வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கை இதழ் ஆசிரியர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

இலங்கை பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

First Published : 04 Aug 2011 10:55:03 AM IST


சென்னை, ஆக. 4: இலங்கையில் உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக் கிழமை அலுவலகத்தில் பணி முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்பொழுது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளை முழுவதுமாக நெரிக்கப்பட்டுள்ளது. இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ராஜபட்சவின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலை யார் எதிரொலித்தாலும் எந்த வழியில் எவர் ஒருவர் போராடினாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உயிருக்கு சிறிதும் பாதுகாப்பு கிடையாது என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட படுதோல்வி பொறுக்க முடியாமல் ஆளும் தரப்பு இத்தாக்குதல் மூலம் வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறது.   இதுவரை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் ராஜபட்சவின் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வெறித்தாக்குதலுக்கு இரையாகி உள்ளனர். அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன. ஆனால் சிங்கள இனவெறி அரசோ உலகின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக விசாரணை என்ற பெயரில் சிலரைக் கைது செய்து நாடகமாடியிருக்கிறது என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக