சென்னை, அக். 14: ""இலங்கை சென்று திரும்பியுள்ள திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை'' என்று பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார். இது குறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கைத் தமிழர் பிரச்னை திமுக, காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. அது ஒரு தேசிய பிரச்னை. இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன. ஆனால் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருப்பது சரியான நடவடிக்கை அல்ல. தமிழகத்தில் உள்ள பாஜக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்புவேன். நாடாளுமன்ற குழு என்றால் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் அதில் இடம்பெற வேண்டும். அதுதான் ஜனநாயக நடைமுறையாகும். திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அங்கு இதுவரை எந்தவித மறுவாழ்வு பணிகளும் தொடங்கப்படவில்லை. போர் முடிந்து 180 நாள்களுக்குப் பிறகுதான் மறுவாழ்வு பணிகள் பற்றி இலங்கை அதிபர் ராஜபட்ச பேசத் தொடங்கியுள்ளார். சுமார் 3 லட்சம் தமிழர்கள் சுகாதாரமற்ற அகதி முகாம்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவால் விடிவுகாலம் பிறக்கப்போவதில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்தக் குழு அனுப்பப்பட்டுள்ளது என்றார் வெங்கைய நாயுடு.
கருத்துக்கள்
உண்மைதான். ஆனால், இவர்கள் தமிழர் நலனுக்காகச் சென்றதாக உங்களை யார் தவறாகக் கருதச் சொன்னது? உலகநாடுகளிடம் நிதி வேண்டுவதற்காக- சிங்கள இதழ்கள் சொல்வதன்படித் தமிழர்களைக்காட்டிப் பிச்சை கேட்க- உள்ள தடையைப் போக்குவதற்காகச் சிங்களமும் இந்தியமும் போடும் நாடகத்திற்குத் திமுக ஒத்துழைத்திருக்கிறது. என் செய்வது மத்திய அமைச்சர் பதவியைப் பிச்சையாகத்தர வேண்டியது காங்கிரசுதானே! பதவிநலம் (சுகம்) வேண்டும் என்னும் பொழுது அவர்கள் ஆட்டத்திற்கு ஆடத்தானே செய்ய வேண்டும்.3 இலட்சம் தமிழர்கள் 2 1/2 இலட்சம் ஆனது குறித்துக் கேள்வி கூடக் கேட்க உரிமையற்ற போலிக் குழு விடம் நன்மையை எதிர்பார்ப்பவர்கள் அப்பாவிகளே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
10/15/2009 3:36:00 AM