இருக்கைகள்
அமைக்கப் பெற்று மாநாட்டின் முதுகெலும்பாக
விளங்குவோர் மதிக்கப்பெற வேண்டும்.
4.) அழைப்பிதழ்களில்
தொடக்க நேரம் மட்டும் குறிப்பிடப்படாமல்
ஒவ்வோர் உரையாளருக்கும் பேச்சு நேரம்
வகுக்கப் பெற்றுக் குறிக்கப் பெற்றிருந்தது. ஆனால், சிறிதும் பின்பற்றப்படவில்லை. அழைப்பிதழ் நேர அடிப்படையில் பணிகளைத்
திட்டமிட்டவர்களுக்கு எல்லாம் அவையாவும் பாழாயின. சிறப்பு அழைப்பாளர்கள் நேரம்
எடுத்துக் கொண்டால் தவிர்க்க இயலாது. ஆனால், உத்தமப்
பொறுப்பாளர்களே இதற்கு முன்பு ஒலி வாங்கியைப் பார்த்திராததுபோல் நீண்ட நேரம் எடுத்துக்
கொள்ளலாமா? அனைவர் உரையும் அழகு தமிழில் சுவைபட
அமைந்திருந்தாலும் நேரம் கூடும் பொழுது திகட்டும் என்பதை உணர வேண்டாவா? அப்படி அவர்களுக்குப் பேச வேண்டும் என்னும் ஆர்வம் இருப்பின்
அமர்வுரைகளின் தொடக்கத்தில் அனைவரையும்
ஒருங்கே கூட்டிப் பேசலாமே! நள்ளிரவு வரை விழாவை நடத்தலாமா? உரைகளை அச்சிட்டு
அனைவருக்கும் வழங்கியிருக்கலாமே! காலம்
உயிர் போன்றது என்பதை உத்தமம் உணர வேண்டாவா?
5.) அனைவரும்
இரு மொழிகளிலும் உரையாற்றினர். ஆனால் நன்றி நவின்றவர் தலைவர், ஆங்கிலத்தில் கூறச் சொன்னதாகத் தெரிவித்து ஆங்கிலத்தில் நவின்றார். அன்னைத்
தமிழின் வளர்ச்சிக்கான மாநாட்டில், அதுவும் தமிழர் வாழும்
நாட்டில், உரைகள் தமிழில் இடம் பெறுவதுதானே சிறப்பு. இடையில்
வேற்று மொழியாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய சூழலில் இரு மொழிகளில் தெரிவித்தால்
போதுமே!
6.) அழைப்பிதழ்
தமிழில் அல்லது தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அழைப்பைக்கூடத் தமிழில்
தெரிவிக்க இயலாதவர்களால் தொழில்நுட்பக் கருத்துகளை எவ்வாறு தமிழில் தெரிவிக்க
இயலும் என எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது.
7.) அழைப்பிதழில்
எதற்கு வாழ்த்துச் செய்திகள்? வாழ்த்து மலர் எனத்
தனியாக வெளியிடலாமே! அல்லது கருத்தரங்கக் கட்டுரை மலரில்
இணைத்தாலும் போதுமே! அழைப்பிதழ் வாழ்த்துச் செய்திகளுடன் வண்ண அட்டையில் மலர்போல்
அடிக்கப்பட்டதால் செலவைத் தவிர்க்க எண்ணிப் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்
வழங்கவில்லை போலும். நிகழ்ச்சி விவரங்களை முன்னரே தெரிவித்து இருப்பின் எந்த எந்த
அமர்வுகளில் பங்கேற்கலாம் என முடிவெடுக்க இயலுமே எனக் கேட்புப் பங்கேற்பாளர்கள்
வருத்தப்பட்டனர். இது போன்ற சூழலில் அழைப்பிதழ்ப் பகுதியை மட்டும்
தாளில் அச்சிட்டுப் பிற அனைவருக்கும் வழங்க வேண்டும்.
8.) அழைப்பிதழ், பதாகைகள், அடையாள அட்டைகள் என எங்கெல்லாம் நாள் இடம்
பெறுகிறதோ அங்கெல்லாம் திருவள்ளுவர் ஆண்டும்
இனிமேலாவது, இடம் பெற வேண்டு்ம்.
9.) கருத்தரங்க
அமர்வுகள் காலந்தாழ்த்தி தொடங்கப்பட்டதால் காலங்கடந்தே முடிக்கப்பட்டன. உரிய
காலத்தில் தொடங்க முடியாமல் போனாலும் உரிய காலத்தல் முடிக்கவாவது செய்ய வேண்டும்.
10.)
தேநீர் வழங்கிடம் அமர்வறையில்
இருந்து தொலைவில் இருந்தது. காலக்கடப்பைத்
தவிர்ப்பதற்காக அமர்வறைகளிலேயே தேநீர் வழங்குமாறு தெரிவித்தேன். ஆனால், உணவறை தவிர வேறு அறைகளில் தேநீர்
வழங்கக்கூடாது எனப் பல்கலைக்கழகத்தில் தெரிவித்ததாகக் கூறினர். ஆனால், உத்தம அலுவலக அறையிலும், உத்தமப் பொதுக் குழுக்
கூட்டஅறையிலும் தேநீர் வழங்கப்பட்டன.
இவ்வாறு விதிமுறையை மீறியவர்கள், அமர்வறைகளிலும்
தேநீர் வழங்கியிருக்கலாம் அல்லவா? விதியாயினும்
விதிவிலக்காயினும் ஒத்த நிலையே பின்பற்றப்படவேண்டும் என்பதில் உத்தமம் கருத்து
செலுத்த வேண்டும்.
11.)
விருது அறிவிப்பின் பொழுது
நடுநிலையுடன் முடிவெடுத்ததாக அறிவிப்பாளர் கூறினார். ஆனால், அவர் தலைமை தாங்கிய அமர்வில் எந்த ஒரு கட்டுரைக்கு எதிராக அவரும்
அவையினரும் எதிர்ப்பு தெரிவித்தனரோ, அக்கட்டுரையை
அளித்தவருக்கும் விருது
வழங்கப்பட்டிருந்தது. இவர் குறுக்கீடு இல்லை என்ற
வகையில் நடுவுநிலைமை என்று வேண்டுமானால் கூறலாம். வேண்டியவர்க்கு விதிமுறை பிறழ்ந்து உதவுநரும் வேண்டார்க்கு விதிமுறையை
ஒதுக்கி அல்லன ஆற்றுநரும் நடுவுநிலைமை
என்று சொல்லித்தான் தீயன ஆற்றுகின்றனர். எனவே, நடுவுநிலைமை
என்று அறிவித்தால் மட்டுமே நடுவுநிலைமை ஆகாது. இக்கட்டுரையாளர் புகழ்மிகு கவிஞரின்
மகன் நடத்தும் நிறுவனம் சார்பில் வந்தவர் என்பதற்காக விருது வழங்கப்பட்டதாக
அவையில் சல சலப்பு ஏற்பட்டது. (தன்
தகுதியை அறிந்ததாலோ என்னவோ அவர் விருது பெற வரவில்லை.) அதுபோல், மற்றொருவர்
அளித்த கட்டுரை குறித்துத் தலைவரும்
அவையினரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவருக்கும் விருது
வழங்கப்பட்டதாகவும் கூறினர். பிற இருவர் அளித்த கட்டுரை அமர்வில் பங்கேற்றவர்களைக்
கேட்டால்தான் அவர்களும் தகுதியானவர்களா
இல்லையா எனத் தெரியும். அனைத்துக்
கட்டுரைகளையும் படித்துப் பார்த்துத் தேர்ந்
தெடுத்திருப்பார்கள் என்பதில் ஐயப்பாடே
மேலோங்குகிறது. இதனைத் தவிர்க்க அமர்வுத் தலைவர்களிடம் கட்டுரைகள் குறித்த
மதிப்புரைகளைப் பெற்றுப் பின்னர் அனைவரிடமும் பெயர்கள் அறிவிக்கப்பட்ட
தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் வகையில் விருதுகள் வழங்கப் பெற வேண்டும்.
12.)
விருதுகள் எல்லாம் பெரிதும்
ஆங்கிலத்திற்கே அளிக்கப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எனத் தனித்தனியே விருதுகள் அல்லது பரிசுகள்
வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
13.)
சிலரையே வெவ்வேறு குழுக்களில்
உறுப்பினராகப் போட்டது குறித்தும் மனக்குறைபாட்டுடனான பேச்சு வந்திருந்தோரிடையே
எழுந்தது. கூட்டப்பங்கேற்பு அல்லது மாநாட்டிற்கு வருதல் போன்ற நேர்வுகளிலான
போக்குவரத்துச் சிக்கனத்திற்காக அவ்வாறு பின்பற்றியிருக்கலாம் என அப்பொழுது கூறினேன். எனினும் ஒருவர் ஒரு குழுவில்
மட்டுமே உறுப்பினராக இருக்கும் வகையிலும் பிற குழுக்களில் அவர் பங்கேற்பு வேண்டப்படும்
நேர்வுகளில் சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில்
பங்கேற்கச் செய்யும் வகையிலும் குழுக்களை அமைத்து அனைத்து நிலைச்சார்பான
பங்கேற்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
14.)
உத்தமத்தில் ஒரே நேரம் நானும் பொறி.பாலாசி வாசுதேவனும் உறுப்புக்கட்டணம் செலுத்தி இருந்தோம்.முழுமை
உறுப்புக் கட்டணம் செலுத்திய அவரது பெயரை இணைவு
உறுப்பினர் எனத் தவறாகப் பதிந்திருந்தனர். என் பெயர் உறுப்பினர் பட்டியலில்
இல்லை. சிலர் காசோலை அனுப்பியதாகக்
கூறியும் அவர்கள் பெயரும் உறுப்பினர் பட்டியலில் இல்லை என்பதையும் அறிந்தேன். என்
பெயர் உறுப்பினர் பட்டியலில் இல்லாத பொழுது நான் எவ்வாறு உத்தமத்தின்
பொதுக்குழுவில் பங்கேற்க முடியும் என்பதைப் பதிவுப் பொறுப்பாளரிடம் தெரிவித்து உத்தமம் பொறுப்பாளர்களிடமும்
தெரிவிக்க வேண்டி,
அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், உத்தமம்
பொறுப்பாளர்கள் இது குறித்து ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. முன்பு நான் உறுப்பினர்
கட்டணம் செலுத்திய பொழுதும் பட்டியலில்
இடம் பெறாமல் போராடி உறுப்புத் தகுதியைப் பெற்றேன். இருப்பினும் உத்தமம்
மின்னஞ்சல் எதுவும் அனுப்பப்படுவதில்லை. எனவேதான் உறுப்பினர் நிலையைப் புதுப்பிக்கவில்லை.
மீண்டும் இதே நிலை என்றால் எவ்வாறு
உத்தமத்தில் ஆர்வம் காட்ட இயலும்? இனிமேலாவது இது போன்ற
குறைகளைக் களைய வேண்டுகின்றேன்.
15.)
கட்டுரையாளர்களை வரவேற்கும்
பொழுதும் வழியனுப்பும் பொழுதும் உரிய போக்குவரத்து அளிப்பதில கருத்து செலுத்த வேண்டும். 25.08.13 ஞாயிறு நண்பகல் வானூர்தி
நிலையத்திற்கு ஊர்தி ஏற்பாடு வேண்டியபொழுது
இருவருக்கு மட்டும் ஏற்பாடு செய்ய இயலாது என்றும் தனி வண்டிக்கு வாடகை 100
வெள்ளி ஆகும் என்றும் தெரிவித்தனர். கட்டுரையாளர் திரு சக்கரபாணி அவருக்கும்
நண்பருக்கும் கேட்ட பொழுது அதே போல் இருவருக்கு வண்டி தர இயலாது என்றனர்.
மொத்தம் நால்வராக இருக்கும் பொழுது வண்டி
தந்திருக்கலாமே! ஒவ்வொருவரிடமும் ஒரேமாதிரி சொல்லித் தட்டிக்கழித்ததைத் தவிர்த்திருக்கலாமே! அல்லது நால்வருக்கும் வண்டி ஏற்பாடு செய்து
பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கலாமே! எனவே, இக்குறைபாட்டை
இனியேனும் தவிர்க்க வேண்டுகின்றேன்.
16.)
மாநாட்டின் நிறைவு விழாவின் பொழுது
மாநாட்டின் தோராய வரவு செலவு விவரங்களை
அனைவர் முன்னிலையிலும் அளித்தலும் பின்னர் தணிக்கையிடப்பட்ட வரவு செலவு
அறிக்கையைப் பொதுவில் வெளியிடலும் வீண் செலவுகளைத் தவிர்க்கவும் முறைகேடுகளைக்
குறைக்கவும் வீண் பரப்புரை மேற்கோள்வோருக்கு
வாய்ப்பூட்டு போடவும் உதவும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
17.)
உத்தமத்தில் தொழில்நுட்பம்
சார்ந்துள்ளவர்களுக்கு முதன்மை அளிப்பதும் தமிழ்நுட்பம் சார்ந்தவர்கள்
புறக்கணிக்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே! உத்தமப் பொறுப்பாளர்கள் எண்ணத்திலும்
செயலிலும் மறைவான உரைகளிலும் இருந்த
இப்போக்கு உத்தமப் பொறுப்பாளர் ஒருவரால் அகமொழியாளர் அண்ணா கண்ணனிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து
தவறானது என்பதை அவர் விளக்கியும் பொறுப்பாளர் ஏற்க வில்லை. தமிழ் என்னும் சொல்
இடம் பெற்றதால்தான் மாநாடு, உலகத்தமிழர்களிடம்
ஈடுபாட்டை ஏற்படுத்தி உள்ளது. இல்லையேல்
ஏதோ துறை வல்லுநர்கள் கூட்டம் போல்தான் அமைந்திருக்கும். மாநாட்டுப் பொருண்மையில்
தமிழ் இடம் பெற்றதால்தான் மலேசிய அரசு 50,000 வெள்ளி நன்கொடை
அளித்துள்ளது. இவைபோல மாநாட்டின்
வெற்றிக்கும் அனைத்துத் தரப்பாரின் பங்களிப்பிற்கும் தமிழே காரணம் என்பதைத்
தொழில் நுட்பத்தினர் உணரவேண்டும். எனவே,
தமிழ்நுட்ப அணி, தொழில்நுட்ப அணி என இரண்டு பிரிவுகளை அமைத்து இரண்டையும்
இணையாகக் கருதிப் பணிகளைத் தொடர வேண்டும். தொழில் நுட்பத்தினர் தங்கள் வணிக
நோக்கிற்காகத்தான் உத்தமத்தை
நடத்துகின்றனர் என்னும் பழிச்சொல்லைப் போக்க வேண்டும்.
18.)
சில கருத்துகளை உத்தமத்திற்கு
முன்னரே தெரிவித்துள்ளேன். மேலும் சிலவும் உள்ளன. பிறருக்கும் இவை போல் நலம்நாடும் கருத்துகள் இருக்கும். இவ்வாறு
தெரிவிக்கப்படும் கருத்துகளைக் குற்றம் சுமத்துவதாகக் கருதாமல், செம்மைகாண்பதற்கான அன்புரைகளாகக் கருதினால் உத்தமம் மேலும் ஓங்கும்.
மாநாட்டின் பொழுதே பங்கேற்போர் கருத்துகளைக் கேட்கும் வகையில் நிறை-குறை
பதிவேட்டைப் பேணி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். அனைவரின் பட்டறிவும்
பெறப்படுகையில் அமைப்பு மெருகேறும் வாய்ப்பு கூடும் அல்லவா?
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
தத்தம்
கருமமே கட்டளைக் கல்(திருக்குறள் 505).
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்
அருளுரை தனியருக்கு மட்டுமல்ல!
அமைப்புகளுக்கும் பொருந்துமன்றோ!
உத்தமம் உயர்ந்தோங்கித் திகழ
அன்புடன் வாழ்த்தும்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
06.08. 2044 / 22.08. 2013