சென்னையில் நேற்று (11.10.09) ஞாயிற்றுக்கிழமை "தமிழினப் பாதுகாப்பு மாநாடு"
முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நேற்று (11.10.09) ஞாயிற்றுக்கிழமை "தமிழினப் பாதுகாப்பு மாநாடு" நடந்தது. மாநாட்டையொட்டி, பேரணியும் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் ஈழ விடுதலைக்காக ஒன்றிணைந்து ஏற்படுத்திய ”தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற அமைப்பின் முன் முயற்சியில், குறித்த மாநாடு ஏற்பாடாகியது.
காஞ்சி மக்கள் மன்றத்தினரின் கலைக் குழு பறையாட்டம் அடித்து முன் செல்ல, தலைவர்கள் பின்னால் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், தமிழகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பேருந்துகளில் வந்திருந்தனர்.
”முள்வேலி முகாமில் சிறைபட்ட தமிழர்களை விடுதலை செய்!”, ”தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை நீக்கு!”, ”கச்சத்தீவை மீட்போம்!”, ”எழுந்தது பார் தமிழ்த் தேசியம்! விழுந்தது பார் இந்தியத் தேசியம்” என்பது போன்ற பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஊர்வலம் நகர்ந்தது.
மாலையில், தமிழினப் பாதுகாப்பு மாநாடு பொதுக் கூட்டம் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய புலவர் புலமைப்பித்தன்,
”இலங்கைக்கு எம்.பி.க்கள் உல்லாசப் பயணமாகத் தான் சென்றுள்ளனர்” என குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுக் குழு செயலாளர் மருத்துவர் வைத்திலிங்கம் பேசும் போது,
”காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரே கொள்கை தான். தனித்தமிழ் ஈழம் அமையக் கூடாது என்பதே அது” என்று அம்பலப்படுத்தி பேசினார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசுகையில்,
”ஈழத்தமிழர்களுக்கும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் சரி முதல் எதிரி இந்திய அரசு தான். ஈழத்தமிழர்கள் இன்று கொடுமைக்குள்ளாகியிருப்பது இந்திய அரசால் தான்.
தமிழ்நாடு தமிழ்த் தேசக் குடியரசாக மலர வேண்டும். அப்பொழுது தான் ஈழத்தமிழர்க்கும் நாம் துணை நிற்க முடியும். தமிழ்நாட்டு உரிமைகளையும் நாம் பாதுகாக்க முடியும்” என்று தெரிவித்தார்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி பேசுகையில்,
”ஈழத்தமிழர்கள் போராடுவார்கள். அவர்களுக்கு எவ்வகையிலும் உதவ முடியாத தமிழ்நாட்டு தமிழர்கள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது
ஈழத்தமிழர் போராட்டத்தை பார்த்து கனவு காண்பது மட்டுமே நமது வேலையாகிவிடக் கூடாது. தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு பேசும் போது,
”அக்டோபர் 28 அன்று மாநிலந்தழுவிய அளவில் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து ”முள்வேலித் தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
முள்வேலித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்,
சிங்கள அரசை பெளத்த இனவெறி அரசாக ஐ.நா. பிரகடனப்படுத்த வேண்டும்,
சிங்கள அரசின் பொருட்களை புறக்கணிப்பது,
தமிழ்த் திரைத் துறையினர் சிங்கள அரசுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது,
கச்சத்தீவை மீட்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக போராடிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 797
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக