வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இலங்கைச் சிக்கல் குறித்த அறிக்கையைத் தேடிய அமைச்சர்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறித்துத் தொலைத்தவர்களுக்கு அறிக்கையைத் தொலைத்தல் மிகவும் எளிய செயலதானே! காலம் ஒரு நாள் மாறும்! கொலைக்குற்றவாளிகளுக்கும் உடந்தையர்களுக்கும் கடுந்தண்டனை தரும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையை தேடிய அமைச்சர்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
First Published : 05 Aug 2011 03:52:17 AM IST


புது தில்லி, ஆக. 4: மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டிய இலங்கைப் பிரச்னை தொடர்பான அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தேடிக் கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்குழுக்களின் அறிக்கைகளையும், அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான அறிக்கைகளையும் தாக்கல் செய்யுமாறு அவைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டார்.அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அழைத்து, இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.அப்போது அமைச்சர் அவையில் இல்லை. சிறிது நேரம் கழித்து அவைக்கு வந்த அவர், இலங்கைப் பிரச்னை தொடர்பான அறிக்கையைத் தேட தொடங்கினார். நீண்ட நேரம் அவர் தேடியதால், அவருக்கு உதவும் வகையில் மக்களவைச் செயலரின் உதவியாளர், அமைச்சர் கிருஷ்ணாவுக்கு அருகில் வந்து உதவ முயன்றார்.  இதனிடையே அமைச்சரின் உதவியாளர் அந்த அறிக்கையை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஏற்பட்ட கால தாமதத்துக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.இந்த அமளிக்கிடையே, அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைப் பிரச்னை குறித்த அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார். பின்னர், வெளியுறவுத் துறை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி அமைச்சரை மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.  அதற்கு, தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை இருக்கையில் அமரும்படி மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டதன்பேரில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமைதி காத்தனர்.  ஆனால், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஆட்சேபக் குரல் எழுப்பினர். இதனால், மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக