First Published : 04 Aug 2011 04:26:07 AM IST
Last Updated :
புது தில்லி, ஆக. 3: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் சடங்கு போல் ஆகிவிட்டது என்று மக்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்தபின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை மக்களவை விதிமுறை பிரிவு 184-ன் கீழ் கொண்டு வந்து விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் வகையில் பொது விநியோக திட்டம் (யூனிவர்சல் பிடிஎஸ்) சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். திமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் நேரடியாகப் பயன் பெறும் வகையிலும், இடைத் தரகர்களை அறவே ஒழிக்கும் வகையிலும் உழவர் சந்தை தொடங்கி நடத்தப்பட்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார். அத்தியாவசியப் பொருள்களின் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். விலைவாசி உயர்வு குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப் பட்டு வருவதாகவும், அந்த விவாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார். எனவே அரசு இதை ஒரு சடங்காக மட்டும் கருதாமல் விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து தரப்பினருக்குமான பொது விநியோக திட்டம் மற்றும் உழவர் சந்தைகளை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக