திங்கள், 12 அக்டோபர், 2009

இந்திய எ.பிக்களை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கேள்வி

11 October, 2009 by admin

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம், ராஜீவ் காந்தி படுகொலையைக் காரணமாக வைத்து, இன்னும் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட போகிறார்கள்ர் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திணறினாராம்.

முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய இந்த இந்திய நாடாளுமன்றக் குழுவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைத்து வந்திருந்தார். அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உட்பட்டோர் வரவேற்றனர்.

பின்னர் தந்தை செல்வாவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவர்கள், யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கூடியிருந்தோருக்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் உட்பட்டோர், வடக்கில் அபிவிருத்திகளை காட்டிலும் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதே உண்மையான அபிவிருத்தியாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அங்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர், மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவே கருத்துக்களை முன்வைத்தனர். மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் தெரிவித்த போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கி வந்த டி ஆர் பாலு வேறு எந்தப் பிரச்சினைகளும் இருக்கின்றனவா? என்ற கேள்வியை கேட்டு தமக்கான கேள்வியில் இருந்து நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வரின மகள் கனிமொழி, இதன் போது கருத்துக்களை முன்வைப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்தபோதும் அவர், இங்குள்ள பிரச்சினைகளை தாம் தமிழக அரசாங்கத்தின் கவனத்திற்கும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக குறிப்பிட்ட அளவில் தமது கருத்துக்களை நிறுத்திக்கொண்டார்.

இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமும், யாழ்ப்பாண மீனவர் சங்கமும் பல கேள்விகளை தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 508

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக