செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-134: புலிகளுடன் பேச்சுவார்த்தை!



மே 5, 11 என்று தொடங்கி மே 30-ஆம் தேதி வரை எல்லாமாகச் சேர்த்து, 9 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒவ்வொரு சந்திப்பின்போதும் கூட்டறிக்கை ஒன்றும் தயாராகி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது மிக மென்மையாக இந்தியா விமர்சிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டார் அமைச்சர் எ.சி.எஸ். ஹமீது. இவர் உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர் ஆவார். பேச்சுவார்த்தைக்கு இறுதியில் வெளியிடப்படும் அறிக்கைகள் உலகெங்கும் எதிரொலித்த காரணத்தால், அமைதிப்படையின் பங்கு, பணி குறித்த பிம்பம் சிறிது சிறிதாகச் சேதமுற்றது.
இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பல்வேறு அமர்வுகளிலும் விடுதலைப் புலிகள் தரப்பில், பாலசிங்கம் வழியாக, எடுத்து வைத்த வாதங்களில் குறிப்பிடத்தகுந்தது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
""அமைதி காக்கும் நடவடிக்கை என்றால் என்னவென்று, தெளிவான ஐ.நா. கருத்துருவாக்கம் ஒன்று உள்ளது. முரண்பாட்டு மோதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அமைதியை முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் தரங்களும் உள்ளன. அமைதி காக்கும் ராணுவமானது, முரண்பாடு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு அல்லது கூடுதலான பிரிவுகளுக்கிடையே, பக்கம் சாராது நிற்பது முக்கியமானது. அமைதி காக்கும் நடவடிக்கையின் முக்கிய பணி என்னவென்றால், மோதல் இடம்பெறும் பகுதிகளில் அமைதியைப் பேண அல்லது மீண்டும் நிறுவ உதவுவது. அமைதி காக்கும் நடவடிக்கை என்பது மோதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.
ஐ.நா. மரபிலே பார்த்தால், அமைதிப்படையானது மோதல் நிலை விரிவடையாது தடுத்து, அமைதிக்கான சுமூகச் சூழலை ஏற்படுத்த ஆணைபெற்று இயங்குவது. அமைதி நடவடிக்கையிலே ஈடுபடும் ராணுவ உறுப்பினர்களுக்கு வலிந்து திணிக்கும் அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்காப்பு தவிர்த்த வேறு எதற்கும் ராணுவ உறுப்பினர்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் இலகுவான பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே அவர்கள் தரித்திருப்பார்கள்.
போராட்டத்தில் சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பினரின் ராணுவச் சமநிலை, பாதிக்கப்படும் வகையில் அமைதிப்படை நடந்து கொள்ளக் கூடாது. இவையே அமைதி காப்புச் செயற்பாட்டை வழிநடத்தும் அடிப்படை வழிமுறைகளும் கோட்பாடுகளுமாகும். அனைத்துலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இவை.
இந்த வழிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக இந்திய அமைதிப்படை இல்லை. தொடக்கத்தில், இந்திய - இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே, இந்திய ராணுவப் பிரிவு ஒன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடக்கும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதை மேற்பார்வை செய்வதும், அமைதியைப் பேணுவதுமே அதன் பணியாக இருந்தது.
ஆனால், விரைவிலேயே அமைதிப்படை முற்றிலும் வேறுபாடான நிலையில் பங்காற்றத் தொடங்கியது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினருடன், அதாவது விடுதலைப் புலிகளுடன் ஆயுதபாணியாக விரைவிலேயே மோதத் தொடங்கியது.
ஆயுத மோதல், ஆயுதங்களைக் களையும் முயற்சியாகவே முதலில் கருதப்பட்ட போதிலும், விரைவில் இந்தியப் படைகளுக்கும் புலிகளின் கெரில்லாப் படையினருக்கும் இடையே முழுமையானப் போராக வடிவெடுத்தது.
கடந்த 20 மாதங்களாக போர் நடந்து கொண்டிருப்பதோடு, போரில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தியப் படையினரும் விடுதலைப் புலிகளுமே.
நடுநிலை நின்று அமைதி காக்க, மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர்கள் தாமே நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட்டிருந்ததால், அமைதி காக்கும் முயற்சியின் தன்மையே கேள்விக்கு உரியதாகிவிட்டது.
தமிழ்ப் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அமைதிப்படையை இனிமேலும் நடுநிலைப்படை என்று கொள்ள முடியாது. அது போரைக் கட்டுப்படுத்தவும் இல்லை; அமைதியைப் பேணவும் இல்லை. போராட்டம் தீவிரமடைவதைத் தடுப்பதற்குப் பதிலாக, வன்செயலையும் போரையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. அமைதிப்படை ஆட்சி அதிகாரங்களைச் சுவீகரித்துக் கொண்டு, இந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரசன்னமாகி இருக்கும் அமைதி காக்கும் படை, ஓர் ஆக்கிரமிப்பு என்பது விடுதலைப் புலிகளின் தீர்க்கமான முடிவாகும்'' (சுதந்திர வேட்கை -பக். 291-292).
இது போன்ற கருத்துகள் வெளிவரவும் ராஜீவ் காந்தி - பிரேமதாசா இடையே மோதல் போக்கு தலைதூக்கிற்று. தம்மை விமர்சிக்க விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பளித்து அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த முனைவதாகவும் ராஜீவ் கண்டார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
கொழும்பிலுள்ள இந்தியாவுக்கான தூதுவர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ""ஸ்ரீலங்காவில் உள்ள அமைதிப்படையின் பங்கும் பணியும் பற்றி, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஓர் அணியின் கருத்தை ஸ்ரீலங்கா அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதை இந்தியத் தூதுவரகம் கருத்தில் கொண்டுள்ளது. அமைதிப்படை இந்த நாட்டுக்கு வந்த சூழ்நிலை பற்றியோ, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசுகளினால் அதனிடம் கூட்டாக ஒப்படைக்கப்பட்ட கடமைகள் பற்றியோ, அதன் பணியில் உள்ள இடையூறுகள் பற்றியோ, ஸ்ரீலங்காவின் ஐக்கியம் மற்றும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் புரிந்த தியாகங்கள் பற்றியோ அறிக்கைகள் குறிப்பிடவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கம் அவதூறுப் பிரசாரமாக இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும் வன்செயலைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதாக அதன் இலக்கு இருக்க வேண்டும் என்றே இந்தியத் தூதரகம் கருதுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர்களது அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் சார்பில் இந்தியத் தூதுவரக அறிக்கைக்கு பதிலளிக்க விரும்பினர். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர், ஆயுதங்களை ஒப்படைக்க 72 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது. இன்று 20 மாதங்கள் ஆன நிலையிலும் அதே போராட்டம் நடைபெறுகிறது. ஏராளமான தமிழ் மக்கள் உயிர் துறந்ததை ஸ்ரீலங்கா அரசு கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் அமையும் ராணுவப்படை எதற்காக என்றும் புலிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
பேச்சுவார்த்தைகளில் அரசின் பிரதிநிதிகளாக அதிபரின் செயலாளர் கே.எச்.ஜே. விஜயதாசா, வெளியுறவுச் செயலாளர் பெர்னார்ட் திலகரட்ன, அதிபரின் ஆலோசகர் பிரட்மன் வீரக்கூன், பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் சிறில் ரணதுங்க, பாதுகாப்புச் செயலாளர் டபிள்யூ.டி. ஜெயசிங்கா, தேர்தல் ஆணையாளர் ஃபீலிக்ஸ் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள் குழுவில் பிரதான வழிநடத்துனராக எ.சி.எஸ். ஹமீதும், இதில் கலந்துகொள்ளும் அமைச்சர்களாக வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா, கைத்தொழில் அமைச்சர் ரனில் விக்ரமசிங்கா, வீட்டுவசதித் துறை அமைச்சர் சிறீசேன கூரே, முதலில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மே 18-ஆம் நாள் நடந்த கூட்டத்தில் மேலும் இரு அமைச்சர்களாக யூ.பி. விஜேக்கூன் (பொது நிர்வாகம், மாகாண சபை, உள்நாட்டு அலுவல் துறைகள்) பி.தயாதரன் (நிலம், நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி துறைகள்) கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மே 23, 27 தேதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து முடிவுக்கு வருவது குறித்துப் பேசப்பட்ட நிலையில், இறுதியில், நிரந்தரப் போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதற்கு முன்பு புலிகளின் பேச்சாளர்கள் தாங்கள் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதனையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மே 30-ஆம் தேதி, ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுப் பகுதிக்குப் புறப்பட்டனர்.


நாளை: பிரபாகரனுடன் சந்திப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக