சனி, 17 அக்டோபர், 2009

Front page news and headlines today

தமிழக மரபுக் கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் ஒருங்கே இணைந்தது இக்கலை. கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்ட கிராம கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்து கலைஞர்கள் கூத்து நடத்த ஊரில் தங்கும்போது மக்களே உணவு வழங்குவர்.



தெருக்கூத்தில் கட்டை கட்டி ஆடுவது சிறப்பு. இதை "கட்டைக்கூத்து' என்பர். சில இடங்களில் கட்டை இல்லாமல் மேடை நாடகங்களில் அணியும் "ஜிகினா' ஆடை அணிந்து ஆடும் வழக்கம் உண்டு. கட்டை கட்டி ஆடுவோர் தோள்களில் பெரிய புஜக்கட்டைகள், கிரீடம், குச்சிப்புடி, மரத்தாலான மார்புப்பட்டை, கன்னக்கதுப்பு அணிந்திருப்பர். ஒவ்வொரு வேடத்திற்கு ஏற்ப அரிதாரத்தின் நிறம் வேறுபடும். காளி, சூரன், அரக்கன் வேடத்திற்கு முத்து வெள்ளையுடன் செந்தூரத்தை எண்ணெயில் குழைத்துப் பூசுவர். துரியோதனனுக்கு சிவப்பு, துச்சாதனனுக்கு மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு, பீமனுக்கு மேகவண்ணம், கிருஷ்ணனுக்கு பச்சை, திரவுபதிக்கு இளஞ்சிவப்பு, அர்ச்சுனனுக்கு நீலம், புருவங்களுக்கு மை தீட்டுவர். மீசை பெரிதாக வைத்துக் கட்டப்படும். கூத்து வேடம் கட்டிய கலைஞர் மேடையில் தோன்றும் முன் திரைக்குப் பின்னிருந்து, தாம் ஏற்கப்போகும் பாத்திரத்தைப் பற்றி கூறுவார். பின் திரையை விலக்கி பார்வையாளர் முன் தோன்றுவர். டோலக் அல்லது மிருதங்கம், ஜால்ரா, ஆர்மோனியம், புல்லாங்குழல் கொண்டு இசைப்பவர்கள் மேடையில் தோன்றும் கலைஞர்கள் பாடும் பாட்டுக்கேற்ப உரத்துப் பின்பாட்டுப்பாடுவர்.



முதலில் அரங்கில் நுழைபவர் கட்டியங்காரன் அல்லது பபூன். இவர் கூத்தை துவக்கி காட்சிகளை விளக்கி, கதையை தெளிவுபடுத்துவார். மகாபாரதம், ராமாயாணம், கோவலன், வீரபாண்டிய கட்டபொம்மன், நளாயினி கதைகள், வள்ளி திருமணம் நாடகம், வன்னியூர் புராணம், திரவுபதி கல்யாணம், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, அபிமன்னன் சண்டை, கர்ண மோட்சம் தெருக்கூத்திற்கு அடிப்படைக் கதைகளாக அமைகிறது. தற்கால கலை வடிவங்களின் உருவாக்கத்திற்கு தெருக்கூத்து அடிப்படையாக உள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் தெருக்கூத்து முறைகளை பின்பற்றியே நாடக வடிவை உருவாக்கினார். சினிமா, "டிவி'க்களின் தாக்கத்தால் அரிதாகிவரும் கிராமிய கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று. சில சினிமாக்களில் மட்டுமே இக்கூத்தை கண்டு அதுவா? இது? எனக் கேட்கும் அளவிற்கு உள்ளது. தெருக்கூத்து கலைஞர்கள் மாற்றுத் தொழிலை நாடிச் செல்கின்றனர். அரசு, பள்ளி, கல்லூரி விழாக்களில் இத்தகைய அரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நமது பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக