திங்கள், 12 அக்டோபர், 2009

இலங்கையுடன் நட்புறவு தொடர வேண்டும்: யாழ்ப்பாண தமிழர்களிடையே டி.ஆர்.பாலு பேச்சு



யாழ்ப்பாணத்தில் தமிழக எம்.பி.க்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
கொழும்பு, அக். 11: இந்தியா -இலங்கை இடையிலான நட்புறவு தொடர வேண்டும் என்று திமுக மூத்த உறுப்பினர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டி.ஆர்.பாலு தலைமையில் சனிக்கிழமை இலங்கை சென்றது. இக்குழுவினர் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை ஞாயிற்றுக்கிழமை பார்வையிடும் முன், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.சீரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டி.ஆர். பாலு பேசியதாவது:இலங்கை நட்பு நாடு. அந்த நாட்டுடன் உறவு தொடர வேண்டும். ஒருவருக்கு இரு கண்கள் இருப்பது அவசியம். அவற்றில் ஒன்று பழுதுபட்டாலும், ஒட்டுமொத்த பார்வைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அதுபோன்று இந்தியா -இலங்கை உறவு பாதிப்பு ஏற்படாமல் தொடர வேண்டும்.தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். இலங்கைத் தமிழர்களும், இலங்கை அரசும் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். தமிழர்களும் சிங்களர்களும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்தால் பிரச்னைக்கு அமைதியான தீர்வை காணமுடியும்.இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே திமுக மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பம். இதை இலங்கை அரசு கடைப்பிடிக்க நிர்பந்தப்படுத்துமாறு மத்திய அரசை அவர் ஏற்கெனவே பலமுறை வற்புறுத்தியுள்ளார் என்றார்.பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்கள் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக எம்.பி.க்கள் நேரில் பார்வையிட உள்ளனர். நீதி மற்றும் சம உரிமை கோரி போராடிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எம்.பி.க்கள் முழு ஆதரவு அளிப்பர்.போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது வசிப்பிடங்களில் விரைவில் குடியமர்த்த வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையை மாற்றி ஜனநாயக சூழ்நிலைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து, இந்திய அரசின் பார்வைக்கு நாங்கள் கொண்டு செல்வோம். மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதை விரைவில் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.முன்னதாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் இந்திய தூதர் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் பலாலி ராணுவ விமானதளத்தில் வந்திறங்கினர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றனர். வரவேற்புக் கூட்டத்துக்குப் பிறகு வெள்ளணையில் உள்ள தமிழர்கள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.தமிழர்கள் வசிக்கும் முகாம்களில் வெள்ளணை முகாம் மட்டுமே சுகாதார வசதிகளுடன் அமைக்கப்பட்ட முகாம் ஆகும். தமிழர்களின் உண்மை நிலையை அறியவேண்டுமானால் தென்மராச்சியில் உள்ள சாவகச்சேரி முகாமை எம்.பி.க்கள் குழு பார்வையிட வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துக்கள்

உலக நாடுகள் கண்டிப்பிற்கு உள்ளாகும் - உலக மனிதநேய ஆர்வலர்களாலும் தொண்டு அமைப்பினராலும் ஆன்றோர்களாலும் சட்ட வல்லுநர்களாலும் கண்டிப்பிற்கு உள்ளாகும் - சிங்கள அரசை இந்திய அரசின் அடியொற்றி நட்பு நாடாகக் கூறுவதில் இருந்தே குழுவின் தீய நோக்கம் புரிகின்றது. குழுவினர் ஒரு பத்து நாட்களேனும் வதைமுகாமகளில் வைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையைப் பேசுவார்கள். இல்லையேல் பதவி சுகம் தருபவர்களை அண்டித்தான் பேச்சும் செயலும் அமையும் கொலைகாரர்களைக் கண்டித்துத் திருததாமல் உற்றார் உறவினர் உடைமை உரிமை இழந்து இன்னலுறுவோரிடம்அறிவுரை கூறவதில் இருந்தே எத்தகைய அறிவாளிகள் இவர்கள் என்பதுஉலகிற்குப் புரிகின்றது. இராசபக்சே! இக்குழுவினரை 10 நாட்கள்வதைமுகாம்களில் அடைத்துவைத்தால் உம் குற்றங்களை மன்னித்துவிடுகின்றோம்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2009 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக