சனி, 18 ஜூலை, 2009

யாழ் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் வாழ்கிறார்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று த.தே.கூ சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அதனால் அவர்கள் தேர்தல் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பதற்குப் பயப்படுவதாகவும் த.தே.கூ யாழ் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக யாழில் இடம்பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட எவருமே இனங்காணப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.

எனவே இச்செயல்களில் ராணுவமும் ஒட்டுக்குழுக்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது என்பதிலும் யாழ் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றனர். அதோடு வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற அரசு சர்வதேச சமூகத்தின் குற்றப்பார்வைக்கு உள்ளாகியுள்ளது. எனவே இவ்வாறான எண்ணங்களை யாழ் மக்கள் மனதில் இருந்தும் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அகற்றும்பொருட்டு யாழ் மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அரசு.

ஆனால் மக்களோ தமது கருத்துக்களை வெளிக்கூற முடியாத நிலையில் இருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தமது உள்ளத்தை வெளிக்காட்டி அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டம் சார்பாக தேர்வான அரச அமைச்சர் தனது சொந்த சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியாமல் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் போட்டியிட வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். த.தே.கூ பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் மக்கள் பொதுக்கூட்டங்களிற்கு சமூகமளிக்க அஞ்சுவதால் தாம் வீடு வீடாகச் சென்று தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர் மேலும் தொடர்ந்து கூறி தமது வெற்றி நிச்சயமானது என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக