திங்கள், 12 அக்டோபர், 2009

தலையங்கம்: கையூட்டு உயர கட்டணம் உயரும்!



எந்தவொரு வியாபாரியும், தன் தொழில்சார்ந்து யாருக்காவது கையூட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால், அந்தத் தொகையை அவர் தனது கொள்ளை லாபத்தில் கழித்துக் கொள்ள மாட்டார். மாறாக, தனது உற்பத்திப் பொருள்மீதுதான் விலையை ஏற்றி விற்பார். கல்விக் கட்டணங்களிலும் இதேதான் நிலைமை.பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்து, தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்த பெற்றோர்கள் அனைவருமே, "ஒரு லட்சம் ஆயிடுச்சுங்க' என்று விழிபிதுங்குகிறார்கள். அப்படியானால் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்குக் கல்விக்கட்டணம் ரூ. 40,000 என்று நிர்ணயிப்பது ஏன்? அரசுப் பொறியியல் கல்லூரியில் என்ன கட்டணமோ அதே கட்டணம்தானே அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுதானே நியாயம்? தேர்வுக் கட்டணம்கூட கல்லூரிக்குக் கல்லூரி மாறுவது ஏன்? இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? இக் கேள்விகளுக்கு ஒரே பதில், கல்வியில் ஊழல் என்பதுதான்.உயர்கல்விக்கான யஷ்பால் கமிட்டி அறிக்கை மற்றும் தேசிய அறிவுக் குழுமத்தின் பரிந்துரைகளை விவாதிப்பதற்காக இந்திய தொழில்துறை சம்மேளனம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதில் முக்கியமான கல்வியாளர்கள் பலர் பங்குகொண்டனர். இதில் பங்குகொண்டு பேசிய முன்னாள் துணைவேந்தரும், யஷ்பால் கமிட்டி உறுப்பினருமான மு. ஆனந்தகிருஷ்ணன், "இப்போதெல்லாம் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடி வரை பணம் கொடுத்தால் துணைவேந்தர் பதவியை வாங்கிவிடலாம்' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.இந்தக் கசப்பான உண்மை இவர் சொன்னதால் மட்டும் தெரியவந்ததல்ல. சில துணைவேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளும், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களுமே இத்தகைய முறைகேட்டுக்குச் சாட்சிகள். அண்ணா பல்கலைக்கழகத்தை நான்காகப் பிரித்து, நான்கு துணைவேந்தர்கள் நியமித்ததை மாணவர்கள் நலனுக்காக என்று கருதிய நம் நம்பிக்கைகள் தகர்ந்துபோன அன்றைய தினமே தெரியவந்தவைதாம்.ஆனால், இந்த அளவுக்கு மோசமான நிலைமையின் காரணமாக கல்விக் கட்டணம் தாறுமாறாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் வாளாவிருக்கிறார்கள். ""வட்டியில்லாமல் கல்விக் கடன் கிடைக்கிறதே, வாங்கிக் கட்டுங்கள்'' என்று இலவச அறிவுரையும் தருகிறார்கள்.தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அடிபட்டுவிட்டது என்றும், கல்வித் துறை சார்ந்த மாநில அரசு அதிகாரிகள் முதல் மத்திய அரசு வரை கல்விக்கட்டணம் மற்றும் நன்கொடைகளில் பங்கு போய்க் கொண்டு இருக்கிறது என்றும் இந்தக் கூட்டத்தில் பேசிய கல்வியாளர்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இந்த அளவுக்கு வெளிப்படையாகப் பேச முன்வந்த அவர்களைப் பாராட்ட வேண்டும்.பணத்தைக் கோடி கோடியாகக் கொடுத்து துணைவேந்தர் பதவியை வாங்கியவர், "வாங்காமல்' எப்படிச் செயல்படுவார்? கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கும் குறைந்தது "கால்கோடி பணம்' வேண்டும் என்று கல்வித் தரகர் சொல்லக் கேட்டு ஆடிப்போய் விட்டது ஓர் ஆன்மிக அமைப்பு. தொழிற்கல்வி என்பது மட்டுமல்ல, வெறும் கலைப் படிப்பு என்றாலும் கல்விக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி, பெற்றோரைக் கசக்கிப் பிழியும் நிர்பந்தத்தை உருவாக்குகிறது கல்வி ஊழல்.இதன் விளைவுகள் என்னவாகும்? இக்கூட்டத்தில் பேசிய மு. ஆனந்தகிருஷ்ணன், ""மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகளை உருவாக்க விரும்பினால், அதை விரைவாகச் செய்து முடிக்க ஒரே வழி கல்விக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்துவதும், கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அனுமதி அளிப்பதும்தான்'' என்றும் கூறியுள்ளார்.கட்டுப்பாடற்ற அதிக கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு தேசிய வங்கிகளில் கல்விக் கடன் அளித்து, வட்டியை ஏற்க முன்வருகிறது அரசு. மாவோயிஸ்டுகளை ஒடுக்க ரூ.7,300 கோடி செலவிட அரசு தயாராகிறது. ஆனால், கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தினால் மேற்சொன்ன கருவூலச் செலவுகளுக்கு அவசியமே இருக்காதே என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறது.அரசியல்வாதிகள் சம்பாதிப்பதைப்போலவே அறிவாளிகளும் தீயவழியில் சம்பாதிக்க நினைப்பது முறையல்ல என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இந்த "அறிவாளி' சம்பாதிக்கக்கூடிய "வழி'களில் அரசியல்வாதி தானே வழிமறித்து நிற்கிறார் என்பதுதான், பணத்தைக் கோடிகோடியாய் கொட்டிவிட்டு, அசலைப் புரட்ட முடியாமல் திணறும் அறிவாளிகளின் அங்கலாய்ப்பு."படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்' என்கிறான் பாரதியின் புதிய கோணங்கி!

கருத்துக்கள்

என் நண்பர் ஒருவர் 20க்கு மேற்பட்ட முதுகலைப் பட்டங்களும் பல முனைவர் பட்டங்களும் பெற்றவர். கடந்த சில திங்களுக்கு முன்னர் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார். இது குறித்த அவர் முயற்சி பற்றிக் கேட்டேன். 20 கோடி உரூபாய் கேட்பதாகவும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாகவும் கூறனார். ஏதோ ஆற்றாமையால் மிகைபடக் கூறுகிறார் என எண்ணினேன். ஆனால் திரு அனந்தகிருட்டிணன் கூறிய பின் தான் உண்மையைக் கூறயுள்ளார் என உணர்ந்தேன். இத்தகைய இழிநிலை குறித்துச் சரியாகவே தினமணி தலைமையுரை அமைந்துள்ளது. ஆனால் புரையோடிப் போன புற்று நோயை விரைவில் நம்மால் ஒழிக்க இயலுமா எனத் தெரியவில்லை. இன்றைய கட்சிகளைத் தடை செய்து ஏற்கெனவே பதவி வகிததவர்கள், அவர்களின் குடும்பத்தினர் 50 ஆண்டுக்காலம் தேர்தலில் நிற்கவும் அரசு பதவிகள் பெறவும் தடை விதித்தால் பயன் விளையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2009 3:47:00 AM

FDUCATION AND LEARNING IN THE MODERN PERSPECTIVE TURNED THE COSTLIEST MERCHANDISE TOSSED UP BY UNETHICAL EDUCTIONISTS AND POWER MONGERING POLITICIANS TURNED EDUCATION SELLERS/FOUNDERS OF MAJORITY ENGINEERING/MEDICAL COLLEGES/UNITARY UNIVERSITIES.UNLESS THE SOCALLED PERSONS REALISE THE REALITY OF TRUE EDUCATION,THE PREVALENT PRACTICES OF LOOTING CAN NOT BE STOPPED/NULLED ,EVEN BY THE ALMIGHTY YOUR EDITORIAL IS SUPERB&LAUDABLE.WHO WILL BELL THE CAT????????????? PRAYING FOR PROSPERITY BY THE YEARNING HUMANITY.

By VALADI LAKSHMINARAYANAN SETHURAMAN
10/12/2009 3:32:00 AM

நன்கு படித்தவர்கள் நியாயவன்களாகவும் நேர்மையுடன் நடப்பார்கள் என்று நமது சமூகம் இது வரை நினைத்து கொண்டிருந்தது - வேந்தர்கள் கைது செய்யும் வரை இப்போது அப்படி நினைக்க முடியாது. எந்த ஒரு சமூகம் அறிவில் முதன்மையாக இருக்கிறதோ அந்த சமூகமும் அந்நாடும் அனைத்திலும் முதன்மையாக இருக்கும் என்பது அனைவரும் குறிப்பாக அரசு இயந்திரம் அறிந்த உண்மை. இருப்பினும் சமூகத்தை முன்னேற விடாமல் தடுப்பது அரசியல். காரணம் மக்கள் விழிப்படைந்து விட்டால் அரசியல் செய்ய முடியாது என்ற சாகடைத்தனமான சிந்தனை. எனவே இதையெல்லாம் மீறி மக்கள் சமூக விழிப்புணர்வுடன் பல தடைகளையும் மீறி கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். (முகமது சாதிக் - பாலை அத்திக்கடை)

By mohamed sadiq
10/12/2009 3:12:00 AM

தலையங்கத்தின் "கையூட்டு உயர கட்டணம் உயரும" மையக்கருத்து மிகவும் ஆழமான சிந்தனையை தூண்டக்கூடியது. பத்து வருடத்திற்கு முன் இல்லாத பல நவீன கல்வி பிரிவு இப்போது கிடைக்கின்றது என்றாலும், அடிப்படை கல்வி பிரிவின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கு... இதற்கு கல்வித்துறையில் அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையே காரணம். அதிக கல்விக்கட்டணம் செலுத்தி கல்வி பெறமுடியாதவர்கள் சமுதாயத்தில் தீயவர்களாக மாற அதிக வாய்ப்புள்ளது என்பது மறுக்கவோ,மறைக்கவோ முடியாத பக்கா உண்மை. இதற்கு ஒரே தீர்வு கல்வித்துறையில் முழு சீர்திருத்தம் மேற்க்கொள்வதன் மூலம் அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து கல்வித்துறையையும், கல்வி நிறுவனங்களையும் விடுவிப்பது, ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் நாடு முழுவதும் ஒரே சீரான கட்டணத்தை அரசே நிர்னைப்பது, இதையும் மீறி அதிக பணம் வசூலிக்கும் கல்வி(கடை) முதலாளிகள்(முதளைகள்) மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது.,,, நடக்குமாஅஅஅ??? Farook/KSA

By Farook,KSA
10/12/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக