வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

வெட்கக்கேடு! எங்கோ நடைபெறும் தாக்குதல்குறித்துப்பேசி மனிதநேயராக நடிக்கத் தெரிகிறது. தனக்கு அடுத்து உள்ள நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்ற , நடைபெறும் இனப்படு கொலைகள் குறித்து வாயைத்திறக்க முடியவில்லை! 
வேதனையுடன்   
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பொதுமக்கள் மீது தாக்குதல்: 
சிரியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

First Published : 05 Aug 2011 02:00:58 AM IST


நியூயார்க், ஆக. 4: பொதுமக்கள் மீது தாக்குல் நடத்திவரும் சிரியா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.  அந்த சபையில் பேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதருமான ஹர்தீப்சிங் புரி, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு ராணுவத்தை ஏவி விட்டுள்ளது. கிளர்ச்சி நடத்திவரும் பொதுமக்கள் மீது ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹேமா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவ டாங்கிகள், பெரிய இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கடுமையான ஆயுதங்களை சிரியா பயன்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 120 பேர் இறந்துள்ளனர்.  வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியை சுழற்சி அடிப்படையில் இந்தியா அடைந்துள்ளது. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தலைமை உரையை ஹர்தீப்சிங் புரி வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிரியா நாட்டு அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். போராட்டம் நடத்திவரும் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சி, வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்பி மக்கள் அவர்களது அன்றாட பணிகள் இடையூறின்றி நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கான முயற்சிகளை அந்நாடு எடுக்க வேண்டும். இதன்மூலம் சிரியா ஜனநாயக பாதைக்குத் திரும்ப வழி ஏற்படும் என்றார்.  சிரியாவில் மறுவாழ்வுப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டது.  சிரியாவில் அதிகரித்துவரும் கிளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து இந்த அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக