இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.
கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?
பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.
கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?
பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.
கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?
பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.
உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.
கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?
பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.
கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?
பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?
கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?
பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?
கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?
பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.
கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?
பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.
கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?
பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?
பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.
கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .
பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார். E-mail to a friend
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக