ஞாயிறு, 11 அக்டோபர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 132:
பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு!பொட்டு அம்மான், வைகோ, வே.பிரபாகரன் வன்னிக்காட்டில்.
திம்புப் பேச்சுவார்த்தையின்போது அனைத்து தமிழர் குழுக்களும் வலியுறுத்திய நான்கு அடிப்படை அம்சங்களுக்கு எதிரான செயலாக, ஈபிஆர்எல்எஃப் ஆட்சியில், இலங்கை சுதந்திர தினத்தன்று (4-2-1989) சிங்களக் கொடியை ஏற்றிய செயல் தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதே திருகோணமலையில் இலங்கை சுதந்திர தினத்தன்று, இலங்கை தேசியக் கொடியான சிங்கக்கொடியை இறக்க முயன்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமலை நடராஜன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததுண்டு. இதே திருகோணமலையில்தான் 8-8-1988 அன்று புலிக்கொடியை ஏற்ற முயன்ற தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழ்மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை.கோபால்சாமி ரகசியமாக இலங்கை சென்றார். தான் வன்னிப்பகுதிக்குச் சென்றபிறகு கட்சித் தலைமையிடம் தெரிவிக்கச் சொல்லி நண்பர் ஒருவரிடம் கடிதம் ஒன்றையும் அவர் கொடுத்துச் சென்றிருந்தார். இந்தத் தகவல் பத்திரிகை மூலம் வெளியானதால், வை.கோபால்சாமியின் நடமாட்டம் அமைதிப் படையால் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் முகாம்களில் 24 நாள்கள் தங்கினார். பிப்ரவரி 15-ஆம் நாள், அவர் பிரபாகரனைச் சந்தித்தார். இந்த நாள்களைத் தனது வாழ்க்கையின் பொன்னான நாட்கள் என்று பின்னர் வை.கோபால்சாமி குறிப்பிட்டார். அவர் இலங்கைக்கு எவ்வாறு ரகசியமாகச் சென்றாரோ, அதேபோன்று ரகசியமாக அவர் இந்தியா திரும்பி, தனது பயணம் குறித்து விளக்குவதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது வை.கோபால்சாமி விசா இல்லாமல் இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு "எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றார். இதுகுறித்து அவர் மேலும் விளக்குகையில், "உயிரே பிரச்னையல்ல என்றுதான் இந்தப் பயணத்தை (பிப்ரவரி 7-இல்) எனது சொந்தப் பொறுப்பில் மேற்கொண்டேன். பயணம் எப்படி நடந்தது. யாரால் சென்றேன்-திரும்பினேன் என்பது பற்றியும் எதுவும் கூற விரும்பவில்லை. முதலமைச்சர் எதுவும் கூறிவிடுவாரோ என்றுதான் அதிகம் பயந்தேன். நல்லவேளை! அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோல "ரிஸ்க்' எடுத்துச் செல்லக்கூடாது. இலங்கைத் தமழர் பிரச்னையில் ஆர்வம் இருக்கலாம். வெறியாகிவிடக்கூடாது என்று முதல்வர் சொன்னதாக' அவர் தெரிவித்தார். இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "முதல்வருக்குத் தெரிவிக்காமல், அவரிடம் அனுமதியும் பெறாமல்தான் நான் ஈழத்துக்குச் சென்றேன். எனது இந்தப் பயணம் தவறானதல்ல. ஆனால் தி.மு.கழகத்தின் செயல்முறைகளுக்கு இந்தப் பயணம் ஏற்றதல்ல; அந்த வகையில் எனது பயணம் தவறுதான்' என்றார். இலங்கைப் பிரச்னையில் பிரதமருக்கும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கும் பேச்சு நடந்து கொண்டிருப்பது தனக்குத் தெரியாது என்றார். (நாளிதழ்களில் வந்தவாறு 6-3-1989). விசா இல்லாமல் வை.கோபால்சாமி இலங்கைக்குச் செல்லலாமா? அவரைக் கைது செய்யவேண்டும் என்ற சர்ச்சை பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகைகளிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் "தினசரி' பத்திரிகையில் 9-3-1989 அன்று, க.சச்சிதானந்தன் எழுதிய கட்டுரை இந்த விசாப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் "விசா' நடைமுறை என்பது 1948-லிருந்துதான் வந்தது என்றும், 1983-இல் இலங்கைப் படுகொலையையொட்டி ஏராளமான பேர் அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியபோது, "விசா' முறை பின்பற்றப்படவில்லை என்றும், 1987-இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது, ஹெலிகாப்டரிலும், மிராஜ் விமானங்களிலும், தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர்கள் பலரும் "விசா' நடைமுறை இல்லாமல்தான் செல்கிறார்கள் என்றும், எனவே, விசா இன்றி, வை.கோபால்சாமி போகலாமா என்ற வினாவுக்கே இடமில்லை என்றும் ஈழத் தமிழர் நன்மை பேணப்பட வேண்டுமென்றால் அரசியல்வாதிகட்கும், அரசுப் பணியாளர்களுக்கும் அது பொருந்தாது என்றும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வை.கோபால்சாமி இந்தியா திரும்பியது குறித்து விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் பின்னாளில் கூறியது வருமாறு: ""வை.கோபால்சாமியைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந்தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப் படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும்வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர், நல்லதண்ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்தபோது, அங்கு ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப்பட்டார். ஆனால் அப்போது நடந்த மோதலில் லெப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரிழந்தார் (ஈழமுரசு கட்டுரை).''இந்திய அமைதிப் படையின் சோதனைச் சாவடிகளில் ஒரு சுவரொட்டி ஒட்டியிருக்கும். அந்தச் சுவரொட்டியில் "அப்பாவிக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இத்தகைய சுவரொட்டிகளால், இந்திய அமைதிப் படை மிக நீண்டகாலம் வடக்கு-கிழக்குப் பகுதியில் நின்று நிலைத்து விடுமோ என்ற அச்ச உணர்வு, பிரேமதாசா உள்ளிட்டவர்களுக்கும், ஜேவிபி போன்ற இனத்தீவிரவாத கட்சிகளுக்கும் எழுந்தது. தீவிரத் தமிழர் எதிர்ப்பு - தீவிர சிங்களவர் எதிர்ப்பு இரண்டையும் அரவணைத்துச் செல்லும் ஒரு வழிமுறையைக் கண்டாக வேண்டிய நெருக்கடிக்கு பிரேமதாசா தள்ளப்பட்டார். அதுவே, தமிழர்களைக் காத்தருள வந்ததாகக் கூறும், இந்திய அமைதிப் படையை இலங்கைத் தீவினில் இருந்து வெளியேற்ற உதவும் என்றும் அவர் கண்டார். சிவில் அமைப்புகளில் இந்தியாவின் ஈடுபாட்டை மிகக் குறைந்த அளவிலேனும் கட்டுப்படுத்த வேண்டுமானால், விடுதலைப் புலிகளுடன் சமரசம் என்பது அவரின் முடிவாயிற்று. கிழக்குப் பகுதியில் - கடற்கரையோரமாக ரயில் பாதையை அமைக்கவும் வடக்கிலும் கிழக்கிலும் சில முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் இந்தியா அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பயம் ஆளும் தரப்புக்கு அதிகம் எழுந்தது. "இன்றுள்ள நிலைமையில் "ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈரோஸ் போன்ற இயக்கங்களின் தலைமையில் சில சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிகுறிகள் இவர்களிடம் தென்பட்டதாயினும் இந்தியாவிற்குக் கீழ்ப்படிந்து செல்லும் இவர்களின் செயல் இப்போதில்லாவிடினும் பின்னர் இந்திய மேலாதிக்கம் தொடர்பான தீவிரமான பிரச்னைகளில் சமரசம் செய்துகொண்டு போகும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். அப்பாவிப் பொதுமக்களின் மீது அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இதுகாலம் வரை இவர்கள் எதிர்க்க முன்வராததிலிருந்து இதனைக் கண்டு கொள்ளலாம். எனவே சாத்தியமான மாற்றுத் தீர்வினை இவர்கள் வழங்கப் போவதில்லை' என்று "முறிந்தபனை' நூலில் குறிப்பிட்டவாறே, இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைப் போக்கும் அமைந்து அவர்களை விடுதலைப் புலிகளின் பக்கம் நெருங்கத் தூண்டிற்று. பதவி ஏற்ற நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமதாசா, ஜேவிபி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேசத் தயார் என்றார். இலங்கைத் தீவின் ஒரு பிடி மண்ணையும் இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தமாட்டோம் என்றார். எமது நாட்டின் உள் விவகாரங்களைப் பேசித் தீர்ப்போம் என்றார். எல்லாமே மயக்கம் தரும் வார்த்தைகளாக இருந்தன. அந்த அளவுக்கு ஜேவிபி தென் இலங்கையில் சிங்கள மாவட்டங்களின் கிராமப்புறங்களைத் தனது அதீதமான வன்முறைக் கோட்பாட்டின் மூலம் வளைத்துப் பிடித்து அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்திருந்தது. எங்கு நோக்கினும் ரத்தவெள்ளம்-பிணவாடை. ராணுவம், காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துபோன நிலை. கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்தும் சீர்குலைந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் என்ன? இந்திய அமைதிப் படை வருகைதான். "சிங்கள பூமியில் இந்தியப் படைகளா? கொண்டுவந்தவர்களை விரட்டுவோம்' என்ற ஒற்றைக் கோஷத்துடன் ஜேவிபி தனது "செம்படை'யுடன் கொழும்பை நோக்கி முன்னேறிற்று. இதனைத் தடுத்து நிறுத்த, ஜேவிபியின் ஆயுள்கைதிகள் 1800 பேரை பிரேமதாசா விடுதலை செய்தார். பதிலுக்கு ஜேவிபி இரண்டு மாதங்கள் தங்களது கிளர்ச்சிகளை ஒத்திப் போட்டது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ள, முயன்ற பிரேமதாசா, ஈரோஸ் பாலகுமார், ராஜசிங்கம் முதலானவர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் பாலசிங்கத்தின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள்.

கருத்துக்கள்

We Indians have done enough damage to the poor Eezham Tamils. I think at least now, Our country should help their uplift. Its innappropriate that Sonia is againist 300000 innocent Tamils due to her personal vengence. Even if one agrees with her vendetta, why should these innocemts suffer. Also her husband who was the biggest fool on earth, he should have been tried for his war crimes.

By Romeo
10/11/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக