Last Updated :
சென்னை, அக். 14: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதியளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக சென்ற தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் குழு, புதன்கிழமை சென்னை திரும்பியது. குழுவினர் தங்கள் அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் அண்ணா அறிவாலயத்தில் அளித்தனர்.பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய ஒரு தூதுக்குழுவை அனுப்புமாறு அந்நாட்டு அதிபர் ராஜபட்ச எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை நான் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.இந்நிலையில் அங்கு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அல்லல்படுகிறார்கள் என்ற செய்திகள் வந்தன. அதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை எங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சந்தித்து, இலங்கைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழுவை அனுப்ப வலியுறுத்தினர்.அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என்னுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களைக் கொண்ட குழு கடந்த 10-ம் தேதி இலங்கை புறப்பட்டு சென்றது.அங்குள்ள முகாம்களில் இப்போது 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அரசில் உள்ள பொறுப்பாளர்களிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக 58 ஆயிரம் தமிழர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை படிப்படியாக அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க உறுதி அளித்துள்ளனர். இதற்கான பணிகள் வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.அங்கு கண்ணி வெடிகளை அகற்ற வேண்டிய முக்கியப் பணி இருப்பதாகக் கருதப்படுகிறது. அவற்றை அகற்ற இந்திய அரசிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. அந்த உதவியை உடனடியாக செய்வதன் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களின் வேதனை நீங்கும் என்பதை நாங்களும் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம்.அனாதைக் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டதற்கான விவரங்கள் இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார் கருணாநிதி.பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், முதல்வரின் பதில்களும் வருமாறு:முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்க இலங்கை அரசு கண்ணி வெடிகளை காரணம் காட்டுவதை ஒப்புக்கொள்கிறீர்களா?அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை உணர்கிறேன். எதிரொலிக்கிறேன். ஆனால் இங்குள்ள ஆர்வலர்கள் கட்டுக்கதைகளை கூறுகின்றனர்.இலங்கை ராணுவம் அழைத்துச் சென்ற முகாம்களுக்கு மட்டுமே எம்.பி.க்கள் குழு சென்றதாக ராமதாஸ் கூறியுள்ளாரே?அவர் குழப்பத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்பதே முக்கியம்.முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்க ஏதேனும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?பருவமழை தொடங்குவதற்குள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளோம். 15 நாள்களில் 58 ஆயிரம் பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.முதலில் விடுவிக்கப்படும் 58 ஆயிரம் பேர் எந்த முன்னுரிமையில் தேர்வு செய்யப்படுவார்கள்?இலங்கைத் தமிழர்கள் என்ற முன்னுரிமையில்.அனைத்து தமிழர்களும் விடுவிக்கப்பட்டு விடுவார்களா?எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியது பயன் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.முகாம்களில் உள்ள தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி?போரின்போதுதான் சித்திரவதை செய்யப்பட்டனர். போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வழக்கமானதுதான் என ஜெயலலிதா கூறினாரே, அப்போதுதான் சித்திரவதை செய்யப்பட்டனர்.எம்.பி.க்கள் குழுவை இலங்கை ராணுவத்தினர் வழிநடத்திச் சென்ற முறை திருப்தி அளிக்கிறதா?திருப்தி அளிக்கிறது.முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி?இப்போது யாரும் கடத்தப்படுவது இல்லை.தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் வசதியாக உள்ளதா?வசதி கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது.சர்வதேச விதிகளின்படி முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?தங்கக் கூண்டாக இருந்தாலும், கிளி அதில் அடைத்து வைக்கப்படக் கூடாது என பாரதிதாசன் கூறினார். தமிழர்கள் முகாம்களில் இருந்தே விடுவிக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 4:19:00 AM
By Ravi
10/15/2009 2:20:00 AM
By Prabhu
10/15/2009 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*