சாந்தலிங்க ராமசாமி அடிகளார்
First Published : 31 Jul 2011 02:16:58 AM IST
கவிஞர் சிற்பி பவள விழாவில் பேசுகிறார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். உடன் (இடமிருந்து) சிற்பியின் மனைவி பா.ரங்கநாயகி, கவிஞர் சிற்பி, பழன
கோவை, ஜூலை 30: தமிழ் மரபு மீண்டும் தழைத்தோங்கச் செய்ய வேண்டும் என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் கூறினார்.கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பவள விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியது: இந்தப் பிறவிவை மதித்து இப்பிறப்பில் எய்த வேண்டிய நலன்களைப் பெற்ற சிறப்புடையவராக கவிஞர் சிற்பி தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நமக்கு கிடைத்திருக்கும் இலக்கியங்களில் முதல் இலக்கியம் பத்துப்பாட்டு. அதில், முதலில் வரும் திருமுருகாற்றுப்படையில், உலகமே முதல் சொல்லாகும். எல்லை வகுத்துக்கொள்ளாமல் உலகளாவிய சிந்தனையைப் படைக்கும் திறன் தமிழ் கவிஞர்களுக்கு என்றும் உண்டு.சான்றோர் கவிதைகள் எளிமையாகவும், அதேசமயம் ஆழமாகவும் இருக்கும். கவிஞர் சிற்பி, சுவைமிக்க கவிதைகளாக, திறன் மிக்க கவிதைகளாக, தமிழ் மரபு கவிதைகளாக தந்துகொண்டிருக்கிற சான்றோராக விளங்குகிறார். தூய்மை நோக்கியல் கவிதைகளை சிற்பியின் கவிதைகளில் பார்க்கலாம். சிறந்த கவிஞர்களைப் பெற்றதாக கொங்கு நாடு இருக்கிறது. நான்மணி மாலையில் புலவர் சிவபிரகாசர், சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய நால்வர் பெருமக்கள் குறித்து விளங்கியிருக்கிறார். நம்மால் எட்ட முடியாத செயல்களை ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் செயல்படுத்தியிருக்கின்றனர். அவர்களை வழிகாட்டிகளாக ஏற்று நாம் செயல்படவேண்டும். திருநாவுக்கரசர் தமிழ்ப் போராளியாக சமுதாய மேம்பாட்டுக்கு வழிகாட்டியவர். இறைவனின் தோழனாக சுந்தரர் விளங்கினார். சாம்பலைப் பெண்ணாக மாற்றினார் ஞானசம்பந்தர். கல்லை தெப்பமாக மிதக்கவிட்டவர் திருநாவுக்கரசர், முதலை வாயில் இருந்து பிள்ளை உயிருடன் மீட்டவர் சுந்தரர். இத்தகைய வல்லமை மிக்கவர்கள் தமிழால் இறைவனுக்கு தொண்டாற்றியவர்கள். இவர்களின் தமிழைக் கேட்க இறைவனே காசு கொடுத்திருக்கிறார். அருமையான தமிழால் பல்வேறு பணிகளை நாம் செய்ய வேண்டும். இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு சரிவு ஏற்பட்டு புறக்கணிக்கப்பட்டது. தமிழை மீண்டும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். தமிழ் மரபு மீண்டும் தழைத்தோங்கச் செய்ய வேண்டும். திருமணங்கள் தமிழில் நடைபெற வேண்டும் என்ற உணர்வு பரவி வருகிறது. வழிபாட்டு முறை, மக்களின் வாழ்வியல் முறையில் தமிழ் மரபுகளை இடம்பெறச் செய்ய வேண்டும். அவ்வழியில் கவிதை மரபு தழைத்தோங்க சிற்பி துணையாக இருக்கிறார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக