சனி, 12 மார்ச், 2016

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி




நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி05 : nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi05

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி

  கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர்.
  எமது சங்கத்தின் ஊடாக ஏற்கெனவே இக் குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக கோழி வளர்ப்புக்கு என   33,000 உரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி02 :nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi02 நிகழ்வு-வட்டுக்கோட்டை,இந்துவாலிபர்சங்க உதவி03 : nighazh_indhuvaalibar_vattukkottai_uthavi03

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து”- பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.




தலைப்பு-செவியறிவுறூஉ - thalaippu_seviyarivuru_S.Ilakkuvanar

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து” என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.
     மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு ஏமம் நாடும் காவலர்களாய் இலங்கினர். அவர்கள் பாடல்கள் இலக்கண ஆசிரியர்களால் துறைகள் வகுக்கப் பெற்றுப் பின்வரும் புலவர்கட்கு முன் மாதிரியாய்த் திகழும் நிலை பெற்றன. அவ்வாறு தோன்றிய இலக்கியங்களைக் கொண்டுதானே ஆசிரியர் தொல்காப்பியர் திணையும் துறையும் வகுத்துச் செல்கின்றார். ஆகவே பாடாண்திணை என்பது வெறும் புகழ்ச்சிக்குரிய திணை என்று கருதாது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கருத்துகள் பல கொண்ட நல்லிலக்கியம் தோன்றுவதற்குரிய திணை என்று கருதுதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியர் அக்காலத்துக்குரியன மட்டும் கூறினாரிலர், அரசியல் தலைவர்கள் போன்று.   முக்காலத்துக்குரியனவும் கூறினர் அரசியல் அறிஞராய்.
“ ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
     காலம் மூன்றொடு கண்ணிய வருமே”
       (உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் அடிப்படையில் மூன்று காலத்துக்குரியன கருதிப் பாடப்படும்)
-பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 234-235

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்!-சி.இலக்குவனார்





தலைப்பு-மெய்ப்பாட்டாராய்ச்சி, சி.இலக்குவனார் : thalaippu_meyppaattaaraaychi_Dr.S.Ilkakkuvanar

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.
 “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கவிச்சுவையும் இலக்கியச் சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாடகத்தில் நடிப்போரும் உணர்ச்சியை வெளிப்படுத்துவார். காண்போரும் உணர்ச்சிக்கு ஆளாவார். இசைத் தமிழ் பாடுவோரும் உணர்ச்சி வேறுபாட்டுடன் பாடுவார். கேட்போரும் உணர்ச்சி வயப்படுவர். இயல் தமிழ் ஒன்றே தாமாகப் படித்தும் உணர்ச்சி பெறத் துணையாவது. ஆதலின் மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.
-பேரா.முனைவர் சி.இலக்குவனார் :
 தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 236