செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

பார்வையாளர் கட்டண வரவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சாதனை

கோடிக்கணக்கில் வருவாய் பெற்றுமா இரவு நேரங்களில் விளக்கொளி வழங்காமல் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகிறார்கள்?வருவாயில் மட்டும் குறியாக இராமல் சுற்றுலாப்பயணிகளின் நலனிலும் கருத்து செலுத்துங்கள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பார்வையாளர் கட்டண வசூலில் 
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சாதனை

First Published : 02 Aug 2011 01:18:26 AM IST


செங்கல்பட்டு, ஆக. 1: தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், பார்வையாளர் கட்டண வசூலில் 2010-ல் ரூ. 2.73 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் 432 புராதனச் சின்னங்கள் உள்ளன. இவை அந்தத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பல்லவர் கால கலை நயத்துடன் காண்போரை வியக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில், சென்னை கோட்டை அருங்காட்சியகம், செஞ்சிக்கோட்டை, சித்தன்னவாசல் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் தொல் பொருள் பாதுகாப்புத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2010-ல் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வசூலில் ரூ 2.73 கோடியை எட்டிப்பிடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. செஞ்சிக்கோட்டை ரூ. 12. 47 லட்சத்தை பெற்றுத் தந்து 2-ம் இடத்தையும், சென்னை கோட்டை அருங்காட்சியகம் ரூ. 4.36 லடசத்தை பெற்று 3-ம் இடத்தையும், சித்தன்னவாசல் ரூ. 1.24 லட்சத்தை பெற்று 4-ம் இடத்தையும் பெற்றுள்ளன.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் 2009-ல் பார்வையாளர் கட்டண வசூல் மூலம் ரூ. 2.53 கோடியை ஈட்டியது. 2010-ல் ரு. 20 லட்சம் கூடுதலாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இரண்டும் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிப்பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலை சுற்றிப்பார்க்க பார்வையாளர் கட்டணம் ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் பல்லவர் கால சின்னங்களாக விளங்கக் கூடிய ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதான சின்னங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் கண்களையும் கருத்தையும் ஈர்ககும் வகையில் உள்ளன.கண்ணைக்கவரும் கடற்கரைக் கோயிலை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும், இதன் மூலம் மேலும் பார்வையாளர் வருகையை அதிகரிப்பதிலும் தொல்பொருள் பாதுகாப்பு துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

1 கருத்து: