மாத்தையா - பிரபாகரன்
அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை இருக்கும்போதே கொலை நிகழ்கிறது என்றால், அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியது. ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது கொழும்பு நகரில், இலங்கையின் தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை இருப்பதோ வடக்கு-கிழக்கில். இருந்தாலும் மேற்கண்ட வாதம் முன்னெடுக்கப்பட்டது. புலிகளை இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், திம்பு பேச்சின் மீது வைத்த அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்தது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுவது குறித்தும் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்திருந்த காரணத்தால், கொலையில் தொடர்பிருக்கலாம் என்று வாதிடப்பட்டது. ஆனால் லண்டனில் இருந்த புலிகளின் அலுவலகம், "அமிர்தலிங்கம் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை' என்று மறுத்தது.அமிர்தலிங்கம் கொலை நடந்த அதே வாரத்தில் "பிளாட்' இயக்கத் தலைவர் முகுந்தன் என்கிற உமா மகேசுவரனும் கொழும்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு கட்சியின் உட்பூசல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் இந்திய உளவுப் பிரிவையும் அதன் செயல்பாட்டையும் "டைம்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம் அம்பலப்படுத்தியிருந்த நேரத்தில் அவரது கொலை நடந்ததால், பல்வேறு யூகச் செய்திகள் வெளியாயின. பிரேமதாசாவின் ஜூலை கெடுவைத் தொடர்ந்து, அமைதிப் படை முல்லைத் தீவுப் பகுதிகளில் ஏராளமான துருப்புகளை இறக்கி, கடுமையாகத் தாக்கியது. விடுதலைப் புலிகள் 1989 ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அமைதிப் படையினால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் படையினர் வைத்த கண்ணி வெடியால் மதியாமதி, ஆனந்தப் புளியங்குளம் வீதியில் உள்ள நொச்சிகுளத்தில் ஆறு பேர் இறந்தனர் என்றும், கிழக்கு மாகாணத்தில் அகதிகள் முகாம்களிலிருந்து திரும்பவும் தத்தமது இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மீன்பிடித் தடையாலும், விவசாயம் செய்ய ஏற்பட்ட தடையாலும் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அகதிகளாக இருந்தபோது கொடுக்கப்பட்ட நிவாரணமும் நிறுத்தப்பட்டுவிட்டது. தவிர்க்கமுடியாமல் பயிர் செய்தால், தடையை மீறி செய்யப்பட்ட விவசாயம் என்று கூறி அவை எரிக்கப்படுகின்றன. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா, ஆத்தியடி, மணற்காடு, பச்சையடிக்கல், கல்லடைப்பு, சுங்கான்குழி, வல்வெட்டுவான், சின்னத்தீவு, பாலத்தடி, மதிரடியச்சேனை ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. உள்ளூர்க் கடைகளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டுவிட்டது. காரணம் குறிப்பிட்ட அளவுதான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதிகப்படியான பொருட்கள் வாங்கினால், அவை மறைந்திருக்கும் கொரில்லாப் படையினருக்குச் செல்லும் என்று தவறாகக் கருதப்பட்டது. அதிகப்படியான பொருள்கள் தேவையென்றால் ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப், டெலோ இயக்க அலுவலகங்களில் அனுமதிச்சீட்டுப் பெற வேண்டும் என்ற நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அரசு நடக்கத் தவறினால் தனி அரசான ஈழப் பிரகடனத்தைச் செய்யப் போவதாக அறிவித்தார். அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், "அமைதிப் படையோடு, தமிழ் தேசிய ராணுவமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்' என்றும் கூறினார். விடுதலைப் புலிகள் மரபு ரீதியான தாக்குதலின்றி கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு உடனடியாக ஆயுதங்கள் தேவைப்பட்டன. இந்த ஆயுதத் தேவைக்காகவே அவர்கள் அமைதிப் படை இலக்குகளைத் தாக்கி அழித்து, ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். ஆயுதமின்றி புலிகள் மறைவிடங்களில் பதுங்கினார்கள். இந்த நிலையில் அதிரடிச் செய்தியாக விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மாத்தையாவினால் கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல் தமிழகத்தின் பாரம்பரியப் பத்திரிகையிலேயே முக்கியச் செய்தியாக வெளியாயிற்று. இந்தச் செய்தியை வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உறுதி செய்ததாகவும் அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது. லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஓய்வு பெற்றதும் அமைதிப் படையின் பொறுப்பை ஏற்ற அமர்ஜித் சிங் கல்கத் என்கிற ஏ.எஸ். கல்கத் ஓர் அரசியல்வாதியைப் போன்று அறிக்கைகள் விடுபவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இவருக்குச் சரியான இணையாக பார்த்தசாரதி என்கிற மக்கள் தொடர்பு அதிகாரி. இவர், சென்னை நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்தளித்துக் கொண்டே இருப்பார். இவ்வாறான சென்னைப் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், "கல்கத்- நீங்கள் இதுவரை சுட்டு வீழ்த்திய புலிகளின் எண்ணிக்கை பல ஆயிரம் வருகிறதே; புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக நீங்கள் கூறும் ஆயுதங்களைக் கணக்கிட்டால் அது சிங்களப் படையின் ஆயுதத்தைவிட அதிகம் இருக்கும் போலிருக்கிறதே' என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டதும், அவர் வாயடைத்துப் போனார். (பழ. நெடுமாறன் தனது நூலில்) அதேபோன்று "பிரபாகரனை வளைத்து விட்டோம் இனி தப்ப முடியாது' என்று பேட்டியளித்ததும், இந்தியப் பத்திரிகைகள் மட்டுமன்றி, உலகப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன. ஆனால், அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவே இல்லை. இப்பொழுதும் கூட பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தியும், கல்கத் பரப்பிய செய்தியாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளே அதிகம் இருந்தன. ஆனால், இவ்வகைப் பிரசாரத்தைப் புறக்கணித்துவிடவும் முடியாது என்று அப்போது கூறப்பட்டது. காரணம், இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் பிரபாகரன் தனக்கேயுரிய சாதுர்ய நடவடிக்கைகளால் தப்பியிருக்கலாம் என்பதும், வரலாற்றைக் கூர்ந்து நோக்குகிறவர்களின் கருத்தாக இருந்தது. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் கொலை, மாத்தையாவினால் பிரபாகரன் கொலையானதாக வந்த பத்திரிகைச் செய்தி- ஆகிய இம் மூன்றும் ஒரே மூளையில் உதித்தவையாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதுமான தேவை எவ்வாறு உணரப்பட்டது என்ற கேள்விக்கு "முறிந்தபனை' நூலின் 517 மற்றும் 518-ஆம் பக்கத்தில் விடை உள்ளது. அவை வருமாறு: ""கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் புலிகளே பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில் இவர்கள் நடத்திய யுத்தம் உலகின் நாலாவது பெரிய ராணுவமும் அதன் உள்ளூர் சகபாடிகளும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளும், ஈவிரக்கமற்ற படுகொலைகளும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கசப்பையும், வேதனையையும் பெருகிடச் செய்து, அதுவே ஆட்கள் தொடர்ந்து போய் புலிகளிடம் சேர்வதற்கான மூலாதாரமாகத் திகழ்ந்தது. புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் மக்கள் பிரமைகள் கலைந்தவர்களாய் இருந்தாலும் தமிழ் லட்சியத்தின் காவலர்களாகவே புலிகள் பெரிதும் இனங் காணப்பட்டிருந்தனர். இந்திய அமைதிப் படை குறித்து நடைமுறை சாத்தியமான சிறந்த நிலைப்பாட்டை புலிகள் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் கருதியிருந்ததோடு, ஒருங்கிணைந்த வட, கிழக்கு மாகாணங்களில் அமையவிருக்கும் மாகாண சபையிலும் புலிகளே தலைவர்களாக வருவதையும் கண்டு மகிழ மக்கள் விரும்பியிருந்தனர் என்று கூறுவதும் சரியானதேயாகும்'' என்று கூறுகிறது அந்த நூல். மேலும் அந்நூலில், "சமூகத்தின் ஒரு பகுதியினர் புலிகள் மீது நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பும் நல்கிக் கொண்டிருந்தனர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புலிகளின் தலைவர் இறந்ததாக வந்த பத்திரிகைச் செய்தி, மக்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக