திங்கள், 1 ஆகஸ்ட், 2011

ஊழலற்ற அரசியலை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: தமிழருவி மணியன்

ஊழலற்ற அரசியலை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: தமிழருவி மணியன்

First Published : 01 Aug 2011 10:38:29 AM IST


குடியாத்தம், ஜூலை 31: அரசியல் ஒரு சாக்கடை என்று வேதாந்தம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, ஊழலற்ற அரசியலை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என தமிழருவி மணியன் கூறினார்.
 குடியாத்தம் காமராஜர் கல்வி பண்பாட்டு மன்றம் சார்பில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், அவர் பேசியது:
 கலப்படமற்ற உணவுப் பொருள்கள் வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோமோ, அவ்வாறே அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கைப் பொத்திக் கொண்டு போவதைத் தவிர்த்து, ஒவ்வொரு இளைஞரும் கையில் ஆயுதத்துடன் புறப்பட்டால் ஊழல் அரசியல் அறவே ஒழிந்து போகும்.
 இளைஞர்கள் எழுச்சி பெற்றால் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவர்கள் போட்டுக் கொண்டுள்ள முகமூடிகளை கிழித்தெரியலாம்.
 இக்கால இளைஞர்கள் காந்தி, காமராஜர், ஓமந்தூர் ராமசாமி செட்டியார், குமாரசாமிராஜா, பெரியார் போன்றோரின் வரலாறுகளை திரும்பிப் பார்த்தால் இதற்கு விடை தானாக கிடைக்கும்.
 நாம் வரலாறுகளை திருப்பிப் பார்ப்பதில்லை. நேற்று இருந்தவன், இன்று இருப்பவன், நாளை பிறப்பவன் என 3 நிலைகளில் மனித வரலாறுகளை நாம் நோக்க வேண்டும். நாம் நேற்று நடந்ததையும் பார்ப்பதில்லை, நாளை பற்றியும் சிந்திப்பத்தில்லை.
 யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள பேச்சு.
 யாம் பெறாத இன்பம் (கல்வி) தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் பாடுபட்டவர் காமராஜர்.
 ஏழையாக இருப்பது சிறுமையல்ல. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் உடமையற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம்தான் உண்மையான அன்பு இருக்கும்.
 தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவிட்டு, சாகும்போது 10 வேட்டி, சட்டை, ரூ. 63 மட்டுமே தனது உடமையாக வைத்து விட்டு போனவர் காமராஜர்.
 சக மனிதனின் துயர்துடைக்க உன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியவர் காமராஜர். பொய்யாலும், வன்முறையாலும் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியவர் காமராஜர் என்றார் தமிழருவி மணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக