ஞாயிறு, 11 அக்டோபர், 2009

எம்.பி.க்கள் குழுவின் நோக்கம் என்ன?: டி.ராஜா கேள்வி



புது தில்லி, அக். 10: இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பியதன் நோக்கம் என்ன என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைக்கு சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவை அமைக்கும் முன்னதாக அனைத்து கட்சிகளையும் ஆலோசிக்கவில்லை. திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளன. இதனால் இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவை ஒரு பிரதிநிதிக் குழுவாகக் கருத முடியாது. அதை திமுக-காங்கிரஸ் குழுவாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் டி.ராஜா தெரிவித்தார். இலங்கையில் போர் முடிந்த உடனேயே ஈழத்தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார். ஆனால் அவர் சொல்லியபடி வாக்கைக் காப்பாற்றவில்லை. போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஈழத்தமிழர்களை குடியமர்த்த நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அங்குள்ள முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதிகூட இல்லாமலும், வாய்பேச முடியாத ஊமைகளாக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கை அரசுக்கோ ஈழத்தமிழர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை. போர்க்குணத்துடனையே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்புவதன் நோக்கம் புரியவில்லை என்றும் டி.ராஜா கூறினார்.

கருத்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------
3 இலட்சம் தமிழர்கள் இருப்பதாகச் சொன்ன சிங்கள அரசு இப்பொழுது இரண்டரை இலட்சம் என்கிறது;அதே நேரம் 50,000 பேர் காணவில்லை என்கின்றது. இதிலிருந்தே 50,000 தமிழர்களை வஞ்சகத்தால் சாகடித்துள்ளது தெரிகின்றது. இப்படியே முகாம்களில் உள்ள தமிழர்களைக் கொன்றொழித்து விட்டு இறுதியில் சில ஆயிரம் தமிழர்களை மட்டும் முகாமகளில் இருந்து வெளியேற்றி விட்டு அனைவரையும் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகக் கணக்கு காட்ட சிங்கள அரசும் காங்.அரசும் திட்ட மிடுகின்றன.இதற்கிடையில் தமிழக முகாம்களை விட அந்த முகாம்கள் நன்றாக உள்ளதாகக் கூறிய சிங்களக் கைக்கூலி போன்று இவர்களும் ஏதும் பாராட்டுரை வழங்கத் திட்டமிட்டு அனுப்பப்பட்டிருப்பர். கொலைகார அணியின் அண்டப் புளுகு திட்டத்தில் எப்படி எதிர்க்கட்சிகளைச் சேர்க்க இயலும்? 6 மாதங்களுக்குள் சொந்த இடங்களுக்கு அனுப்புவதாகக் கடந்த 5 மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருப்பது குறித்து இவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? எனவே, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அணியில் எதிர்க்கட்சிகளைச் சேர்க்க வில்லை.
--- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக