ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்
சீமான்
பதிவு செய்த நாள் : August 1, 2011
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே அவர்களை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்த பின்னர், தமிழக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட, அவர்கள் துனி என்ற இடத்திற்குச் சென்று ஈழத் தமிழ் அகதிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர். அப்போது விசாரணை என்ற பெயரில் – அவர்கள் கனடாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டற்காக அந்த அகதிகள் பலரை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல் அதிகாரிகள் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர்களோடு இருந்தவர்கள் இந்த தகவல்களையெல்லாம் எனக்கு அழுதபடியே தெரிவித்தனர்.
இன்று காலை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களை, அவர்கள் ஏற்கனவே இருந்த முகாமிற்கு மீண்டும் கொண்டு சென்று ஒப்படைக்கும் காவல் துறையினர், தங்களை மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. “எங்களை அடித்துத் துன்புறுத்தாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் அண்ணா” என்று கதறுகின்றனர். ‘முகாம்களுக்குத் திரும்பிய பிறகு உங்களுக்கு இருக்கிறது கச்சேரி’ என்று அவர்களிடம் க்யூ பிரிவு அதிகாரிகள் கூறியதே அவர்கள் இப்படி அச்சப்படக் காரணமாகும். எனவே இதில் தமிழக முதல்வர் தலையிட்டு, அவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பல ஆண்டுக் காலமாக தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து மிரட்டுவது, விசாரணை என்ற பெயரில் இழிவு படுத்துவது, பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் இவர்கள், “அங்க ராஜபக்ச செஞ்சது போதாதா? நாங்களும் செய்யணுமா?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் மனதைக் காயப்படுத்தியுள்ளனர். இப்படியெல்லாம் அவர்களை துன்புறுத்த, இழிவுபடுத்த என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விடுதலைக்காக போராடுவது குற்றம் என்று தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு கருதுகிறதா? இல்லை, உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தது குற்றம் என்று கூறுகிறதா? புரியவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஈழத் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக முதல்வரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், க்யூ பிரிவினரின் அச்சுறுத்தல் மட்டும் மாறாமல் தொடர்கிறது. “இங்கே வந்து இவ்வளவு அவமானப்படுவதை விட நாங்கள் அங்கேயே இருந்து செத்துத் தொலைத்திருக்கலாம்” என்று அவர்கள் நொந்து கூறுகிற அளவிற்கு அவர்களை க்யூ பிரிவினர் துன்புறுத்துகின்றனர்.
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தப்பிப் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இங்கும் அதே கொடுமை தொடர்கிறது என்றால், பிறகு ஏன் அவர்கள் இங்கிருந்து வேறு ஒரு நாட்டிற்குத் தப்பிச் செல்ல மாட்டார்கள்? ஈழத் தமிழினத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தாய் தமிழகத்தின் கடமையல்லவா? எனவே இப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைத்திட உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இதேபோன்று ஐயத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுக் காலம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களிலும் இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தமிழின கட்சிகளும், அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் இதற்கு முன்பு இருந்த அரசு சற்றும் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்கள், இங்குள்ள முகாம்களில் வாழும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடி, அதில் சட்டத்திற்குப் புறம்பாக சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக