வெள்ளி, 5 ஜனவரி, 2024

கனடா, தொல்காப்பிய மன்ற இணையக் கருத்தரங்கு – 06/07.2024

 




அன்புடையீர்!

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு”  சனவரி மாதத்தின்

இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054  / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு ,

தமிழ் நாட்டு நேரம்  மார்கழி 22, 2054  ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு

 மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன்.

சிறப்புரை:   முனைவர் செல்வநாயகி சிரீதாசு

நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல்

உரையாளர்களும் தலைப்புகளும்

 திரு இலக்குவனார் திருவள்ளுவன்

– தமிழ்க்காப்புத் தலைவர் இலக்குவனார்

திருமதி புவனா கருணாகரன் – நூன் மரபில் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் அறிவியல் அடிப்படையில் இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவா?

செல்வன்  கெளதம் நித்தியானந்தம் – ஒளவையார்

திருக்குறள் முற்றோதல் – செல்வி நீட்டி நித்தியானந்தம்

நன்றியுரை : செயலாளர் சி.சண்முகராசா

ஐயந்தெளிதல் அரங்கு – பங்கேற்பாளர்கள்

இந் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்.

இவ்வறிவித்தலைத் தங்களது நண்பர்களுடனும், தமிழ் ஆர்வலர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09

Meeting ID: 361 993 2434

Passcode: tamil

அனைவரதும் ஆதரவுக்கு மிக்க நன்றி!

அன்புடன்

திருமதி. செ. சிரீதாசு

தலைவர்,  தொல்காப்பிய மன்றம் – கனடா

செவ்வாய், 2 ஜனவரி, 2024

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – 07.01.24

 




தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும்

என்னூல் திறனரங்கமும் – இணைய அரங்கம்

மார்கழி 23, 2053 / 07.01.2024 காலை 10.00

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 1031)

தமிழே விழி!                                                                      தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி முனைவர் சேயோன்

முனைவர் இரா.பிரபா,

உதவிப் பேராசிரியர், பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்

தொடர்ந்து முற்பகல் 11.00 😐 என்னூல் திறனரங்கம் 5

இலக்குவனார் திருவள்ளுவனின்

நாடு நலம் பெற . . .

திறனாய்வறிஞர்

முனைவர் புத்தேரி தானப்பன், புது தில்லி

நிறைவுரை : 

தமிழ்த் தேசியர்  தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சுடர் ந.காருண்யா

மலர்க்கொடி வெளியீட்டகம்

தோழர் தியாகு எழுதுகிறார் : சொல்லடிப்போம் வாங்க!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி)

கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி

குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது, எப்புரட்சியும் நடவாது. மாற்றமும் புரட்சியும் தவிர்க்கவியலாதவை என்ற கருத்தின் பொருள் மாந்த முயற்சி இல்லாமலே அவை நடக்கும் என்பதன்று. புறஞ்சார்ந்த குமுக நெறிகளைத் தலைவிதியாக மார்க்குசியம் கருதவில்லை. குமுக நெறிகளைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டு குமுக அமைப்பையும் அதன் வளர்ச்சி நிலையையும் முரண்பாடுகளையும் கணித்துப் புரட்சிக்குரிய கோட்பாடும் நடைமுறையும் வழிமுறையும் அமைப்பு முறையும் இல்லாமல் குமுகியப் புரட்சி நடைபெறாது. விடுதலையும் கிட்டாது. “தானாய் எதுவும் மாறும் என்பது பழைய பொய்யடா!”

மார்க்குசியம் உயர்ந்த கனவுகளின் தோரணம் அன்று. நாம் வாழும் குமுகம் எத்தகையது என்பதை உள்ளது உள்ளபடி பகுத்தாய்ந்து அதிலிருந்து சுரண்டலற்ற புதிய பொதுமைக் குமுகத்துக்கும் அதன் முதற்கட்டமாகிய குமுகியத்துக்கும் முன்னேறும் வழிகளை வெளிபடுத்துவதே மார்க்சியத்தின் கடமை ஆயிற்று. குமுகியத்துக்கு வழிநடத்தும் குமுக ஆற்றல் எது? இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளே என்பதை மார்க்சும் எங்கெல்சும் இனங்காட்டினார்கள். மார்க்குசிய ஆய்வுமுறையின் மையமாக இருப்பது பாட்டாளி வகுப்பின் வரலாற்று நலனும் கடனும் ஆகும்.

இலெனின் சொன்னார்:
“மார்க்குசும் எங்கெல்சும் தொழிலாளர் வகுப்புக்கு ஆற்றிய சேவை என்ன? சுருங்கச் சொல்லின் தொழிலாளர் வகுப்பு தன்னை அறியவும் தன்னை உணரவும் கற்றுத் தந்தார்கள். கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள்.”

முதலிய (முதலாளித்துவ) அமைப்பின் கமுக்கத்தை விண்டுரைக்க மார்க்குசு பயன்படுத்திய வழிமுறை மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கை (COMMUNIST MANIFESTO) இப்படித் தொடங்குகிறது: “ஏடறிந்த வரலாறு அனைத்தும் வகுப்புப் போராட்டங்களின் வரலாறே ஆகும்”.

குமுக வகுப்புகளிடையிலான முரண்பாடுதான் வரலாறு நெடுகிலும் வளர்ச்சியின் உந்தல், இந்த முரண்பாடுகள் முற்றித்தான் புரட்சிகள் வெடிக்கின்றன, குமுக மாற்றங்கள் நடக்கின்றன, இந்தக் குமுக மாற்றங்களின் வேர்க் காரணங்கள் பொருளாக்கத்திலும் பங்கீட்டிலுமான மாற்றங்களே என்பது மார்க்குசியக் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் ஆய்வுமுறைக்கும் அடிப்படை ஆகும்.

வகுப்புப் போராட்டம் என்பதைக் குறுக்கி தேசியப் போராட்டங்களுக்கு உரிய அழுத்தம் தராதாரும் உளர். ஆனால் தொழிலாளர் வகுப்பு தன்னைத் தேசமாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமை அறிக்கை கூறுவதன் ஆழ்பொருளை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. அதனால்தான் அறிக்கையின் முத்தாய்ப்பையே திரித்து “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்று முடிக்கின்றார்கள். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்பதுதான் உண்மையான இறுதி முழக்கம். இரண்டுக்குமான வேறுபாடு எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்கதே.

பொதுமை அறிக்கை என்ற அந்தச் சின்னஞ்சிறிய நூல் முழுவதுமே மார்க்குசிய ஆய்வுமுறைக்குச் சுடர்மிகு செயல்விளக்கமாகத் திகழ்கிறது.

மார்க்குசிய ஆய்வுமுறை நேரான வகுப்புப் போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் உரிய அறிந்தேற்பு வழங்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்தை வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கம் என்றும், இனஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவியது. இன்றைய இசுரேலின் சீயோனிய அரசு வந்தேறிகளின் குடியேற்ற ஆதிக்கத்தைக் குறிக்கும் இன ஒதுக்கல் ஆட்சி என்றும், பாலத்தீன மக்களின் போராட்டத்தைத் தேசியத் தன்தீர்வுக்கும் தேசிய விடுதலைக்குமான போராட்டம் என்றும் வரையறுக்க மார்க்குசிய ஆய்வுமுறை உதவுகிறது. இசுரேல்-பாலத்தீனப் பூசலுக்கு மதங்களிடையிலான பூசல் ஒரு வரலாற்றுக் காரணமாகத் தோன்றினாலும், மெய்யான வேர்க் காரணம் வல்லரசியங்களின் விரிவாளுகை நலனே என்பதைப் புரிந்து கொள்ளவும், இந்தப் பூசலுக்கு நிலையான அரசியல் தீர்வு காணவும் மார்க்சிய ஆய்வுமுறை வழிகாட்டுகிறது.

இந்துத்துவத்தை இந்து மதம் என்று நம்பப்படும் மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபடுத்திக் காணவும், இந்துத்துவ அரசியலின் பார்ப்பனிய உள்ளடக்கத்தைக் கண்டுணரவும், வகுப்பு வகையிலும் சாதி வகையிலும் அதன் பார்ப்பன-பனியா-பெருமுதலிய ஆளும் வகுப்புச் சார்பைத் தோலுரித்துக் காட்டவும் மார்க்சிய ஆய்வுமுறை துணைசெய்கிறது.

முதலிய வளர்ச்சிக்கும் இயற்கைச் சூழல் அழிவுக்குமான நெருங்கிய தொடர்பை மார்க்சிய ஆய்வுமுறை துலக்கமாக வெளிப்படுத்துகிறது. முதலியம் நிலத்தைக் கொள்ளையிடுவதாகவே மார்க்சு சொல்கிறார்:

“…முதலிய வேளாண்மையில் முன்னேற்றம் என்பதெல்லாம் தொழிலாளரை மட்டுமல்லாமல் மண்ணையும் கொள்ளையிடும் கலையிலான முன்னேற்றம்தான். குறிப்பிட்ட காலத்திற்கு மண்வளத்தைப் பெருக்குவதிலான முன்னேற்றம் என்பதெல்லாம் அந்த வளத்தின் நீடித்து நிலைக்கும் தோற்றுவாய்களைச் சிதைப்பது நோக்கிய முன்னேற்றம்தான்… முதலியப் பொருளாக்கம் செல்வமனைத்தின் மூலத் தோற்றுவாய்களான மண்ணையும் தொழிலாளரையும் உறிஞ்சித்தான் தொழில்நுட்பம் வளர்க்கிறது.”

மாந்தருக்கும் சுற்றுச் சூழலுக்குமான இயங்கியல் உறவை மார்க்சிய ஆய்வுமுறை வெளிப்படுத்துகிறதுமாந்தர் சுற்றுச்சூழல் மீது செயல் புரிவது போலவே சுற்றுச் சூழலும் மாந்தர் மீது செயல் புரிகிறது. எப்படி நீருக்கு வெளியே மீனால் உயிர்வாழ முடியாதோ, அதே போல் சுற்றுச் சூழலுக்கு வெளியே மாந்தரால் உயிர்வாழ முடியாது. மாந்தர்தம் உடனடி நன்மைக்காக சுற்றுச்சூழலைச் சிதைக்கலாம் என்பது எவ்வளவு விபரீதம்! இந்த விபரீதத்தை அறிவியல் வழியில் வெளிப்படுத்துவது மார்க்சிய ஆய்வுமுறையே!

கொடும் போர்களாலும், காலநிலை மாற்றத்தாலும், முதலிய ஈட்ட வெறியின் வரம்பற்ற பெருக்கத்தாலும் உலகம் பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணரவும், இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தவும் இன்றைய உலகப் பொருளியலையும் அரசியலையும் பகுத்தாய மார்க்சிய ஆய்வுமுறையே நமக்குத் துணை!


பின்குறிப்பு:

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் புதிய கலைச்சொற்கள்:

[சொல்லடிப்போம் வாங்க!]

புதிய தமிழ் (பழைய தமிழ்) – ENGLISH)



1) மார்க்குசிய ஆய்வுமுறை – THE MARXIST METHOD;
2) குமுக மாற்றம் (சமூக மற்றம்) – SOCIAL CHANGE;
3) பொருண்மியம் (பொருள்முதல் வாதம்) – MATERISLAISM;
4) கருத்தியம் (கருத்துமுதல்வாதம்) – IDEALISM;
5) இயங்கியல் பொருண்மியம் (இயக்கவியல் பொருள்முதல்வாதம்) – DIALECTICAL MATERIALISM;
6) வரலாற்றுப் பொருண்மியம் (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) – HISTORICAL MATERIALISM;
7) முதலியம் (முதலாளித்துவம்) – CAPITALISM;
8) குமுக வகுப்புகள் (சமூக வருக்கங்கள்) – SOCIAL CLASSES;
9) வகுப்புப் போராட்டம் (வருக்கப் போராட்டம்) – CLASS STRUGGLE;
10) படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) – EVOLUTION;
11) வாழ்நிலை – BEING;
12) உணர்வுநிலை – CONSCIOUSNESS;
13) ஆக்கம் (உற்பத்தி) – PRODUCTION;
14) உழைப்பின் இலக்குப் பொருள் – OBJECT OF LABOUR;
15) உழைப்புக் கருவி – INSTRUMENT OF LABOUR;
16) ஆக்கப் பொறிகள (உற்பத்திச் சாதனங்கள்) – MEANS OF PRODUCTION;
17) ஆக்க ஆற்றல்கள் (உற்பத்திச் சக்திகள்) – FORCES OF PRODUCTION;
18) ஆக்க உறவுகள் (உற்பத்தி உறவுகள்) – RELATIONS OF PRODUCTION;
19) பொதுமைக் கட்சி அறிக்கை (பொதுமை அறிக்கை) – MANIFESTO OF THE COMMUNIST PARTY (COMMUNIST MANIFESTO);
20) குமுக அமைப்பு (சமூக அமைப்பு) – SOCIAL SYSTEM;
21) குமுகப் புரட்சி (சமூகப் புரட்சி) – SOCIAL REVOLUTION;
22) தொல் பொதுமைக் குமுகம் (ஆதிப் பொதுவுடைமைச் சமூகம்) – PRIMITIVE COMMUNIST SOCIETY;
23) அடிமையுடைமைக் குமுகம் (அடிமையுடைமைச் சமூகம்) – SLAVE-OWNING SOCIETY;
24) கிழாரியக் குமுகம் (பிரபுத்துவ / நிலப்பிரபுத்துவ) சமூகம்) – FEUDAL SOCIETY;
25) அடித்தளம் – BASE;
26) மேற்கட்டுமானம் – SUPERSTRUCTURE;
27) புறஞ்சார்ந்த குமுக நெறிகள் (புறவய சமூக விதிகள்) – OBJECTIVE SOCIAL LAWS;
28) சுற்றுச் சூழல் – ENVIRONMENT;
29) காலநிலை மாற்றம் – CLIMATE CHANGE;
30) முதலிய ஈட்டம் (முதலாளித்துவ இலாபம்) – CAPITALIST PROFIT;
31) முதலிய வேளாண்மை (முதலாளித்துவ விவசாயம்) – CAPITALIST PROFIT.
32) ஊழ்வினைக் கொள்கை (தலைவிதித் தத்துவம்) – FATALISM;
33) தன்-தீர்வு (சுய நிர்ணயம்) – SELF-DETERMINATION.

தோழர் தியாகு
தாழி மடல் 413

(தொடரும்
)


திங்கள், 1 ஜனவரி, 2024

தமிழ்த் தேசியத் திருவிழா!, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், சென்னை

 



எங்கள் தமிழ் வாழ்க!





தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

தமிழர் திருநாள் பொங்கல் விழா!

தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத்

தமிழ்த் தேசியத் திருவிழா!

இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை,

தியாகராயநகர் சென்னை-600017

நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி

கவியரங்கம்:

தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு!

 தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன்

ஒருங்கிணைப்பு:

கவிஞர் நல்ல அறிவழகன்

பாடுவோர்: பலகவிகள்

மாலை : 5:00மணி

தமிழ்த்தாய் வாழ்த்து: இசைப்பள்ளி மாணவர்கள்

தலைமை: பாவலர் மு இராமச்சந்திரன்

தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

முன்னிலை:  தேனி சபரிநாதன், வேலு சுபராசர், பேரா. பொன் கி பெருமாள், மதுரை இராசு, திருவொற்றியூர அண்ணாமலை, அண்ணாநகர் கங்கா, தேவிமுருகன், மதுரவாயல் பரணி, பொன்னுரங்கம், திருவள்ளூர் சின்னப்பன், நா சுந்தரமூர்த்தி,

வரவேற்புரை: தமிழா! தமிழா! பாண்டியன்

பொதுச் செயலாளர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

விருதாளப் பெருமக்கள்:

ஓவியப் பாவலர் மு வலவன்- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது– வழங்குபவர்-  பாவலர் மு இராமச்சந்திரன் .

புதுக்கோட்டை மதிவாணன்- தமிழ்த் தேசிய சிந்தனையாளர் விருது– வழங்குபவர்- அறிஞர் அருகோ

கடலார் வேலாயுதம்- சிந்தனைச் சிற்பி  சிங்காரவேலர் விருது– வழங்குபவர் கலைஞர் மு துரைஅரசன்.

கவிஞர் கார்முகிலோன்- மாக்கவிஞர் பாரதியார் விருது– வழங்குபவர்-  பிரவீன்குமார் பரதவர்

குமரிச்செழியன்- மார்சல் நேசமணி விருது– வழங்குபவர்- வெ. செயசிங் இராட்டிரிய லோக்தள்

ப. கண்ணய்யா- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது–  வழங்குபவர்- யு எசு எசு ஆர் நடராசன்

இலக்குவனார் திருவள்ளுவர்- தமிழ்த் தென்றல் திரு வி க விருது–  வழங்குபவர்-  பேரா. சே கு சாந்தமூர்த்தி

கவிஞர் திருவை பாபு-  சோமசுந்தர பாரதியார் விருது– வழங்குபவர் – தஞ்சை பத்மா

சுப சந்திரசேகரன்- சிலம்புச் செல்வர் ம பொ சி விருது- வழங்குபவர் நற்சிந்தனை தமிழண்ணன்

விவசாயி செயராமன்- உழவர் திருநாள் விருது- வழங்குபவர் – நெசவு சண்முகம்

வழக்.  சே சென்னம்மாள் தமிழேந்தி – அயோத்திதாச பண்டிதர்  விருது–  வழங்குபவர்- சிவ வடிவேலன் ஓதுவார்

இசையாசிரியர் செந்தில்குமார் -மாயுரம் வேதநாயகம் பிள்ளை விருது –    வழங்குபவர் ஆதி. ஞானசேகரன்

கவிஞர் மதிஅரசு- செந்தமிழ்ச்சுடர் விருது– வழங்குபவர் விழுதுகள் செ ஐயாப்பிள்ளை

பேரா. கசுத்தூரி- தமிழ்த்தாய் ஔவையார் விருது– வழங்குபவர் – பேரா. இராசகணேசு

வை மா குமார் – தமிழின்குரல் விருது– வழங்குபவர்- கவிச்சுடர் சிந்தைவாசன்

மோகன்செகதீசன்- உடைவடிவமைப்பு வல்லுநர் விருது–  வழங்குபவர்- ஆவடி இராதாஅம்மாள்

வாழ்த்துரை:

சே ம நாராயணன் 

தலைவர். மக்கள் தேசிய கட்சி

க சக்திவேல் தலைவர். தமிழக மக்கள் முற்போக்கு கட்சி.

தஞ்சை இளஞ்சிங்கம். தலைவர் . தமிழ்நாடு சோசலிச்டு.

வழக்கறிஞர் ஆர் என் இரவி தலைவர்.தேசிய மக்கள் சக்தி கட்சி

மு பா பேராசிரியன் பொருளாளர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

கரு. சந்திரசேகரன் உலகத் தமிழின வணிக பேரியக்கம்

ஆ. என்றி

தலைவர். மக்கள் சனநாயக பேரவை.

வழக். தென்பாண்டியன்

துணைத் தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

இராயபுரம் பிரான்சிசு தலைவர், அகில இந்திய அப்துல்கலாம் தொழிலாளர்

நன்றியுரை: வேந்தன்கைவல்யம்

து பொ செயலாளர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

நிகழ்ச்சி வழிநடத்தல்: முனைவர் அயனாவரம் பாபு

கொ ப செயலாளர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

இரவு: 8:00 மணிக்குj; தமிழர் திருநாள் பொங்கல் படையல்

தொடர்பு எண்கள்: 9940546671,

தோழர் தியாகு எழுதுகிறார் : கைச் சரக்கா மார்க்குசியம்?

      01 January 2024      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கைச் சரக்கா மார்க்குசியம்?

மார்க்குசுக்கு அடிக்கடித் தேர்வு வைக்கின்றனர். எந்த ஒரு சிக்கலுக்கும் மார்க்குசிய வழியில் தீர்வு காண்பது பற்றிய கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இசுரேல்-பாலத்தீனத்தின் மீத இசுரேல் நடத்தி வரும் இனவழிப்புப் போரைப் மார்க்குசிய வழியில் புரிந்து கொள்வதும் விளக்குவதும் எப்படி? இந்தியாவில் பாசிச பாசகவை எதிர்ப்பதற்கு மார்க்குசியம் வழிகாட்டுமா? குமுகிய நாடுகள் எனப்பட்டவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மார்க்குசியம் தரும் விளக்கம் என்ன? பொதுமைக் குமுகம்பற்றிய மார்க்குசியத்தின் நம்பிக்கை மாறாதுள்ளதா? இப்படிப் பல கேள்விகளை நான் செல்லும் இடமெல்லாம் சந்திக்கிறேன்.

ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன்: மார்க்குசியத்தைச் ‘சர்வரோக சஞ்சீவி’யாக நான் கருதவில்லை. தெளிவுள்ள மார்க்குசியர்கள் யாரும் அப்படிக் கருதவில்லை. அது அனைத்து நோய்களுக்குமான அருமருந்து அன்று. அதே போது தங்கள் தோல்விகளுக்கான பழியை மார்க்குசியத்தின் மீது சுமத்தி “மார்க்குசியக் கைச்சரக்கு” என எள்ளி நகைப்போரை வெறுத்து ஒதுக்குவது தவிர எனக்கு வேறு வழியில்லை.

மற்ற வகையில் மார்க்குசியர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்ளாத சில வரலாற்றாசிரியர்கள் கூட மார்க்குசியத்தைத் தமது ஆய்வுமுறையாகக் கொள்ளக் காண்கிறோம்.

ஆனால் மார்க்குசிய ஆய்வுமுறை என்பது என்ன? அதைத் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடியாதா? எப்படியும் எது மார்க்குசிய ஆய்வு முறை? எது மார்க்குசிய ஆய்வுமுறை இல்லை? மார்க்குசிய ஆய்வுமுறை தொடர்ச்சியான மாற்றத்தை வலியுறுத்துகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் மாற்றங்களுக்கு நடுவில் மாற்றமில்லாமல் தொடரும் சில அடிப்படைகளை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. மார்க்குசிய ஆய்வு முறையிலும் அவ்வாறான அடிப்படைகளைக் கண்டு தெளியலாம் என நம்புகிறேன். மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள் சிலவற்றைத் தெளிந்துரைக்க முயல்கிறேன்.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மார்க்குசிய ஆய்வுமுறையின் அடிப்படைகள்

“அறிஞர்கள் உலகத்தைப் பலவாறு விளக்க மட்டுமே செய்துள்ளனர்; ஆனால் அதனை மாற்றுவதுதான் முகன்மையானது” என்றார் காரல் மார்க்குசு. மார்க்குசிய ஆய்வுகளின் நோக்கம் உலகை மாற்றியமைப்பதாகும். குமுக மாற்றமே மார்க்குசியத்தின் குறி. இதற்கான ஒரு கருவியே மார்க்குசிய ஆய்வுமுறை.

மார்க்குசிய ஆய்வுமுறை இயங்கியல் பொருண்மியத்தையும் (dialectical materialism) வரலாற்றுப் பொருண்மியத்தையும் (historical materialism) அடிப்படையாகக் கொண்டது. வாழ்நிலைதான் உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்பதே பொருண்மியத்தின் சாறமாகும். “விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கும் செருமானியக் கருத்தியலுக்கு நேர்மாறாக நாங்கள் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏறுகிறோம்” என்று மார்க்குசும் எங்கெல்சும் அறிவித்துக் கொண்டார்கள்.

இயற்கை அறிவியலர் சார்லசு தார்வின் உயிரியல் படிமலர்ச்சியின் நெறிகளைக் கண்டுரைத்தார். குமுக அறிவியலர்கள் காரல் மார்க்குசும் பிரெடெரிக் மார்க்குசும் மாந்தக் குமுக வரலாற்றின் வளர்ச்சி நெறிகளைக் கண்டுரைத்தனர். வரலாற்றில் நிகழும் மாற்றங்களுக்கு என்ன காரணம்? குமுக மாற்றங்களும் புரட்சிகளும் போர்களும் எங்கிருந்து வருகின்றன? உடனடிக் காரணங்களும் தற்செயல் காரணங்களும் பற்பலவாக இருக்கலாம். ஆனால் உண்மையான அடிப்படைக் காரணம் என்ன?

எக்காலத்திலும் எக்குமுகத்திலும் மாந்தருக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் வசிக்க உறையுள்ளும் ஆகிய இன்றியமையாத் தேவைகள் உள்ளன. இவற்றோடு கூட நாகரிக வளர்ச்சியைப் பொறுத்து வேறு பல தேவைகளும் எழுகின்றன. இந்தத் தேவைகள் அளவிலும் பண்பிலும் வளர்ந்து சென்ற வண்ணமுள்ளன. இவற்றை மாந்தர்கள் இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையும் உழைப்புமே செல்வமனைத்துக்கும் அடிப்படைகளாகும்.

இயற்கையில் கிடைப்பவற்றைத் தமக்கு வேண்டியவாறு உழைப்பைக் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செயலையே ஆக்கம் (உற்பத்தி) என்றழைக்கிறோம். வெறுங்கையால் ஆக்கம் செய்ய இயலாது என்பதால் உழைப்புக் கருவிகள் தேவை. உழைப்பின் இலக்குப் பொருட்களையும் உழைப்புக் கருவிகளையும் சேர்த்து ஆக்கப் பொறிகள் என்கிறோம். ஆக்கப் பொறிகளையும் ஆக்கம் செய்யும் ஆக்குநர்களையும் சேர்த்து ஆக்க ஆற்றல்கள் என்கிறோம். ஆக்கத்தில் ஈடுபடும் மாந்தர்களுக்கிடையிலான உறவுகளே ஆக்க உறவுகளாகும். ஆக்க ஆற்றல்களும் (forces of production) ஆக்க உறவுகளும் (relations of production) சேர்ந்ததே ஆக்க முறை (mode of production) ஆகும். ஒவ்வொரு குமுக அமைப்பும் பொருளாக்க முறையை, அதாவது பொருளியல் அமைப்பை அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது.

குமுக அமைப்பின் அடித்தளமாகப் பொருளியல் அமைப்பும், மேற்கட்டுமானமாக அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவையும் உள்ளன. குமுகத் தேவைகள் ஓயாமல் வளர்ந்து செல்வதால் ஆக்க ஆற்றல்கள் மாறவும், அதனடிப்படையில் ஆக்க உறவுகள் மாறவும் வேண்டியுள்ளது. பொருளியல் அடிப்படை மாறும் போது ஏறக்குறைய அதற்கேற்ப அரசியல், சட்டம், கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றமே குமுக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படையாகும். குமுக அமைப்பு மாறுவதே குமுகப் புரட்சியாகும்.

ஆனால் பொருளியல் அடித்தளத்துக்கும் அரசியல், பண்பாடு உள்ளிட்ட மேற்கட்டுமானத்துக்குமான உறவைக் கொச்சையாகவும் எந்திரத்தனமாகவும் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று மார்க்குசிய மூலவர்கள் எச்சரித்தார்கள். மேற்கட்டுமானம் ஒப்பளவில் பொருளியல் அடித்தளத்திலிருந்து தற்சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த அடித்தளத்தின் மீது எதிர்வினையும் புரிகிறது. பொதுவாக அரசியல் புரட்சிகளே பொருளியல் அமைப்பின் அடிப்படை மாற்றத்துக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. அரசியல் மாற்றங்களில் கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றுக்குள்ள பங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மார்க்குசிய ஆய்வுமுறையில் குமுக வளர்ச்சியை ஆய்வு செய்யும் போது முதன்மையான ஐந்து குமுகப் பொருளியல் அமைப்புகளாக அறியப்படுகிறவை: (1) தொல்பொதுமைக் குமுகம், (2) அடிமையுடைமைக் குமுகம், (3) கிழாரியக் குமுகம், (4) முதலிய அல்லது முதலமைக் குமுகம், (5) பொதுமைக் குமுகத்தின் முதற்கட்டமாகிய குமுகியக் குமுகம். இந்த ஐந்தைத் தவிர வேறு குமுக அமைப்புகளே இல்லை என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவை தவிர இடைநிலை அல்லது மாறுநிலை வடிவங்களும், ஒன்றுக்கு மேற்பட்டவை கலந்த வடிவங்களும் இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, சாதியப் பொருளாக்க முறையில் அதற்கேயுரிய கூறுகளோடு அடிமையுடைமை, கிழாரியம், முதலியம் ஆகியவற்றின் கூறுகளும் கலந்து காணப்படுகின்றன.

எந்த ஒரு குமுகத்தையும் நிலைத்து நிற்கிற ஒன்றாக அல்லாமல் இயக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கிற ஒன்றாக அணுகக் கோருவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. வரலாற்றுப் பொருண்மியம் என்பது வரலாற்றுக்கு இயங்கியல் பொருண்மியத்தை அல்லது பொருண்மிய இயங்கியலைப் பொருந்தச் செய்வதாகும்.

கற்பித்துக் கொண்ட புனிதமான சில பேருண்மைகளுக்கேற்ப மெய்ந்நடப்புகளை வளைக்காமல், மெய்ந்நடப்புகளிலிருந்து உண்மைகளை அடைய வலியுறுத்துவதாகும் மார்க்குசிய ஆய்வுமுறை. மெய்ம்மைகளிலிருந்து உண்மையை அடைதல் (From facts to truth) என்பார் இலெனின். தரவுகளிலிருந்து முடிவுகளுக்கு என்றும் இதைச் சொல்லலாம்.

தோழர் தியாகு
தாழி மடல் 413

(தொடரும்)