வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இலங்கையில் மனித உரிமை மீறல்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

பாவம்! இனப்படுகொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் எப்படி அது குறித்து அவர்களிடம் பேசியிருக்க முடியும்! இருக்கட்டும்! இருக்கட்டும்! இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். வட்டியும் முதலுமாக இரு சாராருக்கும் தண்டனைகள் தருவான். என்றாலும் நாம் வாளாவிருக்கக்கூடாது. இனப்படுகொலை புரிந்த மனிதநேயமற்ற  கொடும்பிறவிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் பரப்புரையைத் தொடர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

First Published : 05 Aug 2011 04:00:47 AM IST


புது தில்லி, ஆக. 4: இலங்கையில் போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார்.  இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரித்த ஐ.நா. குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டதா என்று மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்க தாக்குர் கேள்வி எழுப்பி இருந்தார்.  அதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரிணீத் கௌர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம்:  இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கை 26.4.2011 வெளியிடப்பட்டது.  இலங்கைப் போரின்போது கடைசியாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து அறிந்திடும்  வகையில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மூலம் அந்தக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையின் மீது சில நாடுகள் மூலம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கேள்வி எழுப்பியுள்ளன.  தில்லிக்கு கடந்த மே மாதம் வந்த இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும், கொழும்பில் இந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற "டிராய்கா' கூட்டத்தின்போதும் ஐ.நா. குழு அறிக்கையின் மீதான இலங்கை அரசின் கருத்துகளை இந்தியா கேட்டறிந்தது.  இந்தியாவுக்கு இந்த ஆண்டு மே மாதம் இலங்கை வெளியுறவு அமைச்சர் வந்திருந்தபோது, இந்திய வெளியுறவு அமைச்சர் சேர்ந்து கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ""பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான குறைகளைத் தீர்க்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் சகஜநிலையைக் கொண்டு வர வேண்டும்; மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான புகாரின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; அவசரநிலை சட்டத்தை முன்கூட்டிய வாபஸ் பெறுதல், முகாம்களில் உள்ளவர்கள் அவர்கள் வசிப்பிடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுதல் உள்பட, மீள்குடியேற்றம் மற்றும் நம்பகமான மறுசமரசம் ஆகியவற்றை உறுதிப்படுத்த இலங்கை அரசால் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக