மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்
இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும்
பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள்
வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட
பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த
அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த
கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய
செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை
நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை.
திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும்,
கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை,
மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம்
முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்,
சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின்
தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும்,
மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும்
கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப்
பெற்றுள்ளது.
"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்
அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் "மதுரையைச்
சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு
மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில்,
திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம்,
அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன.
மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக,
திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச்
சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும்
குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால
பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், "அறவோர் ஓதும் மறையொலி
கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது. மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், "அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் "நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், "அல்லங்காடி' எனப்பட்டன. "மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.
மதுரையும், நிகழ்வுகளும்...
* தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, உயரதிகாரிகள் சிலர், "வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நகரமைப்பை அறிந்து வரவேண்டும்,' என்றனர். அதற்கு அவரோ,"மதுரைக்கு சென்று பாருங்கள். அதைவிட சிறந்த நகரமைப்பு எங்குள்ளது,' என்றார்.
*சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை தான். கடைசியாக தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கம் (1906), மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் இன்றும் செயல்பட்டு வருகிறது.
*நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானை எதிர்த்து போரிட்ட நக்கீரருக்கு காட்சி தந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.
* அவ்வையாரின் அறிவை சோதிக்க, "சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா' என முருகப்பெருமான் கேட்டதும், மதுரையில் தான்.
*"கணவனை கள்வன் என நினைத்து கொன்ற' பாண்டிய மன்னனையும், மதுரையையும் சபித்து தீக்கிரையாக்கினார், கண்ணகி.
*முருகன் அருளால் குமரகுருபரர் பேசும் திறன் பெற்று, பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார்.
* திருவாதவூரார் மாணிக்கவாசகர் என பெயர் பெற்றதும், இங்கே தான்.
மதுரை அடடே!
பழமையும், புதுமையும் கலந்த நகரான நம்ம மதுரையில், நாம் அறிந்த, கண்ட எத்தனையோ வரலாற்று அடையாளங்களும், நினைவிடங்களும் இக்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்படாமலேயே புதைந்து கிடக்கின்றன. கண் முன் தெரியும் அடையாளங்களை தவிர, பல அடையாளங்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படாமலேயே உள்ளன. மாமதுரையை போற்றும் இத்தருணத்தில், இந்த "அடடே...' அடையாளங்களையும் போற்றுவோம்.
முதல் விமான நிலையம்
1942ல்"ராயல் ஏர்போர்ஸ்' எனும் பிரிட்டிஷ் விமானப்படையினர், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் விமான தளத்தை உருவாக்கினர். இந்திய விமான கார்ப்பரேஷன் சட்டம் 1953ல் அமலான போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1956ல் முதல் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மதுரையில்தான்.
பழமையான அலுவலகம்
மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகேயுள்ள, பத்திரப்பதிவு அலுவலகம், ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. 1862ல், தென்மாவட்டங்களுக்கென முதல் பத்திரப்பதிவு அலுவலகமாக இது உருவாக்கப்பட்டது. கட்டடத்தின் ஒருபுறம் சிவில் கோர்ட்டும், மறுபுறம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டது. காலையில் பத்திரப்பதிவு அலுவலகமும், மதியத்திற்கு மேல் கோர்ட்டாகவும் செயல்பட்டதாகவும் சிலர் கூறுவது உண்டு.
ரயிலை காண திருவிழா கூட்டம்
மதுரையில் முதன் முதலாக திருச்சிக்கு 1875 செப்.,1ல் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளும், நீராவி என்ஜினும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. புகையை கக்கிக் கொண்டு, பெரும் குரலெடுத்து ஓடியதை பார்க்க மக்கள் திருவிழா கூட்டமாக கூடினர். சிலர், "பேய் வருகிறது' என பயந்து, வீட்டினுள் பதுங்கினர். இரண்டாவது ரயில், மதுரை - தூத்துக்குடி இடையே 1876 ஜன.,1ல் ஓடியது.
முதல் பள்ளி
ஆங்கிலேயர் காலத்தில், மதுரையில் துவங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி கீழக்குயில்குடியில் உள்ளது. 1924ல் இப்பள்ளி "பிறந்தது'. இதுகுறித்த கல்வெட்டை இன்றும் அந்த பள்ளி தாங்கிக் கொண்டிருக்கிறது.
ஆலன்துரை கல்லறை
"வரி...வட்டி... கிஸ்தி... உனக்கேன் தரவேண்டும்' என வீரபாண்டிய கட்டபொம்மனை "டென்ஷனாக்கிய', நெல்லை அதிகாரி ஆலன்துரையின் கல்லறை மதுரையில் 240 ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி - சம்பந்தமூர்த்தி தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஐரோப்பியர்களின் கல்லறை தோட்டத்தில்தான் ஆலன்துரை கல்லறை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளும் இங்குதான் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இது நம்ம மதுரை
* மதுரையில் ஆங்கிலேயர்களின் கட்டுமான திறமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது ஏ.வி.பாலம். மதுரையின் தென்கரையையும், வடகரையையும் இணைக்கும் பிரதான பாலமான இது, 1889 டிச.,6ல் திறக்கப்பட்டது. இதை திறக்க வருவதாக இருந்த ஆல்பர்ட் விக்டர், மதுரையில் அப்போது காலரா நோய் இருந்ததால், வரவில்லை. இருப்பினும் அவரது நினைவாக பாலத்திற்கு "ஏ.வி.' என்ற பெயர் சூட்டப்பட்டது.
* தமிழகத்தின் முதல் ஊராட்சி ஒன்றியம் மதுரையில்தான் துவக்கப்பட்டது 1957ல் "மதுரை வடக்கு பஞ்., யூனியன்' என்ற பெயரில் துவங்கப்பட்டது.
* மதுரையில் தபால் பை முறை அறிமுகமான போது, முதன்முதலாக தபால் பை எண் வாங்கியவர் கருமுத்து தியாகராஜன் செட்டியார். டெலிபோனை பயன்படுத்திய முதல் மதுரைக்காரரும் இவர்தான். அவரது போன் எண் ஒன்று.
* தமிழகத்தின் முதல் வேலைவாய்ப்பு நிறுவனம், 1946ல், முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக மதுரையில் ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது.
* இதுதவிர, 1998ல் தமிழகத்தின் முதல் சமத்துவபுரமும், 1999ல் முதல் உழவர் சந்தையும் திறக்கப்பட்டது மதுரையில்தான்.
* திருவிழா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில், மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.
* தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் அமைந்துள்ள ஒரே நகரம் நம்ம மதுரைதான்.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமை பெற்றது மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர். தற்போது செயல்படவில்லை.
முதல் சினிமா தியேட்டர்!
மதுரையின் முதல் சினிமா தியேட்டர் என்ற பெருமை, தெற்குமாசிவீதியில் உள்ள சிடிசினிமா. 1921ல் இத்தியேட்டர் கட்டப்பட்டது. திரைக்கு முன் ஒருவர் குச்சியுடன் நின்றுக் கொண்டு, உருவங்களை குறிப்பிட்டு திரைக்கதையை விளக்குவார். 1933ல் "டாக்கி' என்ற பேசும்படம் வந்தது. இத்தியேட்டரில் அந்த கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்' படம் ஒன்றரை ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் தந்த "ஹிட்'டால், திக்குமுக்காடிய நிர்வாகி வெங்கடகிருஷ்ணய்யர், கீழவெளிவீதியில் சிந்தாமணி தியேட்டரை கட்டினார். "டிவி'க்களின் ஆதிக்கத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1999ல் சிடிசினிமா மூடுவிழா கண்டு, இப்போது "பார்க்கிங்' இடமாக பார்க்க பரிதாபமாக உள்ளது.
தாகம் தீர்க்கும் கிணறு!
மதுரை யானைக்கல் பாலத்தில், வைகையாற்றை கடப்பவர்கள் இடதுபக்கம் பார்த்தால், ஆற்றில் ராட்சத கிணறு ஒன்று இருக்கும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் 1804ல் இதுபோன்ற கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து பீப்பாய்களில் நீரை நிரப்பி, குதிரை, மாட்டு வண்டிகளில் வினியோகித்தனர். அந்த ஆண்டிலேயே, வெள்ளப்பெருக்கால், கிணறு காணாமல் போனது. இதனால் இதன் அருகிலேயே இப்போதுள்ள கிணறு உருவாக்கப்பட்டது. அதேபோல், 1888ல் ஆற்றின் கல்மண்டபம் அருகே மூன்றாவது கிணறு அமைக்கப்பட்டது.
கடிகாரத்திற்கு வயது 145
மதுரையில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1873ல் அமைக்கப்பட்டதுதான் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள கடிகாரம். கடிகார சுழற்சிக்காக இழுவைக் குண்டு 60 கிலோ மணியடிக்க உதவும். அழுத்தக் குண்டு 80 கிலோ மற்றும் உதிரிபாகங்களை சேர்த்து மொத்த எடை 200 கிலோ. இக்கடிகாரம் இங்கிலாந்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு, இன்று பழுதாகி, அதற்கு நேரம் சரியில்லாததால் "நினைவுச் சின்னமாக' இருக்கிறது. இன்று இந்த கடிகாரத்திற்கு வயது 145.
காந்திஜியை அடையாளப்படுத்திய மதுரை
காந்திஜி "அடையாளமாக' மாறிவிட்ட, அரை நிர்வாண விரதத்திற்கு வித்திட்டது மதுரைதான். அந்த தீர்க்க முடிவு எடுத்த இடம் இன்றும் அவரது பெருமையை சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த இடம் 251ஏ, மேலமாசி வீதியில் உள்ள தற்போதைய காதிகிராப்ட் அங்காடி. 1921 செப்.,21ல் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது, பாமர மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து அந்த விரதத்தை காந்திஜி மேற்கொண்டார்.
மதுரையை தாங்கும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்
மதுரையை வடக்கு - தெற்கு என வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. 18ம் நூற்றாண்டில் ஆற்றை கடந்து வடக்கு - தெற்கு என இருபுறமும் செல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் வைகையில் எப்போதுமே தண்ணீர் கரைபுரண்டு ஓடும். தற்போது போல் வறண்டு இருக்காது. சுமையை தலையிலும், குழந்தையை கக்கத்தில் இடுக்கி கொண்டும் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து வைகையின் குறுக்கே மேம்பாலம் கட்ட, பொறியாளர்களை தேர்வு செய்யும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டது. இதற்காக, இங்கிலாந்து பொறியாளர்களுக்கு இடையே போட்டி ஒன்றை நடத்தியது. இதில், பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் தேர்வானார். பாலம் கட்டுவதற்காக அவரை, மதுரைக்கு வரவழைத்தது பிரிட்டிஷ் அரசு. 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 தூண்களுடன் மேம்பாலம் கட்ட பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் வரைபடம் தயாரித்தார். பின், வைஸ்ராய் டிபெரின் 1886 டிச.,8ல் அடிக்கல் நாட்டினார். மேம்பாலம் கட்டுவதற்கு முன், கோச்சடை பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வயல்களுக்கு திருப்பி விடப்பட்டன. 12 மீட்டர் அகலம், 240 மீட்டர் நீளத்தில் 16 தூண்களுடன் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணி 1889ல் துரிதமாக துவங்கியது. சுட்ட செங்கல், சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு, கருப்பட்டி கலவையில் மிகுந்த சிரமத்தின் பேரிலேயே பாலப்பணிகளை கச்சிதமாக முடித்தார் பொறியாளர் ஆல்பர்ட் விக்டர். பின், போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இப்பாலம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக கட்டியதால், இப்பாலத்திற்கு பொறியாளர் "ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்' (ஏ.வி. பாலம்) என பெயரிடப்பட்டது. அக்காலகட்டத்தில் பாலத்தின் நடுவே "பஸ் ஸ்டாப்' இருந்தது. காரணம், வைகையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலையின் அழகை ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக பாலத்தில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் மக்களின் பிரதான வாகனங்களாக மாட்டு வண்டி, குதிரை வண்டி மட்டுமே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமே கார்களில் வலம் வந்தனர். பாலத்தில் மோதி வாகனம் விபத்தில் சிக்கியதாக சரித்திரம் இல்லை. 124 ஆண்டுகளை கடந்து, மதுரை மக்களை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆல்பர்ட் விக்டர் பாலம்.
விழாக்கள் நிறைந்த விழுமிய நகர் மதுரை
மதுரை கோயில் நகரம் மட்டுமல்ல. திருவிழாக்கள் நிறைந்து இருந்ததால், "விழவுமலி மூதூர்' என்று இலக்கியங்களால் பாராட்டப்பட்ட அற்புத நகரம். ஆண்டின் 365 நாட்களில் 294 நாட்கள் திருவிழாக் கோலம்தான். மதுரை விழாக்கள் குறித்து பேராசிரியர் இரா.மோகன் கூறியதாவது: ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும், நிறைவு நாளை முடிவு செய்து, உற்சவத்தை துவங்கும். அதன்படி சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், கார்த்திகை நட்சத்திரத்தில் துவங்கி 12 நாட்கள் நடைபெறும். நிறைவு நாளான சித்ரா பவுர்ணமியன்று, கள்ளழகர், வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின், வைகை கரையில் உள்ள மண்டபங்களில் 5நாட்கள் தங்குவார். இதில் ஒருநாளில் அவர் பத்து அவதார திருமேனிகளால் அலங்கரிக்கப்படுவது, "தசாவதார விழா'. வைகையின் வடகரையில் வைணவர்களும், தென்கரையில் சைவர்களும் மதுரையில் திரண்டு இருப்பது, சைவமும், வைணவமும் சமயத்தின் இருகரைகள் என்பது போல விளங்கும். இவ்விழாக்களே "சித்திரைப் பெருவிழா'.
* வைகாசி மாதம் திருவாதிரை துவங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில், சந்நிதி தெருவில் புதுமண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், இருபுறமும் நீராழி மண்டபம், கிழக்கே வசந்த விழா நீர்த்தொட்டியை, திருமலை நாயக்கர் அமைத்தார். அன்று முதல் அங்கு வைகாசி விழா நடந்து வருகிறது.
* இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய இளவேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, "வில்லவன் விழா' கொண்டாடப் பட்டது.
* ஆனி மாதம் மகநட்சத்திரம் முதல் மூல நட்சத்திரம் முடிய 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். சுவாமியும், அம்பாளும் ஊஞ்சல் மண் டபத்தில் எழுந்தருள்வர்.
* ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி கேட்டை முடிய 10 நாட்கள், "முளைக்கொட்டு' திருவிழா நடைபெறும். அக்காலத்தில் இவ்விழாவுக்குப் பின்பே, விவசாயிகள் பணிகளை துவங்குவர்.
* ஆவணி மாதம், "ஆவணி மூலத் திருவிழா' எனப்படும், புட்டுத் திருவிழா, 18 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், மதுரையில் சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
* புரட்டாசியில் 9 நாட்கள் "நவராத்திரி விழா'. அனைத்து கோயில்களிலும் "கொலு' அமைத்து கொண்டாடும் இவ்விழா முக்கியமான ஒன்று.
* ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை. இம்மாதத்தில், முருகனுக்கு உகந்த "கந்த சஷ்டி' நடைபெறும். மீனாட்சி கோயில் எதிரே புதுமண்டபத்தில், 6நாட்களும் கன்னிப் பெண்கள் கூடி, "கோலாட்ட திருவிழா' கொண்டாடுவர். இம்மாதத்தில் பவுர்ணமி அன்று முடிவுபெறும் 5 நாட்கள், "பவித்ர உற்ஸவம்' கொண்டாடுவர்.
* கார்த்திகையில் "தீபத் திருவிழா' சதய நட்சத்திரத்தில் துவங்கி, திருவாதிரை நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். வீடுகளில் தீபம், வீதிகளில் "சொக்கர் பனை' ஏற்றி மகிழ்வர். கார்த்திகை விண்மீனை, "அறுமீன்' என நற்றிணையில், "அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி' எனக் கூறப்பட்டுள்ளது.
* மார்கழியில் அஷ்டமி நாளில், சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும், மதுரை வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க தேரில் உலா வருவர். பெண்கள் பாவை நோன்பு இருப்பர்.
* தை மாதத்தில் பொங்கல் விழா, அறுவடை விழாவாக துவங்கி பின், வளத்தை குறித்த விழாவாக மாறியது. திருவாதிரை நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவில், தெப்பத்திருவிழா நடைபெறும். அன்று சுவாமி, அம்மன், தெப்பத்தில் சுற்றி, மைய மண்டபத்தில் எழுந்தருள்வர்.
* மாசி மாதம், மாசிமக விழா 48நாட்கள் நடைபெறும். இதில், அமாவாசை நாளில் கொண்டாடும் மகாசிவராத்திரி முக்கியமானது.
* பங்குனி மாதம் கோடை வசந்தவிழா 10 நாள் நடைபெறும். பாண்டியர் காலத்தில், சுவாமியும், அம்மனும், திருப்புவனத்தில் எழுந்தருள்வர். தற்போது 10ம் நாளில், திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
பண்டைய நாட்களில் பெருவழக்காக இருந்த விழா, "வெறியாட்டு விழா'. முருகனுக்காக எடுக்கப்படும் இவ்விழா குறித்து திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இதுபோல இந்திரனுக்கு எடுக்கப்படும் இந்திர விழா, பூம்புகாரில் நடந்ததாக கூறப்பட்டாலும், மதுரையிலும் கொண்டாடியதாக சின்னமனூர் செப்பேடு கூறுகிறது. இதுபோல பலவிழாக்கள் மதுரையில் சமயம் சார்ந்ததாகவே நடந்தன. விழாக்களின் போது, பாட்டும், கூத்தும், விருந்துகளும் நிறைந்து மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையும் அறியமுடிகிறது.
மதுரையை போற்றிய மனோகர் தேவதாஸ்: விழியின்றி எழிலோவியம்
மதுரையின் மாட்சியை, ஏட்டில் எழுதிய புலவர்கள் ஏராளம். பாட்டில் பாட கவிஞர்கள் காட்டியதும் தாராளம். கதையில் களம் கண்ட எழுத்தாளரும் அதிகம் உண்டு. ஆடல், பாடலாக பதிவு செய்த அற்புத கலைஞர்களும் தேடினால் நிறையவே உண்டு. ஓவியமாகவும் உருவம் தந்தவர்கள் பலர் என்றாலும், அதில் உன்னதமானவர் மனோகர் தேவதாஸ்,76.
நீங்கள் கண்ணால் காணும் காட்சி தத்ரூபமாக இருக்கும். மனதில் தோன்றும் காட்சிகளோ மணித் துளிகளில் மறைந்துவிடும். ஆனால் மனோகர் தேவதாஸ், பாலனாக, பக்குவப்பட்ட இளைஞனாக மதுரையில் வலம் வந்தபோது, கண்ட காட்சிகளை, தூரிகையால், துல்லிய ஓவியமாக்கியுள்ளார். இளம்வயதில் பார்வை கொஞ்சம், கொஞ்சமாக பழுதாகி வந்தபோதும், அவர் ஓவியம் உருவாக்கியது விந்தையான விஷயமே.
நெல்லையே பூர்வீகம் என்றாலும், மதுரையில் பிறந்து, வளர்ந்த அவர், இங்குள்ள காடு கண்மாய் சுற்றி, கழனி வயல்களில் திரிந்தார். அவர் கண்ட காட்சிகள் மதுரையின் இயற்கை வளத்தை எடுத்துக் கூறுகின்றன. போய் வந்த ஆன்மிக தலங்கள்... அது மீனாட்சி ஆலயமோ, செயின்ட் மேரீஸ் சர்ச்சோ, கோரிப்பாளையம் தர்காவோ... காமிரா கண்களுக்குக் கூட சிக்காத அற்புத காட்சியாக அவரது தூரிகையால் அவதரித்ததே, அவரது திறனுக்கு அழியா சான்று.
கலந்து கொண்ட விழாக்களை எந்தக் காமிரா கவிஞனும் இப்படி காட்சிப்படுத்தவோ, மாட்சிமைப்படுத்தவோ முடியாது. தெப்பக்குளம் என்றாலும், திருக்கல்யாண காட்சியானாலும், திரளான கூட்டமுள்ள தேரோட்டம் என்றாலும், அணுஅணுவாய் ரசித்து, நுட்பமாக, வரிவரியாக வ(ரை)ரிந்தது, வாய்பிளக்க வைக்கிறது. கட்டிப் பிடிக்க முடியாத தூண்களுடன் கட்டப்பட்ட நாயக்கர் மகால், கோயிலில் சிற்பங்கள், வாயிலில் யாழிகள், அம்மன், சுவாமியின் அழகு வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த இடம்; பார்க்காத விஷயம் என பலவற்றையும், விழியின்றியே, விரும்பிப் படித்துள்ளார் அந்த அதிசய மனிதர். படித்த அமெரிக்கன் கல்லூரி, பார்த்த மாசிவீதி மாடங்கள், நான்மாடக் கூடலில் வான் பார்க்கும் கட்டடங்கள், அதில் வாசல், நிலைகள், ஜன்னல்கள், மாடிகள், கைப்பிடிச் சுவர்கள், ஓவியங்கள் என அத்தனை நுணுக்கங்களையும் வரைந்தவிதம், அற்புதம் என்னும் ஓர்சொல்லில் அடக்கிவிட முடியாது.
பார்க்க பார்க்க பரவசம் காட்டும் இந்தப் படங்களை வரைந்தது குறித்து மனோகர் தேவதாஸ் கூறியதாவது: ஓவியத்தை நான் முறைப்படி கற்றதில்லை. அது இறைவன் எனக்குத் தந்தவரம். எனக்கு 30 வயதுக்குப் பின்னர்தான் ஒரு கண் முழுமையாக பாதித்தது. பின் மற்றொரு கண்ணும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்புக்குள்ளானது. எனது ஆர்வத்தால் பார்த்த காட்சிகளை நுணுக்கமாக வரையத் துவங்கினேன். கண்கோளாறுகளுக்கு அதிகமாக, பிளஸ்5 என்ற அளவில் கண்ணாடி அணிவர். ஆனால் எனது கண்குறைபாடுக்கு டாக்டர்கள், பிளஸ்27 என்ற அளவில் கண்ணாடியை தந்தனர். அதை வைத்து நுணுக்கமாக பார்த்து வரைந்தேன். அதுவும் குறுகிய வட்டமாக, நுண்ணோக்கியில் பார்ப்பது போல தெரியும். அதைவைத்து நான் பார்த்த காட்சிகளை வரைந்தேன். இதற்கு, பக்கவாதத்தால் படுக்கையாக இருந்த, எனது மனைவி பெரிதும் உதவினார். எனது முதல் நூல் "கிரீன் வெல் இயர்ஸ்'. அதைத் தொடர்ந்து "மல்டிபிள் பேசெட்ஸ் ஆப் மை மதுரை' என்ற நூலை, படங்களுடன் உருவாக்கினேன், என்றார்.