செஞ்சி : செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் இரண்டு அடுக்கு ரகசிய நிலவறை இருப்பது தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் உள்ளே ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் மிகப்பெரிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவது சந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள வெங்கட்ரமணர் கோவில்.
சிறந்த கட்டடங்களையும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்த இக்கோவிலை கி.பி., 1540 முதல் 1550 வரை செஞ்சியை ஆட்சி செய்த முத்தையாலு நாயக்கர் கட்டியுள்ளார். பெரிய அளவிலான விழாக்களும், பூஜைகளும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது கோவிலின் பெரும் பகுதி சேதமாக்கப்பட்டது. இதில் இருந்த விலை உயர்ந்த பஞ்சலோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கற்சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. மூலவர் உட்பட சன்னதிகளில் இருந்த சிலைகள், போரின் போது அகற்றப்பட்டதால் வழிபாடு நின்றது. முஸ்லிம்களின் ஆட்சிக்கு பின், மீண்டும் இந்து மன்னர்களின் ஆட்சி ஏற்படாமல் பிரெஞ்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் செஞ்சிக்கோட்டை இருந் தது.
தற்போது, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வெங்கட்ரமணர் கோவில் உள்ளது. இத்துறையினர், இக்கோவிலின் இடிந்த பகுதிகளை சீரமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த கோவிலின் ராஜகோபுரத்தை அடுத்துள்ள இரண்டாவது கோபுரத்தை ஒட்டி வடக்கில் சிறிய சன்னதி உள்ளது. இதன் வடக்கு திசையில் சுவர்கள் இல்லாமல் அஸ்திவாரம் மட்டுமே தற்போது உள்ளது. இந்த அஸ்திவாரத்தை ஒட்டி பலகை கல் ஒன்று பெயர்ந்த நிலையில் காணப்பட்டது. இதன் உட்பகுதியில் ஆறு அடி அகலமும் எட்டு அடி நீளமும், ஐந்தடி அழமும் கொண்ட ரகசிய நிலவறை இருந்தது. இந்த நிலவறையில் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் நிறைந்து இருக்கும். கடந்த சில மாதங்களாக தண்ணீர் வற்றி வறண்ட நிலையில் இருந்தது. இதன் உள்ளே தென்மேற்கு பகுதியில் கட்டுமானத்தில் இருந்து கல் ஒன்று விலகி காணப்பட்டது.
இந்த இடம் மற்றொரு ரகசிய நிலவறைக்கு செல்லும் வழி என்பது இப்போது தெரிய வந்துள்ளது. மூன்று அடி 15 செ.மீ., நீளமும், ஒரு அடி 20 செமீ., உயரமும் உள்ள கல்லை, அறைவட்டத்தில் திருப்பும் வகையில் கல்லின் மேல் பகுதியில் இரும்பு விசை அமைத்துள்ளனர். தற்போது, விசையில் இருந்து கல் விலகி உள்ளது. இதன் உள்ளே கருங்கற்களை கொண்டு, 11 அடி நீளமும், ஒன்பது அடி அகலமும், நான்கடி ஒன்பது அங்குலம் உயரமும் உள்ள இரண்டாவது ரகசிய நிலவறையை அமைத்துள்ளனர். இந்த அறையின் தரையில் மூன்று அடி நீளமும், இரண்டடி 8 செ.மீ., அகலத்தில் ஒரு செங்கற்களால் கட்டப்பட்ட பெட்டகமும், 1.25 அடி சதுர அளவில் மற்றொரு பெட்டகமும் உள்ளன. இரண்டு பெட்டகங்களும் மூன்று அடிக்கும் கூடுதலான ஆழத்துடன் உள்ளன. இதை மூடி இருந்த பலகை கற்கள் அகற்றப்பட்டுள்ளன.
இது குறித்து "வரலாற்றில் செஞ்சிக்கோட்டை' என்ற நூலின் ஆசிரியர் மணி கூறுகையில், போர்க்காலத்தில் விலை உயர்ந்த விக்ரகங்கள், நவரத்தினங்கள், உற்சவருக்கான விலை மதிக்க முடியாத ஆபரணங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ரகசிய நிலவறைகளை அமைப்பது உண்டு. ஆனால், நிலவறைக்குள் மேலும் ஒரு நிலவறையும் அதன் உள்ளே பெட்டகங்களும் இருப்பது, மிகவும் அரிதான ஒன்று' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக