சென்னை, அக். 16: தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை உருவாக்க அதிமுகவினர் பாடுபட வேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கட்சியின் 38-வது ஆண்டு தொடக்கம் சனிக்கிழமை (அக்.17) வருவதை ஒட்டி வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்தார். 1977 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். 1980-ல் ஆட்சி கலைக்கப்பட்ட போதிலும் மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஏழைக் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் சத்துணவு திட்டத்தை அமல் செய்தவர் எம்.ஜி.ஆர். 1984-ல் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சைபெற்ற நேரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் பொதுத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆரால் பிரசாரத்துக்கு வர முடியாத நிலையில், தமக்கு வாக்களித்தால் எம்.ஜி.ஆர். திரும்பி வரும்போது ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பதாக கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உயர்ந்திருந்தது. எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு வர முடியாத நிலையில் தமிழகம் முழுக்க நான் (ஜெயலலிதா) சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தேன். முன்பு நடந்த தேர்தல்களில் கிடைத்ததைவிட அதிக இடங்களில் அதிமுக அப்போது வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்கவும், எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் முயற்சி நடந்தது. அதை முறியடித்து, பிரிந்துபோன கட்சியை ஒன்று சேர்த்து 1991-ல் அதிமுக வென்று என் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது திமுக சார்பில் கருணாநிதி மட்டும்தான் வெற்றி பெற்றார். உண்மையில் அவர் தோல்வி அடைந்தார் என்றும், திமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனால் அவமானமாகிவிடும் என்று கூறி, அதிகாரிகளை வற்புறுத்தி நிர்பந்தத்தின் பேரில்தான் கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் அப்போதே பரவலாக அரசல் புரசலாகப் பேசப்பட்டது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவர் ராஜிநாமா செய்துவிட்டார். 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்றேன். ஒரு வழக்கு அவரது அரசாலேயே திரும்பப் பெறப்பட்டது. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி, மக்கள் ஆதரவுடன் 2001-ல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றேன். எனது 10 ஆண்டு கால ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. 2006 தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சியில் தமிழகம் அழிவுப் பாதையில் வேகமாகச் செல்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் நலப் பணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இயக்கம் அ.தி.மு.க. தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத இந்த ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நரகாசுரன் என்ற அரக்கன் வதம் செய்யப்பட்ட நாள் தீபாவளித் திருநாள். இந்த ஆண்டு தீபாவளித் திருநாளும், அதிமுக தொடங்கிய நாளும் ஒரே நாளில் வருவதால், இரண்டையும் ஒன்றாகக் கொண்டாடும் நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்றார்.
கருத்துக்கள்
தமிழ் ஈழ மக்களுக்காக உண்மையான குரல் கொடுக்காதவரை தமிழர் தாயகம் அமைவதற்கான போராட்டத்தை நடத்த உறுதுணையாய் இருந்து வெற்றி காணாத வரை பொன்மனச் செம்மலின் பெயரைச் சொல்லி ஏமாற்றாமல் இருப்பதே சாலச் சிறந்தது. அரசியல் வாதிகள் தங்களுடைய ஆட்சியை அமைப்பதாகக் கூறாமல் இறந்தவர்களின் பெயரால் ஆட்சி அமைப்பதாகக் கூறுகின்றார்களே! பேசாமல் மேலுலகம் சென்று ஆட்சி அமைக்க வேண்டியதுதானே! தன்னம்பிக்கையின்றிப் பிறர் பெயரால் ஆட்சி அமைப்பதாகக் கூறும் எல்லா அரசியல்வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:21:00 AM
10/17/2009 3:21:00 AM