சென்னை, அக். 15: ""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.4 மாதங்களில் 51 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ""ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் இனப் படுகொலை செய்த ராஜபட்சவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்'' என்று உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.சர்வதேச போர் குற்றவாளியாக தன்னை விசாரித்து கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், ""தமிழகத்தில் இருந்து தூதுக்குழுவை அனுப்புமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு ராஜபட்ச கடிதம் எழுதியுள்ளார்.தமிழகத்தில் இருந்து வரும் தூதுக் குழு இலங்கை நிலவரத்தைப் பார்த்து திருப்தி தெரிவித்து விட்டால் "மனிதகுல படுகொலையாளி' என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து விடலாம் என்று ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு முதல்வர் கருணாநிதி உடந்தையாக செயல்பட்டுள்ளார்.""அகதி முகாம்களில் இருந்து முதல்கட்டமாக 58 ஆயிரம் தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள். மற்றவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களில் விடுதலைப் புலிகள் மறைந்துள்ளனரா? என்று ஒவ்வொருவராக கேள்வி கேட்டு இலங்கை ராணுவம் சித்திரவதை செய்து வருகிறது. இதுவரை 1.57 லட்சம் தமிழர்களை கிரிமினல்களைப்போல விசாரித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது.வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அவர்கள் எங்குபோய் சேர்ந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துக்கள்
உலகத்தமிழர்களின் எண்ணங்களை எதிரொலித்துள்ளார். ஏன் இந்த அவலம்? படுகொலை நேரத்தில் யாரும் சென்று தடுக்கவில்லை. கொன்று குவித்த கொலை வெறி மமதையில் அழைத்தால் சென்று பொன்னாடை அணிவிக்கும் கேவலம் ஏனோ? முறைதானா? அறம்தானா? அண்ணாவின் இதயம் கிடைக்க வில்லை என்பதற்காக இதயமே இல்லாதான்போல் நடந்து கொள்வதா?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 2:38:00 AM
10/16/2009 2:38:00 AM