வியாழன், 15 அக்டோபர், 2009

ராஜபட்சேவுக்குத்தான் அனுகூலம்! -
நாடாளுமன்றக் குழு பற்றி விஜயகாந்த்



சென்னை, அக்.14: "தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்குத் தான் அனுகூலம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு. இந்தப் பயணம் ராஜபட்சவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களே தனக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபட்ச இதை பயன்படுத்திக் கொள்வார். "இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் இறந்துவிட்டனர். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்' என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். "பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும்' என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை. எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, இதைச் சீரழித்தவர் கருணாநிதிதான். இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும். நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு? பேராபத்தில் தமிழர்கள் உள்ளபோது, இந்திய அரசு மௌனம் சாதிப்பது யாருக்காக இந்த அரசு நடைபெறுகிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை, இந்திய -இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

மிகவும் சரியான கருத்து.இந்திய இலங்கை உறவிற்காகத் தமிழர்களைக் காவு கொடுக்கும் மத்திய அரசின் கொடும் போக்கிற்குத் திமுக தலைமையும் அடிபணிந்து விட்டது. மேலும்'சகோதர யுத்தம்' என்று அடிக்கடிக் கூறி உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவோர் முதலில் அதிமுக மதிமுக வுடனான பகைப்போரை நிறுத்தட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:21:00 AM

VERY GOOD VIJAYKANTH..BUT YO ARE ALSO DOING STUNT POLITICS.WE KNOW VERY WELL, DON'T FOOLISH OUR SL TAMILS

By vijay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக