ஞாயிறு, 11 அக்டோபர், 2009

அதிர்வின் ஆசிரிய பீடம்: 10.10.2009

இறுதி யுத்தத்தில் ஏற்படப்போகும் பேரழிவைத் தடுக்க பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது தற்போது சேறு பூசப்பட்டுள்ளது. இரு இனத்தின் மீது ஒட்டுமொத்தமாக ஒரு கறையை பிரித்தானிய பத்திரிகைகள் திணித்திருக்கின்றன. பரமேஸ்வரன் என்ற தனி மனிதரின் செயலை கொச்சைப்படுத்தி அதன் மூலம் தமிழர்களது போராட்டம் ஒரு நியாமற்ற போராட்டம், ஒரு நேர்மையற்ற போராட்டம் என உலகிற்கு பறைசாற்ற முற்படுகின்ற சக்திகள் யார் என நாம் அடையாளம் காணவேண்டும்.

இவ்வளவு நாளாக இதனை மறைத்துவைத்து, 17ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்று ஆரம்பிக்க உள்ள வேளையில் இச் செய்திகள் ஏன் கசியவேண்டும். சுமார் 7.1 மில்லியன் பவுண்டுகள் தமிழர்களால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அரசு, இங்குள்ள 3 லட்சம் தமிழர்களும் உழைத்து கட்டுகின்ற வரிப்பணத்தைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை. அதுமட்டுமா பெரும்பாலான தமிழர்கள் பிரித்தானியாவில் சொந்த வியாபாரஸ்தலங்களைக் கொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியாதா? அல்லது ஒவ்வொரு தமிழ் வர்த்தகர்களும் எவ்வளவு வரிப்பணம் கட்டுகிறார்கள் என்று பிரித்தானிய அரசிற்குத் தெரியாதா ?

ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது ஏன் இந்தப்பாகுபாடு. பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் உணமையாக சாப்பிட்டார் என ஒரு செய்தியைக் கிளப்பி அதன் மூலம் எமது நியாயமான போராட்டத்தை முழுமையாக கொச்சைப்படுத்தியுள்ளது பிரித்தானிய பத்திரிகைகள். குறிப்பாக டெய்லி மெயில் பத்திரிகையின் உயர் பீடத்தில் சிங்களவர்கள் பணியாற்றுவது யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஸ்கொட்லன் யாட் பொலிசார் கூறியிருப்பதாக இச் செய்தி வெளியாகியிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.

இது குறித்து இன்றுவரை ஸ்கொட்லன் யாட் பொலிசார் எதுவும் கூறவில்லை. எனினும் நாம் இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமுடியாது. பிரித்தானியா வாழ் ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஒரு தார்மீகக் கடமையுள்ளது. அது என்னவெனில் எம்மீது பூசப்பட்டுள்ள சேற்றைக் கழுவியாகவேண்டும். முதலில் இந்தச் சிக்கலை நாம் காலம் தாழ்த்தாது கையாளவேன்டும். இதனை இழுத்தடித்து அல்லது ஆறப்போடுவதன் மூலமாக நாம் குற்றவாளிகள் ஆகிவிடுவோம் என்பதை சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.

இப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தமது மவுனத்தைக் கலைத்து, உடனடியாக இதில் தலையிட்டு ஒரு நிலைப்பாட்டை எடுப்பது நல்லது. தவறுகள் இருந்தால் அதனைத் தனிமைப்படுத்தி அதற்கும் எமது பிரித்தானியப் போராட்டத்திற்கும் எந்தவகையில் தொடர்பு இருந்தது என்பதை விளக்கி, எமது போராட்டத்தின் உன்னதத்தை உலகறியச் செய்யவேண்டும். தவறுகள் இல்லை என்ற பட்சத்தில் உடனடியாக இதன் காரணகர்த்தாக்களை கண்டறிந்து, பிரித்தானிய மக்களுக்கு அவர்களை இனம்காட்டவேண்டும்.

அத்துடன் நின்றுவிடாமல், இதற்குப் பொறுப்பான ஊடகங்கள் பகிரங்கமாக தமிழர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும், இனிவரும் காலங்களில் தமிழ்ர்கள் குறித்த செய்திகளை அவதானத்துடன் தாம் கையாள்வோம் என எழுத்துமூலம் உறுதியளிக்கவேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நாம் பிரித்தானியாவில் மேற்கொண்டாலேயே எம் மீதுள்ள கறையைப் போக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக