Last Updated :
பெய்ஜிங், அக். 13: பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப்பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்தது. இதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது.அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி. இந்தியாவின் பகுதிக்கு இந்தியப் பிரதமர் செல்வதை யாரும் ஆட்சேபிக்க முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்றது. முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 3-ம் தேதி அருணாசலப் பிரதேசம் சென்றார்.ஆனால் இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. எங்களின் ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளுமாறு இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரச்னைக்குரிய பகுதியில் இதுபோன்ற செயலால் மேலும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளார். அவரது அறிக்கை சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. சீன - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதியில் சீனாவின் நிலை மிகவும் தெளிவானது, உறுதியானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சீனத் தூதர்: தில்லியில் உள்ள சீனத் தூதர் ஷயாங் யான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்குச் சென்று அங்கு இணைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேசினார்.சீனாவின் ஆட்சேபம் தொடர்பாக இந்தியத் தரப்பில் அவரிடம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.எல்லைப் பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ. தமக்கு சொந்தமான பகுதி. அதை இந்தியா ஆக்கிரமிப்புச் செய்துள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் சீனா கோரும் பகுதி எங்களுக்குச் சொந்தமானது என்று இந்தியா கூறி வருகிறது.இதனால் அருணாசலப் பிரதேசத்தில் எல்லைக் கோடு இன்னும் தீர்மானிக்கப்படாமலேயே உள்ளது.அருணாசலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி அளிப்பதாக இருந்தது. ஆனால் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அருணாசலப் பிரதேசத்துக்கு கடனுதவி மறுக்கப்பட்டது.ஏற்கெனவே இதுபோன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றார். இந்தியாவில் சூரியன் உதிக்கும் பூமி என்று அருணாசலப் பிரதேசத்தை வர்ணித்தார். அப்போதும் சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா நிராகரித்துவிட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீனா சட்டவிரோதமாக 43,180 சதுர கிலோ மீட்டரை ஆக்கிரமித்துக் கொண்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோல் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இந்தியா பிடித்து வைத்துக் கொண்டதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.பேச்சுக்கு தடையாக இருக்கக் கூடாது: அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு இந்தியப் பிரதமர் செல்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனவே சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடையே இருதரப்பு பேச்சுக்கு எந்த வகையிலும் உதவாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த தடையாக இருக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சீனாவும் இந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் பிரதமர் பிரசாரத்துக்குச் செல்வது வழக்கம். இதை சீனா ஆட்சேபிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.பாஜக கருத்துபிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றது தொடர்பாக சீனா ஆட்சேபம் தெரிவித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது இந்திய இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இதை ராஜீய முறையில் அணுகி சீனாவுக்கு இந்தியாவின் எதிர்ப்பை கடுமையாகத் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.அண்மைக்காலமாக சீனா இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுப்பது அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையில் இந்திய அரசு உறுதியான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2009 3:44:00 AM
By hi
10/14/2009 3:23:00 AM
By தமிழன்
10/14/2009 2:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*